IPL: ``என் பெயர் இல்லையென்றதும் கண்ணீரே வந்துவிட்டது - வெங்கடேஷ் ஐயர் உருக்கம்

அடுத்தாண்டு ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் இந்த மாதம் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு, அக்டோபர் 31-க்குள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அந்தந்த அணிகள் வெளியிடவேண்டும் என்று ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, குறிப்பிட்ட அந்த தேதியில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில், பலரும் எதிர்பாராத விதமாகக் கடந்த சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் உள்பட மொத்தமாக ஐந்து அணிகளின் கேப்டன்கள் தங்கள் அணிகளால் விடுவிக்கப்பட்டனர்.

IPL | ஐ.பி.எல்

அந்த வரிசையில், கொல்கத்தா அணியில் கடந்த நான்காண்டுகளாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த வெங்கடேஷ் ஐயரையும் அந்த அணி விடுவித்திருக்கிறது. இந்த நிலையில், கொல்கத்தா அணி தன்னைத் தக்கவைக்காதது குறித்து அறிந்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாக வெங்கடேஷ் ஐயர் கூறியிருக்கிறார்.

இது குறித்து ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசியிருக்கும் வெங்கடேஷ் ஐயர், ``கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை இதுவொரு குடும்பம். இது வெறும் 20 அல்லது 25 வீரர்களைப் பற்றியது மட்டுமல்ல, அணி நிர்வாகம், ஊழியர்கள், திரைக்கு பின்னாலிருக்கும் சகாக்கள் என நிறைய பேர் இருக்கின்றனர். இந்த உணர்ச்சிகள்தான், அணியின் தக்கவைப்புப் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லையென்றதும் அது கொஞ்சம் கண்ணீரை வரவழைத்துவிட்டது.

வெங்கடேஷ் ஐயர்

என்னுடைய முதல் ஏலத்தின்போது, கொல்கத்தா அணி என்னை எடுத்த வீடியோ இல்லாததால், இந்த முறை அவர்கள் என்னை எடுக்கிறார்களா என்பதைப் பார்க்க ஒரு குழந்தையைப் போல அமர்ந்திருப்பேன். அதை அவர்கள் செய்தால் அதுதான் என் உலகம் என்று அர்த்தம். கதவுகள் திறந்தே இருக்கின்றன, இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தால், நான் மிகவும் விரும்பும் அணிக்காக என்னால் விளையாட முடியும்." என்று கூறினார்.

கொல்கத்தா அணி, சுனில் நரைன், ஆன்ட்ரே ரஸல், வருண் சக்ரவர்த்தி, ரின்கு சிங், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங் உள்ளிட்ட ஆறு வீரர்களைத் தக்கவைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.