ரோஹித்தும் ஹர்திக்கும் முதல்ல பேசிக்கவே இல்ல..! - ரகசியம் பகிரும் பத்திரிகையாளர்!

சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றிருந்தது. இந்த உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யாவுக்கும் கருத்து மோதல் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளரான விமல் குமார் இருவரும் தங்களுக்கிடையே இருந்த மனத்தடைகளை எப்படி விலக்கிக் கொண்டனர் என்பதைப் பற்றி பேசியிருக்கிறார்.
Rohit Sharma- Hardik

நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித்தை நீக்கிவிட்டு குஜராத் அணியிலிருந்து ஹர்திக்கை அழைத்து வந்து கேப்டன் பதவியை கொடுத்திருந்தது மும்பை நிர்வாகம். இந்த முடிவு பெரும் சறுக்கலாக மாறியது. மும்பை அணிக்கு தோல்வி மேல் தோல்வி. ரசிகர்களும் ஹர்திக்கை ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஹர்திக் பீல்டில் ரோஹித்தை நடத்திய விதமும் இணையத்தில் பேசுபொருளானது. ஐ.பி.எல் முடிந்த உடனேயே உலகக்கோப்பை தொடங்கியது. உலகக்கோப்பையில் ரோஹித் இந்திய அணியின் கேப்டன். ஹர்திக் அணியின் முக்கியமான வீரர். ஆனால்,மும்பை அணியில் நடந்த விஷயங்கள் இருவருக்குமிடையே ஒரு விரிசலை ஏற்படுத்தியிருக்குமோ, அதனால் உலகக்கோப்பையில் இந்திய அணி பாதிக்கப்படுமோ என்கிற ஐயம் அனைவருக்குமே இருந்தது. இந்நிலையில்தான், மூத்த பத்திரிகையாளர் விமல் குமார் ரோஹித்தும் ஹர்திக்கும் இந்த விஷயத்தை எப்படி கடந்து வந்தார்கள் என்பதைப் பற்றி சுவாரஸ்யமாக பகிர்ந்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, அமெரிக்காவில் உலகக்கோப்பைக்கான வலைப்பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டுக் கொண்டிருந்தது. முதல் நாளில் ரோஹித்தும் ஹர்திக்கும் பேசிக்கொள்ளவே இல்லை. ஆனால், இரண்டாம் நாளில் நிலைமை அப்படியே மாறியது.

Hardik Pandya
இருவரும் இடைவெளிகளை தகர்த்து நெருங்கி வந்தனர். ஒரு ஓரமாக அமர்ந்து இருவரும் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருந்தனர். அந்தத் தருணம்தான் இந்த இந்திய அணியை மேன்மையானதாக மாற்றியது. அங்கே எந்த கேமராக்களும் இல்லை. ரோஹித்தும் ஹர்திக்கும் பேசிக்கொண்டிருந்தது பெருத்த ஆச்சர்யத்தை கொடுத்தது.

இருவருக்குமிடையே இடையே பிரச்னைகள் இருப்பதாக அவ்வளவு பேச்சுகள் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், அந்த ஒரு நாளுக்குப் பிறகு இருவரும் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒன்றாக பேட்டிங் பயிற்சி செய்தனர். பேட்டிங் - பௌலிங்கில் ஹர்திக்குக்கு ரோஹித் பல ஆலோசனைகளை வழங்கினார். அணிச்சூழல் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தது என்பதை என்னால் உணர முடிந்தது. இதற்கான க்ரெடிட்டை ரோஹித்துக்கும் டிராவிட்டுக்கும்தான் கொடுக்க வேண்டும். இருவரும் சீனியர் வீரர்களை சிறப்பான முறையில் கையாண்டனர். ஆகச்சிறந்த தலைமைத்துவத்துக்கான உதாரணமாக நடந்துகொண்டனர். என பேசியிருக்கிறார்.

Rohit Sharma

அணிக்குள்ளேயே கருத்து மோதல்கள் இருந்தால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை 2007 உலகக்கோப்பையிலேயே இந்திய அணி பார்த்திருக்கிறது. ரோஹித் மீண்டும் அப்படி ஒரு சூழல் ஏற்படாமல் தடுத்திருக்கிறார்.!

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்:

https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

வாட்ஸ்அப்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.