Mariyappan Thangavelu: `இந்தியர்கள் யாரும் செய்யாத வரலாற்று சாதனை ஹாட்ரிக் மெடல் அடித்த மாரியப்பன்
தமிழக வீரரான மாரியப்பன், பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தொடரில் உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கத்தை வென்றிருக்கிறார். மாரியப்பன் ஏற்கனவே பாராலிம்பிக்ஸில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றிருக்கிறார். அதுபோக இந்த 3 பதக்கங்களையும் அடுத்தடுத்த பாராலிம்பிக்ஸில் வேறு வென்று ஹாட்ரிக் அடித்திருக்கிறார். இப்படியொரு சாதனையை பாராலிம்பிக்ஸில் இதற்கு முன் வேறு எந்த இந்திய வீரரும் செய்ததில்லை.
ஒலிம்பிக்ஸில் வழங்கப்படும் மூன்று விதமான பதக்கங்களும் ஒரு வீரரிடம் இருப்பது மிகப்பெரிய பெருமையான விஷயம். பல வீரர் வீராங்கனைகளும் இதற்காக கடுமையாக போராடியிருக்கின்றனர். ஒரு சிலருக்கு மட்டுமே அந்த கனவை எட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மாரியப்பன் அந்த அரிய பட்டியலில் தன்னுடைய பெயரையும் இப்போது இணைத்திருக்கிறார்.
எளிய குடும்பத்தில் பிறந்து சிறுவயதிலேயே பேருந்து விபத்தினால் கால்களில் பாதிப்பை எதிர்கொண்ட மாரியப்பன், 2016 ரியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் ஹீரோவாக உருவெடுத்தார். சிறுவயதில் மாரியப்பனின் தந்தை அவரது குடும்பத்தை நிர்கதியாக விட்டுவிட்டு சென்றார். அதனால் தன்னுடைய தந்தை பெயரை கூட தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்வதில் மாரியப்பனுக்கு விருப்பம் இருந்ததில்லை. அந்த பாராலிம்பிக்ஸில் இந்தியா இரண்டே இரண்டு தங்கங்களை மட்டுமே வென்றிருந்தது.
ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா என்கிற வீரர் ஒரு தங்கத்தை வென்று கொடுத்திருந்தார். இன்னொரு தங்கத்தை மாரியப்பன் வென்று கொடுத்திருந்தார்.

ரியோ பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற மாரியப்பன் மீது டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. கொரோனாவுக்கு பிறகு அழுத்தமான சூழலில் பெரும் எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டிருந்த தருணத்திலும் மாரியப்பன் வெள்ளி வென்று அசத்தினார். இப்போது பாரிஸ் பாராலிம்பிக்ஸிலும் அவர் சாதித்திருக்கிறார்.
மாரியப்பனுடைய கரியர் பெஸ்ட் 1.89 மீட்டரே. இந்த சீசனில் அவருடைய பெஸ்ட் 1.88 மீட்டர். அவருடைய பெஸ்ட்டை அவர் எட்டினாலே தங்கம் அல்லது வெள்ளிக்கு கடுமையாக சவாலளிக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், மாரியப்பனால் இங்கே 1.85 மீட்டருக்கு மட்டுமே உயரத்தை தாண்ட முடிந்தது.
வெள்ளிப்பதக்கத்தை இந்திய வீரர் சரத் குமாரே வென்றிருந்தார். அவருடைய கரியர் பெஸ்ட் 1.90 மீட்டராக்ச் இருந்தாலும் சீசன் பெஸ்ட் 1.85 மீட்டர்தான். ஆனால், இங்கே உத்வேகத்தோடு போராடி 1.88 மீட்டருக்கு உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தார்.

2016 ரியோ பாராலிம்பிக்ஸில் மாரியப்பன் தங்கவேலு களமிறங்கினார். இப்போது பாரிஸிலும் அவர் சாதித்திருக்கிறார். 8 ஆண்டுகளாக உடற்தகுதியை அப்படியே தக்கவைத்து பதக்கம் வெல்லும் வாய்ப்பிலேயே தன்னை நிலைநிறுத்திக் கொள்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதற்காகவே மாரியப்பனை உச்சி முகர்ந்து கொண்டாடலாம்.!
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

