Neeraj Chopra: `வந்தான்... வென்றான்! - ஒரே வீச்சில் இறுதிப்போட்டி; அசத்திய நீரஜ் சோப்ரா!
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா மீதுதான் இருப்பதிலேயே அதிக எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸை போலவே இந்த முறையும் தங்கம் வெல்வாரா என்பதுதான் அனைவரின் ஆவலும்! அதற்கு முதற்கட்டமாக தகுதிச்சுற்றில் நீரஜ் ஆட வேண்டியிருந்தது. இந்தத் தகுதிச்சுற்றில் மிகச்சிறப்பாக ஆடி ஒரே வீச்சில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார் நீரஜ் சோப்ரா.
ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் மொத்தமாக 32 வீரர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தனர். 84 மீட்டர் என்பதுதான் இறுதிப் போட்டிக்குத் தகுதிப்பெறுவதற்கான இலக்கு. அந்த இலக்கை எட்டும் வீரர்கள் அல்லது டாப் 12 வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள். இந்தியா சார்பில் கிஷோர் ஜேனாவும் நீரஜ் சோப்ராவும் கலந்துகொண்டனர். கிஷோர் க்ரூப் A-வில் இருந்தார். அதனால் அவர் முதலிலேயே ஆட்டத்தில் கலந்துகொண்டார். முதல் வீச்சிலேயே 80.73 மீட்டர் தூரத்தை அவர் எட்டினார். இதுதான் அவரின் பெஸ்ட்டாகவும் அமைந்தது. இரண்டாவது வாய்ப்பில் ஃபவுல் ஆனார். மூன்றாவது வாய்ப்பில் 80.21 மீ-க்கு வீசியிருந்தார். கிஷோரால் 84 மீட்டரையும் தாண்ட முடியவில்லை, டாப் 12 இடத்துக்குள்ளும் வர முடியவில்லை.
நீரஜ் சோப்ரா க்ரூப் B இல் இருந்தார். முதல் க்ரூப் ஆட்டங்கள் முடிந்த பிறகு இந்த க்ரூப் ஆட்டங்கள் தொடங்கின. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய நீரஜ் சோப்ரா தனது முதல் வீச்சிலேயே 89.34 மீட்டருக்கு வீசினார். ஆட்டத்தில் அதுவரைக்கும் யாருமே இவ்வளவு தூரம் வீசவில்லை. இதே க்ரூப்பில் இருந்த கிரெனாடாவைச் சேர்ந்த ஆண்டர்சம் பீட்டர்ஸ் 88.63 மீட்டருக்கு வீசினார். க்ரூப் A வில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.76 மீட்டருக்கு வீசினார். நீரஜின் க்ரூப்பிலேயே இருந்த பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 86.59 மீட்டருக்கு வீசியிருந்தார். இந்த வீரர்களெல்லாம் தங்களின் முதல் வாய்ப்பிலேயே இந்தத் தூரத்தை எட்டி எந்தச் சிரமமும் இல்லாமல் இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெற்றிருந்தனர்.
.jpg)
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 83.50 மீட்டர் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறுவதற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அங்கேயும் நீரஜ் சோப்ரா தன்னுடைய முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக வீசி இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெற்றிருந்தார். ஆனாலும் இங்கே பாரிஸில் நீரஜ் வீசியிருக்கும் இந்த தூரம் அனைவரையும் அசர வைத்திருக்கிறது. டோக்கியோவில் தங்கம் வென்ற போதே நீரஜ் 89.58 மீட்டர் தூரமே வீசியிருந்தார். இங்கே தகுதிச்சுற்றிலேயே 89.34 மீட்டர் தூரத்துக்கு வீசியிருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக 87 - 89 மீட்டருக்குள் தொடர்ச்சியாக சீராக வீசி வந்திருக்கிறார் நீரஜ். அந்த ஒழுங்கை இங்கேயும் கடைப்பிடித்திருக்கிறார். மேலும், இறுதிப்போட்டி முழுமையாக வேறுமாதிரிதான் இருக்கும் என்றாலும் இங்கே தகுதிச்சுற்றில் வேறெந்த வீரரும் நீரஜை விடத் தூரமாக வீசவில்லை என்பது இந்த முறையும் நீரஜின் மீது ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

நீரஜ் மீண்டும் தங்கம் வெல்வாரா? உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

