ENG Vs PAK: ஒன்றரை நூற்றாண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய ரெக்கார்ட்; ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒன்றரை நூற்றாண்டு கால வரலாற்றில், இங்கிலாந்தின் ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் கூட்டணி புதிய வரலாறு ஒன்றைப் படைத்திருக்கிறது.

பாகிஸ்தானில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஓய்விலிருப்பதால், ஒல்லி போப் கேப்டனாகச் செயல்பட்டுவருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முல்டான் மைதானத்தில் கடந்த திங்களன்று தொடங்கியது.

England Vs Pakistan

முதலில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில், கேப்டன் ஒல்லி போப் டக் அவுட் ஆனபோதும் ஜோ ரூட்டுடன் இணைந்து ஸாக் க்ராவ்லி, பென் டக்கெட் ஆகியோர் ஆடிய கேமியோ அதிரடியால் 50 ஓவர்களில் 249 ரன்களைக் குவித்தது. அதன் பிறகு, 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் இணை, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.

சுமார் 80 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தக் கூட்டணி, அணியின் ஸ்கோரை 700-ஐ கடக்க வைத்தது. சரியாக ஜோ ரூட் தனது இரட்டைச் சத்தத்தைக் கடந்து 262 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது அகா சல்மான் பந்துவீச்சில் அவுட்டாக இந்தக் கூட்டணியின் அதிரடி முடிவுக்கு வந்தது. ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 454 ரன்கள் குவித்தது. இதுவே தற்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறாக அமைந்திருக்கிறது.

ஜோ ரூட் - ஹாரி ப்ரூக்

இதற்கு முன்னர், 2015-ல் வெஸ்ட் இன்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் வோஜஸ் - ஷான் மார்ஷ் கூட்டணி அடித்த 449 ரன்களே 4-வது விக்கெட்டுக்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக 4-வது விக்கெட்டுக்கு 450 ரன்களைக் கடந்த முதல் கூட்டணி என்ற சாதனையைப் படைத்திருக்கிறது ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் கூட்டணி. மேலும், வெளிநாட்டு மண்ணில் எந்தவொரு விக்கெட்டிலும் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுவே.

ஜோ ரூட் - ஹாரி ப்ரூக்

இந்த ஆட்டத்தில், ஜோ ரூட்டின் விக்கெட்டுக்குப் பிறகும் அதிரடி காட்டிய ஹாரி ப்ரூக், முச்சதம் கடந்து 317 ரங்களில் அவுட்டானார். இதன் மூலம், டெஸ்டில் முச்சதம் அடித்த 6-வது இங்கிலாந்து வீரர் என்ற சாதனைப் படைத்திருக்கிறார் ஹாரி ப்ரூக்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் அடித்த சாதனை இலங்கை முன்னாள் வீரர்கள் மஹேலா ஜெயவர்தனே, குமார் சங்ககரா கூட்டணி வசம் இருக்கிறது. 2006-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற டெஸ்டில், மஹேலா ஜெயவர்தனே, குமார் சங்ககரா கூட்டணி 624 குவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.