Virat Kohli: ``அஷ்வினை நாங்கள் மிஸ் பண்ணிட்டோம்; ஆனால்... - கோலி கேப்டன்ஸி குறித்து AB de
இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) மெகா ஏலம் நான்கு நாள்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. ஏலத்தின் முடிவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி எப்போதும் போல நன்றாகவே அமைந்திருக்கிறது. ஆனால், செயல்பாடு எப்படி இருக்கும் அடுத்தாண்டு சீசனில்தான் தெரியும்.
தற்போதைக்கு, டூ பிளெஸ்ஸிஸ் இடத்துக்கு ஃபிலிப் சால்ட், முகமது சிராஜ் இடத்துக்கு புவனேஷ்வர் குமார், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இடத்துக்கு ஜிதேஷ் சர்மா, ஹார்ட் ஹிட்டர் இடத்தில் லியாம் லிவிங்ஸ்டன், டிம் டேவிட் மற்றும் தேவ்தத் படிக்கல், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரின் கம்பேக் என ஆன் பேப்பரில் அணி முழுமையாகவே இருக்கிறது. ஆனாலும், 2022-ல் சஹாலை கழற்றிவிட்டது முதல் இன்னும் சரியான ஸ்பின்னர் இவர்களுக்குக் கிடைக்கவேயில்லை.
இந்த நிலையில், டூ பிளெஸ்ஸிஸ் டெல்லிக்குச் சென்றுவிட்டதால் கேப்டன்சி பொறுப்பு மீண்டும் விராட் கோலிக்கு வசம் வரும் என்று பேச்சுகள் எழுந்த நிலையில், மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் முன்னாள் பெங்களூரு வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அதை உறுதிப்படும் வகையில் ஹின்ட் கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில், பெங்களூரு அணி குறித்துப் பேசியிருக்கும் டிவில்லியர்ஸ், ``இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால், அணியைப் பார்க்கையில் அவரே (கோலி) கேப்டனாக இருப்பார். ஹேசில்வுட்டுடன் புவனேஷ்வர் குமார் எங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சி.
அஷ்வினை நாங்கள் தவறவிட்டுட்டோம். சி.எஸ்.கே அவரைப் வாங்கியது. மொத்தத்தில் இதுவொரு சமநிலையான அணியாகவே இருக்கிறது. ஆனால், ஆட்டத்தை வென்று தரக்கூடிய ஸ்பின்னரை நாங்கள் இழக்கிறோம். இருந்தாலும், இந்த அணி சின்னசாமி ஸ்டேடியத்தை தங்களின் கோட்டையாக மாற்றும்." என்று தெரிவித்தார்.
பெங்களூரு அணி கடைசியாக 2016-ல் விராட் கோலியின் கேப்டன்சியில் ஐ.பி.எல் ஃபைனல் ஆடியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.