Mariyappan: ``இந்த முறை வெண்கலம், அடுத்த முறை தங்கம் வெல்வேன் - பாராலிம்பிக் நாயகன் மாரியப்பன்!
தமிழ்நாட்டு வீரரான மாரியப்பன், 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தொடரில் உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கத்தை வென்று இன்று தமிழ்நாடு திரும்பியிருக்கிறார்.
2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தங்கம், 2020ம் ஆண்டு டோக்கிய ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவர், தற்போது 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். இப்படியொரு சாதனையை பாராலிம்பிக்ஸில் இதற்கு முன் வேறு எந்த இந்திய வீரரும் செய்ததில்லை. இந்நிலையில் இன்று பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று தமிழ்நாடு திரும்பியிருக்கும் பாராலிம்பிக் நாயகன் மாரியப்பன் தங்கவேலுவிற்கு வரவேற்பும், வாழ்த்துகளும் குவிந்துள்ளன.
இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், "மூன்று முறை தொடர்ச்சியாக பாராலிம்பிக்கில் பங்கேற்று தங்கம், வெள்ளி மற்றும் இந்தமுறை வெண்கலம் வென்றிருக்கிறேன். இந்த பாரிஸ் பாராலிம்பிக் தங்கம் வெல்ல வேண்டும் என்ற கனவுடன்தான் பங்கேற்றேன். ஆனால், அங்கிருக்கும் காலநிலை என் உடலுக்கு ஒத்துக் கொள்ளாததால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். அதனால், தங்கம் வெல்ல வேண்டிய வாய்ப்பைத் தவறவிட்டு வெண்கலம் வென்றிருக்கிறேன். இது சிறு வருத்தத்தை ஏற்படித்தினாலும், வெண்கலம் வென்றதில் மகிழ்ச்சி. அடுத்த முறை நிச்சயம் தங்கம் வெல்லுவேன்.
2016ஆம் ஆண்டு நான் ஒலிம்பிக்ஸுக்குச் செல்லும்போது பாரா விளையாட்டுகள் பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது பாராலிம்பிக் மக்களிடையே பிரபலமாகியிருக்கிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார் நாங்கள் பாராலிம்பிக் செல்வதற்கு முன்பு எங்களுக்கு 7 லட்சம் கொடுத்து உதவினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார், பிரதமர் மோடி சார் என எல்லோரும் என்னை ஊக்கப்படுத்தினார்கள்.
.jpg)
2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் மற்றும் 2020ம் ஆண்டு டோக்கிய ஒலிம்பிக்கில் நான் பதக்கங்கள் வென்று நாடு திரும்பியபோது நான் ஒருவன் மட்டுதான் தமிழ்நாட்டிலிருந்து பாராலிம்பிக்கில் பங்கேற்றிருந்தேன். இனிவரும் காலத்தில் என்னைப்போல பலர் தமிழ்நாட்டிலிருந்து பாராலிம்பிக் செல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அது இந்த 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் நடந்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து நான்குபேர் பதக்கங்கள் வென்றுள்ளோம். இந்தியாவிலிருந்து மொத்தம் 29 பதக்கங்கள் அடித்திருக்கிறோம். இது இன்னும் அதிகரிக்க வேண்டும். விரைவில் இந்தியா ஒலிம்பிக்கில் முதலிடம் வகிக்க வேண்டும்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

