`நாங்கள் எதிரிகளல்ல; சகோதரர்கள்! - வெறுப்பரசியலுக்கு எதிராகப் பாயும் ஈட்டி!
``இங்கே எல்லாருமே விளையாடுவதற்காகத்தான் வந்திருக்கிறார்கள். ஆட்டத்தில் யாரோ ஒருவர் வெல்வதுதான் இயல்பு. அவர் பாகிஸ்தானிலிருந்து வந்தவரா அல்லது ஹரியானாவிலிருந்து வந்தவரா என்பதெல்லாம் முக்கியமில்லை. பாகிஸ்தானிலிருந்து வந்து வென்றவருக்காகவும்தான் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
`உங்கள் மகன் ஒரு பாகிஸ்தானியரை இரண்டாம் இடத்துக்குத் தள்ளித் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறாரே, இது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது? என்ற குதர்க்கமான கேள்விக்கு நீரஜ் சோப்ராவின் அம்மா இப்படித்தான் பதிலளித்தார்.
அத்தனை துறைகளிலும் நீட்சியடையச் செய்யப்பட்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் வெறுப்பரசியலின் ஒரு சிறு துளிதான் இந்தக் கேள்வி. ஆனால், விளையாட்டு அதையெல்லாம் கடந்தது. அதன் மையக் கதையாடலே ஒற்றுமை என்பதைத்தான் தன் பதிலால் நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல வெளிப்படுத்தினார் நீரஜ் சோப்ராவின் அம்மா. இதை உணர்ந்தவர்கள் மட்டும்தான் விளையாட்டில் ஜொலிக்க முடியும். இந்தியாவின் நீரஜ் சோப்ராவும் பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் இதை முழுமையாக உணர்ந்திருக்கின்றனர். அதனால்தான் இருவருக்குமிடையே உருவாகியிருக்கும் போட்டி, வெறுப்பை உமிழும் இடத்தை நோக்கி ஒருபோதும் நகரவே இல்லை.
ஓட்டப்பந்தயத்தில் ஆப்ரோ அமெரிக்கர்கள், ஜமைக்காவினர் ஆதிக்கம் செலுத்துவதைப் போல, ஈட்டி எறிதலில் ஐரோப்பியர்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். உலக அரங்கில் இந்த நிலையை இப்போது நீரஜும் நதீமும் மாற்றத் தொடங்கியிருக்கின்றனர். ஆசியாவின் ஆதிக்கத்திற்கான முன்னுரையை எழுதத் தொடங்கியிருக்கின்றனர். சமீபத்தில், ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வெல்ல, அர்ஷத் நதீம் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
நீரஜ் சோப்ரா 88.17 மீட்டருக்கு ஈட்டியை எறிய, அர்ஷத் நதீம் 87.82 மீட்டருக்கு எறிந்தார். மூன்றாம் இடத்தை செக் குடியரசைச் சேர்ந்த வீரர் பிடித்தார். போட்டி முடிந்த பிறகு அந்த செக் குடியரசு வீரரும் நீரஜ் சோப்ராவும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அர்ஷத் நதீம் வேறு எங்கோ நின்றுகொண்டிருக்க... வாஞ்சையோடு அழைத்துத் தோளில் கைபோட்டு போஸ் கொடுத்தார் நீரஜ் சோப்ரா.

நீரஜ் சோப்ராவுக்கும் அர்ஷத் நதீமுக்குமான பந்தம் 2016-ல் நடந்த தெற்காசியப் போட்டிகளின் போதே தொடங்கிவிட்டது. அதிலிருந்து பல்வேறு போட்டிகளில் ஆடியிருக்கின்றனர். ஒவ்வொரு போட்டியின் போதுமே இருவருக்குமிடையேயான நட்பு இறுக்கமாகிக்கொண்டேதான் இருக்கிறது. அர்ஷத் நதீம் நீரஜ் தன்னுடைய சகோதரராகவே எல்லா இடத்திலும் அடையாளப்படுத்தினார்.
கடந்த காமன்வெல்த் போட்டியில் காயம் காரணமாகக் களமிறங்கவில்லை, நீரஜ் சோப்ரா. அந்தப் போட்டியில் 90.18 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து அர்ஷத் நதீம் தங்கம் வென்றார். வெற்றிக்குப் பிறகு பேசிய அர்ஷத், `நான் வென்றுவிட்டேன். மகிழ்ச்சிதான். ஆனால், நீரஜ் இங்கே இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இருவருக்குமிடையேயான போட்டி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். கடவுளின் ஆசியால் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றார் உருக்கமாக.
நீரஜும் இதே போன்றுதான். அர்ஷத்தையும் பாகிஸ்தான் வீரர்களையும் அந்நிய நாட்டவர்களாகப் பார்ப்பதே இல்லை. பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக ஆடினால் உடனே தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லும் வழக்கத்தையும் வைத்திருக்கிறார். `அர்ஷத் சிறப்பாக ஈட்டி எறிந்ததில் எனக்குப் பெரு மகிழ்ச்சி. நானும் அர்ஷத் நதீமும் பேசினால் இந்த விளையாட்டில் இருநாடுகளின் வளர்ச்சியைப் பற்றியும்தான் பேசிக்கொள்வோம். ஈட்டி எறிதலில் ஐரோப்பியர்கள் ஒரு பெரிய இடத்தைப் பிடித்திருந்தனர். இப்போது அந்த இடத்தை நாங்கள் பிடித்திருக்கிறோம் என உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி முடிந்த பிறகு பெருமிதம் பொங்கப் பேசினார் நீரஜ் சோப்ரா.

இவர்கள் இருவரும் இவ்வளவு நெருக்கம் காட்டினாலும் இருவருக்குமிடையே பிரச்சனையைக் கிளப்பிவிடும் வேலைகளும் பல சமயங்களில் ஜரூராக நடந்திருக்கிறது. 2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அந்தச் சமயத்தில் நீரஜ், `நான் முதல் த்ரோவை முடித்த பிறகு என்னுடைய ஈட்டியைக் காணவில்லை எனக் கூறியிருந்தார். அவருடைய ஈட்டியை அர்ஷத் நதீம் எடுத்துப் பயிற்சி செய்த வீடியோ வெளியானது. உடனே இணையவாசிகள், `இந்திய வீரரைத் தோற்கடிக்க பாகிஸ்தான் வீரர் சதி என சகட்டு
மேனிக்கு சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கினர். உடனே, `உங்களின் வெறுப்பையும் தேவையற்ற கருத்தாக்கங்களையும் பரப்ப என்னைப் பயன்படுத்தாதீர்கள். ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையுமே விளையாட்டு எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது என நெத்தியடி கொடுத்தார் நீரஜ் சோப்ரா.
`நீரஜ் சோப்ரா மட்டும் பாகிஸ்தானில் வந்து ஒரு போட்டியில் கலந்து கொண்டால் அவரை எங்களின் அர்ஷத் நதீமைப் போன்றே நாங்கள் கொண்டாடித் தீர்ப்போம் என்கிறார் அர்ஷத் நதீமின் பயிற்சியாளர்.
அர்ஷத்தும் நீரஜும் ஈட்டி வீசிக் கிழித்தெறிவது வெறுப்பரசியலைத்தான். `நாங்கள் சகோதரர்கள்
- இதுதான் அவர்கள் சொல்ல வரும் செய்தி.
அனைவருமே இப்படி மாறட்டும்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

