Champions Trophy 2025: ``விராட் கோலி பாகிஸ்தானில் விளையாட விரும்புகிறார் - ஷோயிப் அக்தர் பேச்சு!
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட பிசிசிஐ மறுத்துள்ள நிலையில் ஹைபிரீட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வரவில்லை. இந்த பிரச்னைக்கு சமரச தீர்வு எட்ட பிசிசிஐ மற்றும் பிசிபி கிரிக்கெட் வாரியங்கள் ஐசிசி மூலம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த விஷயத்தில் "ஹைபிரீட் முறையில் நடத்த மாட்டோம்" என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாட்டை பாகிஸ்தான் வீரர்கள் ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பாகிஸ்தானின் லெஜண்டரி வேகப்பந்துவீச்சாளர் ஷோயிப் அக்தர், விராட் கோலி மற்றும் இந்திய அணியினர் பாகிஸ்தானில் விளையாட விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், இந்திய அணியினர் பாகிஸ்தானில் விளையாடுவது தொலைக்காட்சி உரிமத்தின் மதிப்பையும் உயர்த்தும் என்று தெரிவித்துள்ளார்.
ஷோயிப் அக்தர், "இந்தியா பாகிஸ்தானில் விளையாடுவதை பாகிஸ்தானை விட இந்தியாவே அதிகம் விரும்பும். விராட் கோலி அதிகமாக விரும்புவார். நான் பிசிசிஐ உடன் இந்தியாவில் பணியாற்றியிருக்கிறேன். அவர்கள் பாகிஸ்தானில் விளையாடினால் அவர்களின் தொலைக்காட்சி உரிமைகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் உச்சத்தை எட்டும்" என்று பேசினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார் விராட் கோலி. ஆனால் அவரது கிரிக்கெட் கெரியரில் ஒரே ஒருமுறைதான் பாகிஸ்தான் சென்று விளையாடியிருக்கிறார்.
பியூஷ் சாவ்லா தலைமையிலான 19 வயதுக்கு உட்பட்டவர்கள் அணியில் இடம்பெற்றிருந்தார் விராட். 2006ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் 4-0 என்றும், டெஸ்ட் போட்டிகளில் 2-0 என்றும் வெற்றியுடன் நாடு திரும்பினர். அதுவே அவர் பாகிஸ்தானில் விளையாடிய முதலும் கடைசியுமான தொடர்.

கடைசியாக இந்திய அணி 2008 ஆசிய கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் சென்றது. பாகிஸ்தான் - இந்தியா டூர் போட்டிகள் நடைபெறுவது 2013ல் நிறுத்தப்பட்டது. என்றாலும் பாகிஸ்தான் ஐசிசி நிகழ்வுகளுக்காக இந்தியா வந்துகொண்டிருந்தது. பாகிஸ்தான் நடத்தும் போட்டிகளில் இந்தியா இதற்கு முன் ஹைபிரீட் முறையில் வேறு நாடுகளில் பங்கேற்றுள்ளது. இந்த முறையும் அதே முடிவு எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


