KL Rahul: `ஒரு டெஸ்ட் மேட்ச்சால் கே.எல். ராகுலை உட்கார வைக்க முடியாது - ஆதரிக்கும் முன்னாள் வீரர்

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியால், அடுத்த டெஸ்ட் போட்டியில் யார் உட்கார வைக்கப்படப்போகிறார் என்பது அணிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்குள் சுருண்டதற்கு முக்கிய காரணமாக அமைந்த ஜெய்ஸ்வால், ரோஹித், கோலி, சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் ஆகிய பேட்ஸ்மேன்களில் ராகுலைத் தவிர மற்ற அனைவரும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 400 ரன்களைக் கடக்க முக்கிய பங்காற்றினர்.

இந்திய அணி

இருப்பினும், இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்விக்கு இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய மூன்றும் காரணம் என்றாலும், அடுத்த போட்டியில் இவரை உட்கார வைக்கலாம் என ராகுலை நோக்கி விமர்சனங்கள் வரத் தொடங்கின.

இதனால், புனேவில் இன்று தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பிளெயிங் லெவனில் ராகுல் இடம்பெறுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த நிலையில், ஒரு டெஸ்ட் மேட்ச்சால் கே.எல். ராகுலை நீங்கள் உட்கார வைக்க முடியாது இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் வெங்கட்பதி ராஜு தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் வெங்கட்பதி ராஜு

தனியார் ஊடகத்திடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த வெங்கட்பதி ராஜு, ``நான் கேப்டனாக இருந்தால், முதல் டெஸ்ட் ஆடிய அணியுடனே செல்வேன். அணிக்கு அனுபவ வீரர்கள் தேவை. ஒரேயொரு டெஸ்ட் மேட்ச்சால் ராகுலை நீங்கள் உட்கார வைக்க முடியாது. அவர் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன். அடுத்த டெஸ்ட் மேட்ச்சிலும் அவர் ஆடவேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. ரோஹித் ஒரு நேர்மையான கேப்டன்.

ரோஹித் - ராகுல்

என்ன முடிந்ததோ அது முடிந்த விஷயம்தான் என அவருக்குத் தெரியும். அடுத்த போட்டியில் இந்தத் தொடரை சமன் செய்வதற்கான நேரம் இது. நிச்சயமாக அதை அவர் செய்வார். மேலும், அடுத்துவரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும், பதற்றமடையக் கூடாது. எனவே, நியூசிலாந்துக்கெதிரான டெஸ்டில் ராகுலுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் திருப்பியடிப்பார். அவருக்கு அனுபவம் இருக்கிறது." என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.