BB Tamil 8 Day 76: அன்ஷிதாவிடம் அதிரடி விசாரணை; அடுத்தது முத்துவுக்கா?- `வாத்தியார் விசே
‘அடுத்த வாரத்துல இருந்து ஃபயர் மோட் ஆன்’ என்று கடந்த வாரத்தில் பவித்ரா சொன்னார்.
அவர் சொன்னதைச் செய்கிறாரோ, இல்லையோ, விஜய் சேதுபதி வாரத்திற்கு வாரம் தனது ஃபயர் மோடை அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறார். எனவே இந்த எபிசோடில் ரோஸ்டிங் சம்பவங்கள் சிறப்பாக நடைபெற்றன. அவர் அடித்த அடியில் அன்ஷிதா உள்ளிட்ட பலரது முகங்கள் இருண்டன.
எபிசோடு சுவாரசியமாக சென்றாலும் தனது ‘உக்காருங்க’ அணுகுமுறையை விசே மாற்றிக் கொள்ளலாம் என்று நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - 76
‘பிக் பாஸ்’ என்கிற இந்த கேம் ஷோவை தமிழில் எட்டு வருடங்களாக நாம் பார்த்து வருகிறோம். பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி இது நமக்குத் தந்தது என்ன? இதைப் பற்றி நிறைய பேசியிருந்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் நிகழவில்லை.
இந்த நிகழ்ச்சியை வைத்து சமூக வலைத்தளங்களில் ஆராய்ச்சி செய்து வம்பு பேசி விமர்சனங்கள் செய்வதெல்லாம் ஓகே. ஆனால் அவை பெரும்பாலும் எப்படியிருக்கின்றன தெரியுமா? ‘இவன் அவனைக் கிள்ளிட்டான்.. அவன் இவனை அடிச்சிட்டான். இவன் எனக்குப் பிடிச்சவன்.. ஆகவே இவன் செய்யறதெல்லாம் சரி.. இவனை எனக்கு ஆகாது. எனவே இவன் செய்யறதெல்லாம் தப்பு..” என்கிற ரீதியில் போட்டியாளர்களை குறை சொல்கிற அளவிலேயே நின்று விடுகின்றன.
மாறாக, ‘இந்தப் போட்டியாளர் தவறு செய்கிற போது என் முகத்தையே நான் அதில் பார்த்தேன். என்னுடைய கடந்த கால அனுபவத்தை அது நினைவுப்படுத்தி என் மனச்சாட்சியை உலுக்கியது. இனி அந்தத் தவறை என் வாழ்க்கையில் செய்யாமல் இருக்க முயல்வேன். இந்த ஷோவில் ஒருவர் கோபம் அடையும் போதோ, புறணி பேசும் போதோ, நம்பிக்கைத் துரோகம் செய்யும் போதோ அது எத்தனை விகாரமாக இருக்கிறது என்பதைக் காட்சி வடிவில் நன்றாகப் பார்க்க முடிகிறது. நான் செய்வதெல்லாம் காமிராவில் பதிவாகாது. என்றாலும் நான் இதையெல்லாம் செய்த சமயங்களில் அவை எத்தனை கொடூரமாக இருந்திருக்கும் என்பதை இப்போது உணர்கிறேன்’ என்றெல்லாம் சுய விமர்சனமாக எடுத்துக் கொள்பவர்கள் எத்தனை சதவிகிதம்? என்கிற கேள்வியுடன் பொதுவான சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
‘உங்களுக்கு கிடைக்கப் போகிற பரிசு என்ன?’
உரையாடலின் நடுவில் போட்டியாளர்களுக்கு விசே தந்த அட்வைஸ்களில் இதுவும் ஒன்று. “இந்த நிகழ்ச்சியின் மூலம் உங்களுக்குள்ள இருக்கற ‘உங்களை’ எடுத்துட்டுப் போகப் போறீங்கள்ல.. அதுதான் உங்களுக்கு கிடைக்கப் போற உண்மையான பரிசு” என்று ரத்தினச் சுருக்கமாக விசே சொன்னதைத்தான் மேலே வியாக்கியானமாக எழுதியிருக்கிறேன். இதுதான் பார்வையாளர்ளுக்கான பரிசு.
இனி, இந்த எபிசோடில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
‘விளையாடுங்கன்னு சொன்னா நம்ம கூடவே விளையாடறாங்க.. பழக்க தோஷத்துல பிக் பாஸ் கூடயே விளையாட்டிட்டாங்க.. மொத்தமா போச்சா.. (நாக்கை வழித்துக் காட்டுகிறார்!) எதிர் டீமா இருந்தாலும் நல்லா ஆடிய ஒருத்தரை மனசார பாராட்ட மனசு வராது. வாரா வாரம் பிரெண்ட்ஷிப் வேற மாறிட்டே இருக்கும்” என்கிற கிண்டலான முன்னுரையுடன் வீட்டிற்குள் நுழைந்தார் விசே. (விசே கண்ணாடி அணிந்து வரும் போதெல்லாம் ‘விக்ரம்’ படத்தின் சந்தானம் காரெக்டரும் நினைவிற்கு வந்து விடுகிறார்).
வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். சவுந்தர்யாவிற்குள் ஒரு சிறந்த தொழிலதிபர் இருப்பதை இன்று கண்டுகொள்ள முடிந்தது. சாப்பிட வந்திருந்த ஒரு பேக்கரி அயிட்டத்தைப் பார்த்து விட்டு ‘நல்ல வேளை. இவங்க சென்னைல இல்லை. எங்களுக்கு போட்டியா வந்திருப்பாங்க’ என்று பிஸ்னஸ் ஸ்ராட்டஜியாக அவர் சொன்னதைக் கேட்டு ‘தன் மகளை சான்றோர் எனக் கேட்ட’ அப்பாவாக சவுந்தர்யாவின் அப்பா மகிழ்ச்சி அடைந்திருப்பார். “வெளில போனா ஜாக்குலின் கூட பிரெண்ட்ஷிப் வெச்சுக்க மாட்டேன்’ என்று சவுந்தர்யா தனது பாணியில் கொளுத்திப் போட ‘பிரெண்ட்ல பல வகை வெச்சிருப்பா போல’ என்று படம் வரைந்து பாகங்களைக் குறித்தார் ஜாக்குலின்.
தனிமையில் பேசுவதின் மூலம் டேமேஜ் கன்ட்ரோல் முயற்சியில் ஈடுபட்டார் முத்து. ‘இதுவரைக்கும் நான் இப்படி தனியா பேசினதில்ல. எங்களை சிறப்பாக வெளியே காட்டற பிக் பாஸ் டீம் அத்தனை பேர் காலையும் தொட்டு வணங்கறேன். தப்புதான். நான் பண்ணியிருக்கக்கூடாது’ என்று ஒட்டுமொத்தமாக சரண் அடைந்தார். எதற்காக முத்து அப்படிச் செய்தார் என்பது அடுத்த எபிசோட் விசாரணையிலாவது வெளிப்படுமா? ம்ஹூம்.. நம்பிக்கையில்லை. அன்ஷிதாவிற்கு சிறப்புப் பரிசு வழங்கி அவரை வழியனுப்பும் சடங்கை இப்போதே செய்து வைத்தார் விஷால்.
ராணவ் மீதான வீண் சந்தேகம்
மேடையில் விசே. “ரொம்ப அக்ரஸிவா விளையாடினாங்க. நல்லா நடந்து போன அருண் திடீர்ன்னு நொண்டிட்டே வந்தாரு. முத்து முந்தாநேத்து மன்னிப்பு கேட்க ஆரம்பிச்சி இன்னமும் நிறுத்தவேயில்லை. பிக் பாஸை மயக்க முடியாது. இல்லத்தில் இருக்கும் செல்லங்களைப் பார்க்கலாமா?” என்றபடி வீட்டுக்குள் சென்றார்.
விஷாலுக்கும் ஜெப்ரிக்கும் ஆரம்பத்திலேயே ஜெர்க் தந்து ‘இருக்கு.. உங்களுக்கெல்லாம்.. பின்னாடி ஒரு கச்சேரி வெச்சிருக்கேன்’ என்று முறைப்பால் வார்னிங் தந்தார். அவர்களோ இதை அறியாமல் ‘நாங்க ஒரு பாட்டு வெச்சிருக்கோம்’ என்று வீக்லி டாஸ்க்கை முன்னிட்டு மற்றவர்களை கிண்டல் செய்து ஜாலியாக ஒரு பாட்டு பாடினார்கள். அது நன்றாகவே இருந்தது.
“நீங்க லெஃப்ட் பக்கம் படுத்தீங்களாமே.. வெளில மக்கள் சந்தேகப்படறாங்க ராணவ். தெளிவுப்படுத்தறதுக்காக இதைக் கேக்கறேன்” என்று ராணவ்வை எழுப்பி கேள்வி கேட்க அவரோ சங்கடத்தில் நெளிந்தார். ராணவ்விற்கு அடிபட்ட விஷயம் மருத்துவரால் உறுதிப்படுத்தப்பட்டு, அவர் மூன்று வாரங்களுக்கு டாஸ்க் விளையாட முடியாது என்று அதிகாரபூர்வமாக சொல்லப்பட்டு விட்டது. என்றாலும் பார்வையாளர்களில் சிலருக்கு சந்தேகம் ஏன் வருகிறது?. எனில், ‘நடிக்கிறான்’ என்று சொன்ன போட்டியாளர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ‘எல்லாவற்றையும் சந்தேகி’ என்று கார்ல் மார்க்ஸ் சொன்னது உண்மைதான். ஆனால் அனைத்திலுமே உலக சதி இருப்பதாக பயங்கர ஆராய்ச்சி செய்வது நமக்குள் இருக்கிற நல்ல மனிதனைக் கொன்று விடும்.
ராணவ்வின் கமெண்ட்ரி ஆட்டத்தைப் பாராட்டிய விசே, “உன்னால முடியாதுன்னு சொல்றதைக் கேட்ட தவளைகள் கீழே விழுந்தன. ஆனால் ஒரு தவளை மட்டும் மேலே போயிட்டே இருந்தது. ஏன்னா அதுக்கு காது கேக்காது” என்று ஒரு மேடையில் ரஜினி சொன்ன தவளைக் கதையை மேற்கோள் காட்டிய விசே, அது போல தன்னுடைய போக்கில் வித்தியாசமாக விளையாடும் ராணவ்வை பாராட்டினார். ‘டல்லாக இருக்கும் அருணை உற்சாகப்படுத்தி ‘மொத்தமா வண்டியை நிறுத்திடாதீங்க” என்று அட்வைஸ் தந்தார். ‘அடுத்த வாரத்துல இருந்து’ என்று எழுந்து சொன்ன அருணிடம் “இந்த நொடியே மாறுங்க. நாளைக்குன்னு சொன்னாலே அது விளங்காது” என்று சொன்னது ‘நச்’சென்ற அறிவுரை.
மஞ்சரியும் ராணவ்வும் ஒதுக்கப்படுகிறார்களா?
“மத்தவங்க கேக்கலைன்னா என்ன.. நான் விசாரிக்கிறேன். சொல்லுங்க .. மஞ்சரி. நீங்க எப்படியிருக்கீங்க.. சூப்பரா ஆடினீங்க.. யாரு உங்களுக்கு பாரபட்சம் காட்டறாங்களோ.. அவங்கதான் மக்கள் கிட்ட அம்பலமாகப் போறாங்க” என்று மஞ்சரியை விசே விசாரிக்கும் போது அன்ஷிதாவின் டைட் குளோசப் ஷாட் வந்தது. மந்த புத்திக்காரர் என்று கருதப்படுவதால் ராணவ் அந்த வீட்டில் பலராலும் ஒதுக்கப்படுவதைப் போலவே ‘சிறந்த ஆட்டக்காரர்’ என்கிற பொறாமை காரணமாக மஞ்சரியும் ஒதுக்கப்படுவது சுவாரசியமான முரண்.
‘மஞ்சரி.. இஞ்சுரி.. எப்படி சார் அது.. பிளான் பண்ணி சொல்வீங்களா?” என்று முத்துவிடம் கேட்க ‘ஒரு ப்ளோல வரதுதான் சார் அது” என்று முத்து புன்னகைத்தார். இந்த டாஸ்க்கில் ஆக்ரோஷம் காட்டிய அன்ஷிதா, பவித்ராவை பாராட்டிய விசே, ‘ஃபயர் மோட் ஆன் பண்ணிட்டீங்களா? குட்.. ஆனா பத்தலை” என்று பவித்ராவிடம் சொன்னார்.
“இந்த வயசுல ஜெப்ரி கூட மல்லுக்கட்டினீங்கள்ல.. பார்க்க நல்லா இருந்தது தீபக் சார். ஜெப்ரி வயசுல ஒரு தீபக்கைப் பார்த்தேன். அந்த சின்னப் பையன் பார்க்க நல்லா இருந்தான்” என்று விசே பாராட்ட, மனம் நெகிழ்ந்த தீபக், “என் பையன் இதை பார்ப்பான்.. சார்.. எனக்கது போதும்” என்று மகிழ்ச்சியடைந்தார். இந்த சீசனில் விசேவிடம் மிகக் குறைவாக திட்டு வாங்கியவர்களுள் தீபக்கை முதலிடத்தில் வைக்கலாம். தீபக் என்றாலே விசே கொஞ்சம் ரிவர்ஸ் கியர் போடுகிறாரோ?!
ரஞ்சித்தையும் பாராட்டிய விசே, ‘ஜெப்ரி.. நல்லா விளையாடினே. நீ நல்ல ஆட்டக்காரன்.. ஆனா.. சரி.. நீயே புரிஞ்சுக்கோ” என்று சஸ்பென்ஸ் வைத்து ஜெர்க் கொடுத்தார். ஜாக் எழுந்ததும் பலத்த கைத்தட்டல். “போன சீசன்ல யாருக்கு ரெட் கார்ப்பெட் கொடுத்தாங்கன்னு நெனச்சுல்லாம் தேவையில்லாம மனசைக் குழப்பிக்காதீங்க. நீங்க தைரியமான ஆளு” என்று இந்த முறை ஜாக்கிற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் தந்தார் விசே.
“ஒருத்தர் தரைல நீந்திப் போனதைப் பார்த்தேன்” என்று சொன்னவுடன் குறும்பான சிரிப்புடன் எழுந்தார் முத்து. “அதுக்கு இன்ஸ்பிரேஷன் சவுந்தர்யாதான் சார்…கல்லை எடுத்துட்டு ஒழுங்கு காட்டினாங்க. அதுலதான் மோட்டிவேட் ஆனேன்” என்று முத்து சொன்னதும் ‘இந்த சவுந்தர்யா இருக்கே..” என்று ஒரு குறும்புக் குழந்தையை பாராட்டும் எஃபெக்ட்டை விசே தந்தார். விசாரணை நாட்களில் தன்னுடைய சாதுர்யமான நகைச்சுவையால் விமர்சனங்கள் அதிகம் வராமல் முத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாரோ?!
அன்ஷிதாவை வறுத்தெடுத்த விசே
பிரேக் முடிந்து வந்த விசே அடிபட்ட ராணவ்வை சந்தேகப்பட்டவர்களின் லிஸ்ட்டை எடுத்தார். “யாரெல்லாம் அது.. எழுந்திருங்க?” என்றதும் அன்ஷிதா, சவுந்தர்யா, ஜெப்ரி ஆகிய மூவரும் டக்கென்று எழுந்தார்கள். ஆனால் ஆடையை சரி செய்வது போல மழுப்பும் பாணியை வழக்கமாகக் கொண்ட விஷால், இந்த முறையும் கோக்குமாக்காக எழுந்து எழுந்து அமர, அதை சரியாக நோட் செய்த விசே “என்னாச்சு.. விஷால்.. எதுக்கு எழுந்துக்கறா மாதிரி நடிச்சீங்க.. இந்த மாதிரி ஒரு பிராடு கேப்டனை நான் பார்த்ததில்ல” என்றது மிக காட்டமான விமர்சனம். விசே இதை தவிர்த்திருக்கலாம்.
“எனக்கும் கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. He is fine’ன்னு டாக்டர் சொன்னாங்க.. வெளில மக்கள் வேற பயந்துட்டு இருந்தாங்க” என்று விஷால் சொல்லிக் கொண்டே போக ‘என்னது.. பயந்துட்டு இருந்தாங்களா?’ என்று சர்காஸமாக உள்ளே புகுந்தார் விசே. “ராணவ் இப்படித்தான் ஏதாவது பண்ணுவான். அதான் சந்தேகம்” என்று சவுந்தர்யா சொல்ல அவரை அத்துடன் விட்டு விட்டார். அடிபட்டது உண்மை என்பது தெரிந்த பிறகும் ‘நான் ஸாரி கேட்க வரலை. இது அவனோட தப்பு’ என்று சொன்ன சவுந்தர்யாவை விசே ஏன் இறங்கி விசாரிக்கவில்லை? இதைப் போலவே ‘விசிட்டிங் ஹவர்ஸ் முடியப் போகுது’ என்று நக்கலடித்த ஜெப்ரியும் விசாரிக்கப்படவில்லை.
‘ராணவ் ரைட் சைட்லதான் விழுந்தான்.. ஆனா லெஃப்ட்ல அடிபட்டுச்சுன்னு துடிச்சான்’ என்று ஜெப்ரி சொல்ல, அடடா.. குறும்படம் போடுவதற்கான வாய்ப்பு. இப்போதாவது இது நடக்குமா என்று எதிர்பார்த்தால் விசே அதைச் செய்யவில்லை. “டாக்டர் சொன்னப்புறமும் ஏன் உங்களுக்கு சந்தேகம் வருது.. ராணவ் உங்கள்ல ஒருத்தர்தானே.. “ என்று பொதுவாக கேட்ட விசே, அன்ஷிதாவை எழுப்பி வரிசையாக கேட்ட கேள்விகள் சிறப்பானவை. “நீங்கதான் அன்பான அன்ஷிதாவாச்சே.. உங்களுக்குமா சந்தேகம்.. ‘டெவிலா என்னால நடிக்க முடியாதுன்னு சொன்ன அன்ஷிதாவாச்சே.. உங்களுக்குமா சந்தேகம்.. சாப்பாடு விஷயத்துல யார் என்னை குறை சொன்னாலும் பிடிக்காதுன்னு சொன்ன அன்ஷிதாவாச்சே.. உங்களுக்குமா சந்தேகம். சொல்றா கண்ணா” என்று இயக்குநர் ‘விசு’வின் பாணியில் விசே வசனமாக கேட்க அன்ஷிதா திகைத்து நின்றார்.
“ஒருத்தன் அடிபட்டுக் கிடக்கறான். ஆனா நீங்க கமெண்ட் பாஸ் பண்றீங்க” என்று விசே கேட்டதும், தன்னை அதனுடன் கனெக்ட் செய்து கொண்ட மஞ்சரி கண்கலங்கினார். “அவனுக்கு அடிபட்டதுன்னு உண்மைன்னு தெரிஞ்சவுடனே எனக்கு நிம்மதியா இருந்தது” என்று சஸ்பென்ஸாக ஆரம்பித்தார் முத்து. (பட்டிமன்ற திறமை!) “அப்படி இல்லாமப் போயிருந்தா இந்த வாரம் முழுக்க அவனை வெச்சு செஞ்சிருப்பாங்க. உன்னை கடவுள் காப்பாத்திருடான்னு சொன்னேன்..” என்று முத்து சொன்னதும் பலத்த கைத்தட்டல்.
“நான் வித்தியாசமா செய்யறேன் சார்” - ராணவ்
‘சவுந்தர்யா.. அருண் ஒண்ணு சொன்னார்ல.. அது நல்லா இருந்துச்சு.. அதை நீங்களே சொல்லுங்க அருண்” என்று விசே கேட்க “அடிபடலைன்ற யூகத்திற்கு 50 சதவிகிதம் இருக்குன்னா.. அடிபட்டதுன்றது இன்னொரு உண்மை. அதை ஏன் யோசிக்கல? என்று அருண் சொல்ல சவுந்தர்யாவிடமிருந்து மெளனம் மட்டுமே பதிலாக கிடைத்தது.
“ஏன் ராணவ்.. உங்க மேல எல்லோரும் இப்படி சந்தேகப்படறாங்க..” என்று அவரையே விசே விசாரிக்க “நான் ஏதாவது எக்ஸ்ட்ரா பண்ணிடறேன்..” என்று ராணவ் அரைமனதுடன் சொல்ல “கேளுங்க.. ராணவ். எக்ஸ்ட்ரா சர்க்கரை மட்டும் இனிக்குது.. நான் எக்ஸ்ட்ராவா பண்ணா கசக்குதான்னு கேளுங்க” என்று எடுத்துக் கொடுத்தார் விசே.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


