Vinesh Phogat: `நொறுங்கிய இதயம்! - வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்த ஒலிம்பிக்ஸ் - காரணம் என்ன?
வினேஷ் போகத் மல்யுத்தத்தில் தங்கம் பதக்கம் வெல்வார் என ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் பாரிஸிலிருந்து ஓர் அதிர்ச்சிகரமான செய்தி இடியாக இறங்கியிருக்கிறது. வினேஷ் போகத் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமான எடையோடு இருந்ததால் அவர் இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதன்மூலம் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பையும் இழந்திருக்கிறார்.
வினேஷ் போகத் மல்யுத்தத்தில் ஃப்ரீ-ஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டு ஆடி வருகிறார். ரவுண்ட் ஆப் 16 சுற்றில் தோல்வியையே அறியாத ஜப்பான் வீராங்கனை சுசாகியை அற்புதமாக வீழ்த்தியிருந்தார். அப்போதே இந்த ஒலிம்பிக்ஸில் வினேஷ் போகத் சாதிக்கப்போகிறார் எனும் நம்பிக்கை அனைவருக்கும் உண்டாகிவிட்டது. காலிறுதியில் உக்ரைன் வீராங்கனைக்கு எதிராகக் கடுமையாக போராடி சவாலான அந்தப் போட்டியை 7 - 5 என வென்றார். அரையிறுதிப் போட்டியில் கியூபா வீராங்கனைக்கு எதிராக ரொம்பவே ஆதிக்கமாக ஆடி 5-0 என வென்றார். இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார். இதன் மூலம் பதக்கத்தையும் உறுதி செய்தார்.
It is with regret that the Indian contingent shares news of the disqualification of Vinesh Phogat from the Women’s Wrestling 50kg class. Despite the best efforts by the team through the night, she weighed in a few grams over 50kg this morning. No further comments will be made…
— Team India (@WeAreTeamIndia) August 7, 2024
இப்படியொரு நிலையில்தான் பாரிஸிலிருந்து அதிர்ச்சிகரமான செய்தி வந்திருக்கிறது. இறுதிப்போட்டியான இன்றைய நாளுக்கு முன்பாக நடந்த பரிசோதனையின் போது வினேஷ் போகத் அவர் இருக்க வேண்டிய 50 கிலோவை விட 100 கிராம் அதிக எடையோடு இருந்தது தெரிய வந்திருக்கிறது. போட்டிக்கு முன்பாக ஒவ்வொரு நாளும் வீரர் வீராங்கனைகளின் எடை சரிபார்க்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த எடை சரிபார்க்க வீரர் வீராங்கனைகள் வராமல் இருந்தாலோ, அந்த எடைப்பிரிவிக்கு அதிகமான எடையில் இருந்தாலோ அவர்கள் முழுமையாகப் போட்டியிலிருந்தே தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். மேலும், அந்தத் தொடரின் கடைசி இடம் மட்டுமே அந்த வீராங்கனைக்கு வழங்கப்படும். இதுதான் விதிமுறை.
நேற்றுதான் வினேஷ் தனது ரவுண்ட் ஆப் 16, காலிறுதி, அரையிறுதி என 3 போட்டிகளில் ஆடியிருந்தார். இந்தப் போட்டிகளுக்கு முன்பாக பரிசோதிக்கையில் சரியாக 50 கிலோ எடையே இருந்திருக்கிறார். ஆனால் போட்டிகளுக்குப் பிறகு பரிசோதிக்கையில் 52 கிலோவாக இருந்ததிருக்கிறார். இதனால் ஒரே இரவில் இரண்டு கிலோ எடையைக் குறைக்க வேண்டிய நிலை. வினேஷூம் எவ்வளவோ கடுமையாகப் பயிற்சிகளை செய்தும் அவரால் முடியவில்லை. 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் இப்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
.jpg)
இந்திய ஒலிம்பிக்ஸ் சம்மேளனமே வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. அதுபோக, வினேஷின் தனிப்பட்ட உணர்வுக்கு மதிப்பு கொடுக்குமாறும் கேட்டிருக்கிறார்கள். வினேஷ் தரப்பில் யாராவது வெளியில் வந்து பேசினால்தான் என்ன நடந்தது என்பது முழுமையாகத் தெரியும்.
இந்தியாவுக்கு இது ஒரு பேரதிர்ச்சி!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

