Neeraj Chopra: அர்ஷத்துடன் நான் தோற்பது இதுவே முதல்முறை; ஆனால்... - நீரஜ் சோப்ரா
பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கம் வென்றிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் மிகச்சிறப்பாக செயல்பட்டு 92.97 மீட்டருக்கு வீசி முதல் இடத்தைப் பிடித்து தங்கம் வென்றுள்ளார். 89.45 மீட்டருக்கு வீசிய நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். கிரேனேடிய வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 எறிந்து வெங்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். நீரஜ் சோப்ரா கட்டாயம் தங்கம் வெல்வார், தன்னுடைய ஒலிம்பிக்ஸ் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளி வென்றுள்ளார்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் நீரஜ் சோப்ரா, “நாட்டிற்காக பதக்கம் வெல்வதே மகிழ்ச்சிதான். ஆனால், என் ஆட்டத்தைச் சற்று மேம்படுத்த வேண்டும் என்பதை நான் உணர்கிறேன். நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஆனால் சில விஷயங்களில் கவனம் செலுத்தத் தவறிவிட்டேன். இனி அதில் சரியாக கவனம் செலுத்த வேண்டும். இன்று வேண்டுமானால் நம் தேசிய கீதம் ஒலிம்பிக்கில் ஒலிக்காமல் போயிருக்கலாம். ஆனால், நிச்சயமாக வருங்காலத்தில் ஒலிக்கும். ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் ஒரு நாள் வரும். இது அர்ஷத் நதீமுக்கான நாள்” என்று பேசியிருக்கிறார்.
மேலும், "2016 ஆம் ஆண்டு முதல் அர்ஷத்த்துடன் போட்டியிடுகிறேன், ஆனால் நான் அவரிடம் தோற்பது இதுவே முதல் முறை. இந்த வெற்றிக்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இன்று என்னைவிடவும் சிறப்பாக ஆடியிருக்கிறார். இது அவருக்கான நாள், அவருக்கான வெற்றி" என்று கூறியிருக்கிறார்.
நீரஜ் சோப்ராவின் தந்தை சதீஷ்குமார், "ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான நாள் வரும். இன்று பாகிஸ்தானின் நாள். ஆனால், நாங்கள் வெள்ளி வென்றது எங்களுக்குப் பெருமையான விஷயம்.

நீரஜ் சோப்ராவிற்குக் காயம் ஏற்பட்டிருந்தபோதிலும் களத்தில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். நாட்டுக்காக வெள்ளி வென்றுள்ளார். நாங்கள் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளோம். இளைஞர்கள் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார் நீரஜ்" என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


