Vinesh Phogat: அம்மா... உங்களுடைய கனவு நொறுங்கிவிட்டது! - ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் உருக்கம்

ஒலிம்பிக்ஸிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்திலிருந்து முழுமையாக ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.
வினேஷ் போகத்

வினேஷ் போகத் நடப்பு ஒலிம்பிக்ஸின் மல்யுத்தத்தில் 50 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் கலந்துகொண்டார். ஆரம்பத்திலிருந்தே மிகச்சிறப்பாக ஆடி வந்தார்.

ரவுண்ட் ஆப் 16 சுற்றில் தோல்வியையே அறியாத ஜப்பான் வீராங்கனை சுசாகியை அற்புதமாக வீழ்த்தியிருந்தார். அப்போதே இந்த ஒலிம்பிக்ஸில் வினேஷ் போகத் சாதிக்கப்போகிறார் எனும் நம்பிக்கை அனைவருக்கும் உண்டாகிவிட்டது. காலிறுதியில் உக்ரைன் வீராங்கனைக்கு எதிராக கடுமையாகப் போராடி சவாலான அந்தப் போட்டியை 7 - 5 என வென்றார். அரையிறுதிப் போட்டியில் கியூபா வீராங்கனைக்கு எதிராக ரொம்பவே ஆதிக்கமாக ஆடி 5 - 0 என வென்றார். இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார். பதக்கத்தையும் உறுதி செய்தார்.

இறுதிப்போட்டிக்கு முன்பாக நடந்த பரிசோதனையின் போது வினேஷ் போகத் அவர் இருக்க வேண்டிய 50 கிலோவை விட 100 கிராம் அதிக எடையோடு இருந்தது தெரிய வந்திருக்கிறது. இந்த எடை சரிபார்க்க வீரர் வீராங்கனைகள் வராமல் இருந்தாலோ, அந்த எடைப்பிரிவிக்கு அதிகமான எடையில் இருந்தாலோ அவர்கள் முழுமையாக போட்டியிலிருந்தே தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். மேலும், அந்தத் தொடரின் கடைசி இடம் மட்டுமே அந்த வீராங்கனைக்கு வழங்கப்படும். இதுதான் விதிமுறை. இதன்படியே வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

வினேஷ் போகத்

வினேஷ் போகத்துக்கு ஆதரவாக ஒட்டுமொத்த இந்தியாவுமே நின்றுகொண்டிருக்கும் இந்த சமயத்தில் திடீரென அவர் மல்யுத்தத்தில் இருந்தே ஓய்வுபெறப்போவதாக அறிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது,

माँ कुश्ती मेरे से जीत गई मैं हार गई माफ़ करना आपका सपना मेरी हिम्मत सब टूट चुके इससे ज़्यादा ताक़त नहीं रही अब।

अलविदा कुश्ती 2001-2024

आप सबकी हमेशा ऋणी रहूँगी माफी

— Vinesh Phogat (@Phogat_Vinesh) August 7, 2024
"அம்மா... மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். உன்னுடைய கனவு, என்னுடைய நம்பிக்கை எல்லாமே உடைந்து விட்டது. என்னிடம் இதற்கு மேலும் வலிமை இல்லை. மல்யுத்தத்திலிருந்து விடைபெறுகிறேன் (2001-2024). உங்கள் அத்தனை பேருக்கும் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்" என வினேஷ் கூறியிருக்கிறார்.

வினேஷ் போகத்தின் ஓய்வு முடிவைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.