Praggnanandha: `எப்படியிருந்தாலும் டைட்டில் நம்ம ஊருக்கு..- குகேஷை வீழ்த்தி சாம்பியனான பிரக்ஞானந்தா

சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷை, தமிழகத்தைச் சேர்ந்த சக வீரர் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தில் தற்போது நடந்த டாடா ஸ்டீல் மாஸ்டர் செஸ் மாஸ்டர் போட்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

முதல் 12 சுற்றுகள் முடிவில் 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்த இருவரும் 13-வது சுற்றில், தங்களின் போட்டியாளர்களிடம் தோல்வியுற்றனர். இதனால், சாம்பியனைத் தீர்மானிக்க இருவரும் நேருக்கு நேர் டை-பிரேக்கரில் (tie-break) மோதும் சூழல் உருவானது.

Gukesh over-presses in an equal endgame and loses a piece! Praggnanandhaa wins the #TataSteelChess Masters! pic.twitter.com/MHkOZ6vnnd

— chess24 (@chess24com) February 2, 2025

இதில், முதல் போட்டியை குகேஷ் வென்றபோதும், அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் பிரக்ஞானந்தா வென்று குகேஷுக்கு அதிர்ச்சி கொடுத்தார். குகேஷை பிரக்ஞானந்தா வீழ்த்தியதும், அப்போது குகேஷ் தனது விரக்தியை வெளிப்படுத்தியதும் வீடியோவாக சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

Congratulations to our Chess Star @rpraggnachess for emerging as the champion of @tatasteelchess 2025! This amazing achievement highlights his talent, dedication, and hard work. His victory at such a prestigious event is a true reflection of his skill and determination.

I also… pic.twitter.com/FnL3uXDBNh

— Udhay (@Udhaystalin) February 3, 2025

மேலும், பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றியைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ``டாடா ஸ்டீல் செஸ் 2025-ன் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். இந்த சாதனை அவரின் திறமை, அர்ப்பணிப்பு, கடின உழைப்பை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட குகேஷுக்கும் வாழ்த்துகள். இருவரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையத்தின் எலைட் (SDATs ELITE) திட்ட வீரர்களாக இருப்பதில் தமிழ்நாடு பெருமிதம் கொள்கிறது." என்று எக்ஸ் தளத்தில் பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில், பிரக்ஞானந்தா இன்று காலையில் சென்னை விமான நிலையம் வந்திறங்கினார். அப்போது, உற்சாக வரவேற்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, `` டாடா ஸ்டீல் மாஸ்டர் செஸ் மாஸ்டர் போட்டி, 85 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் மதிப்புமிக்க போட்டி. இதில், நிறைய முன்னாள் உலக செஸ் சாம்பியன்களெல்லாம் விளையாடியிருக்கிறார்கள். அத்தகைய போட்டியில் வென்றது பெருமையாக இருக்கிறது. 2024-ம் ஆண்டின் பிற்பாதியில் நான் சரியாக விளையாடவில்லை. இப்போது, 2025-ல் முதல் தொடரிலேயே வெற்றிபெற்றிருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

பிரக்ஞானந்தா

இந்தத் தொடருக்காக நானும், எனது பயிற்சியாளரும் நிறைய பயிற்சி எடுத்திருந்தோம். இந்தத் தொடர் உத்வேகமாக இருந்தது. இறுதிச் சுற்று ரொம்ப பதட்டமாக இருந்தது. இரண்டு பேருமே வலுவான போட்டியாளர்களுடன் விளையாடினோம். ஆரம்பத்திலேயே சிரமத்தில் மாட்டிக்கொண்டோம். பிறகு, டை-பிரேக்கரில் வென்றது சந்தோஷம். இறுதியில் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு இரண்டு தமிழ்நாட்டு வீரர்களிடம்தான் வந்தது. எப்படியிருந்தாலும் இந்த சாம்பியன் பட்டம் நம்ம ஊருக்குதான் வந்திருக்கும்." என்று கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.