Paralympics: உனக்கு எதுக்கு விளையாட்டுன்னு கேட்டாங்க...ஆனா..! - பதக்கம் வென்ற காஞ்சிபுரம் துளசிமதி
பாரிஸ் பாராலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்று வருகிறது.
டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 19. இப்போது பாரிஸ் பாராலிம்பிக்ஸில் இந்தியா அந்த எண்ணிக்கையையெல்லாம் எப்போதோ தாண்டிவிட்டது. இந்தியாவின் இந்த புலிப்பாய்ச்சலில் தமிழக வீரர், வீராங்கனைகளின் பங்கும் அதிகமாக இருந்திருக்கிறது. குறிப்பாக பேட்மிண்டனில் மட்டும் 3 தமிழக வீராங்கனைகள் பதக்கம் வென்றிருக்கிறார்கள். அதில், காஞ்சிபுரத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் ரொம்பவே முக்கியமானவர். இறுதிப்போட்டி வரை முன்னேறி சீன வீராங்கனைக்கு எதிராக போராடி வீழ்ந்து வெள்ளி வென்றிருக்கிறார். அந்த துளசிமதி முருகேசன் நம்முடன் பேசினார்.
``பொருளாதாரரீதியா நாங்க வலுவான குடும்பமெல்லாம் இல்ல. அப்பா தினக்கூலியாதான் வேலை பார்க்குறாரு. அதனால ஸ்போர்ட்ஸ்க்குனு தனியா என்னால செலவு பண்ண முடியாது. தினசரி வர்ற அந்த 500 ரூபாய வச்சுதான் வீட்டு செலவயும் பார்த்துக்கிட்டு எங்கப்பா எனக்கு பேட்மிண்டன் ரேக்கட்டே வாங்கிக் கொடுத்தாரு. என தனது எளிய பின்னணியை விவரிக்கிறார் துளசிமதி.
தொடர்ந்து பேசியவர், ``அப்பாதான் என்னை ஸ்போர்ட்ஸ்ல கொண்டு வந்தாங்க. அப்பாவும் ஒரு ஸ்போர்ட்ஸ் ப்ளேயர்தான். ஆனா வறுமை, குடும்ப கஷ்டம் மற்றும் சூழல் காரணமா அப்பாவால ஸ்போர்ட்ஸ்ல பெருசா சாதிக்க முடியல. அதுனால எங்கள எப்படியாவது ஸ்போர்ட்ஸ்ல ஜெயிக்க வைக்கணும்னு அப்பாவுக்கு ஆசை. ஆரம்பத்துலேயே நான் பேட்மிண்டன் விளையாடல. முதல்ல ரன்னிங்லதான் ஸ்டார்ட் பண்ணேன். பிறகு டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கால்பந்துனு ஒவ்வொரு விளையாட்டா ஸ்டார்ட் பண்ணேன்.

அதன் பிறகு பேட்மிண்டன் ஸ்டார்ட் பண்ணேன். முதல்ல கஷ்டமாதான் இருந்துச்சு. அப்புறமா ஒவ்வொரு டோர்னமென்ட்டா கலந்துக்க கலந்துக்க எனக்கு எல்லாம் பழகிருச்சு. இந்த விளையாட்டையும் ரொம்பவே பிடிச்சிருச்சு. பொருளாதார ரீதியா ரொம்ப கஷ்டம்தான். அப்பா தினக்கூலியாதான் வேலை பார்க்குறாரு. நிறைய போட்டிகள்ல கலந்துக்கிட்டு நிறைய பதக்கங்களை ஜெயிச்சிருக்கேன். அதுல வரக்கூடிய பரிசுத்தொகையை வச்சுதான் ஷூ வாங்குவேன். எல்லாரும் ப்ரைவேட் ஸ்டேடியத்துல பயிற்சி எடுத்தேனு சொல்லுவாங்க. நான் கவர்மென்ட் ஸ்டேடியத்துலதான் முழுக்க முழுக்க பயிற்சி எடுத்தேன்.
சொந்தக்காரவுங்க யாரும் சப்போர்ட் பண்ணல. எல்லாரும் நான் விளையாடுறதுக்கு எதிராதான் இருந்தாங்க. நிறைய டைம் என்கிட்ட விளையாடத இதெல்லாத்தையும் நிறுத்திருனு சொன்னாங்க. அதெல்லாம் கேட்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கும். நிறைய நாள் நான் அழுதுருக்கேன். விளையாட்டு நமக்கான களம் இல்லையோனு குழம்பிப் போயிருக்கேன். ஏன் எல்லாரும் நமக்கு எதிரா இருக்காங்கனு பீல் பண்ணிருக்கேன். ஆனாலும், எனக்குள்ள எங்க அப்பா கொடுத்த நம்பிக்கை, எதோ ஒரு உந்துதல கொடுத்துக்கிட்டே இருந்துச்சு. ஸ்கூல்ல படிக்கும்போது 4.30 மணியில இருந்து 5.30 மணி வரை படிப்பேன்.
அப்புறமா க்ரவுண்ட்டுக்கு போய் 7.30 மணி வரை பயிற்சி எடுப்பேன். அப்பாதான் எனக்கு பயிற்சி கொடுப்பாரு. 13 வருஷமா அப்பாதான் பயிற்சி கொடுத்துட்டு இருக்காரு. நான் கடைசி ஒரு மூணு வருஷமாதான் தனியார் பயிற்சி மையத்துல பயிற்சி எடுத்தேன். இப்போ நான் veterinary medicine படிச்சிட்டு இருக்கேன். அதுல சரியான வருகை இருந்தாதான் தேர்வு எழுத முடியும். ஆனா எனக்கு ஒலிம்பிக்ஸ்ல விளையாடனும்னா 15 நாடுகளுக்கு போய் போட்டிகள்ல கலந்துக்கணும். கரெக்டா அந்த போட்டிகள் தொடங்கும் போது எனக்கு தேர்வும் ஸ்டார்ட் ஆயிருச்சு. விளையாட்டா? படிப்பானு? வந்தப்போது நான் விளையாட்டை தேர்வு செஞ்சிட்டேன்.
பிறகு எனக்கு ஒரு மாத விடுப்பு தேவைபட்டது ஒலிம்பிக்ஸ்ல விளையாடுவதற்கு மருத்துவக் கல்லூரில ஒரு மாத விடுப்புலாம் தர மாட்டாங்க. அப்போ உதயநிதி ஸ்டாலின் சாரை தொடர்புகொண்டு பேசினோம். கடைசில அவர் பேசி கல்லூரிக்கு ஒரு கடிதம் அனுப்பினாரு. அதன்பிறகு எனக்கு விளையாட வாய்ப்பு கிடைச்சது. உதயநிதி சாருக்கு நன்றி.” என தனது பயணத்தை விவரித்த துளசிமதியிடம் பாரிஸ் அனுபவம் குறித்து பேசினோம். ``இந்த பாரீஸ் அனுபவத்தை என்னால மறக்கவே முடியாது. நான் சின்ன வயசுல ஒலிம்பிக்ஸ்ல இந்தியா ஜெயிக்கும்போது நம்ம கொடியை ஏத்துறதை எல்லாம் பார்த்து வியந்திருக்கிறேன்.
.jpeg)
இப்போ என் மூலமாகவும் இந்திய கொடி அங்க பறந்துச்சுனு நினைக்கும்போது அது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. ஒலிம்பிக்ஸ்லாம் போய் நம்ம விளையாடுவோமான்னு நினைச்சிருக்கேன். ஆனா இப்போ அது நிஜமாகியிருக்கு. அங்க இருந்து வரும்போது நம்ம அப்பாவுக்கு ஒரு பதக்கத்தை ஜெயிச்சு எடுத்திட்டு வரனும்னு நினைச்சேன் அது நடந்திருச்சு. வாழ்க்கையில நிறைய தடைகள் வரும் அதையெல்லாம் தாண்டிதான் நம்ம ஜெயிக்கனும்" என்று தன்னம்பிக்கையுடன் பேசி முடித்தார் துளசிமதி முருகேசன்.
வாழ்த்துகள் துளசிமதி!
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

