Paris Olympics:``இவ்வளவு தூரம் வந்தால் கட்டாயம் வெல்ல வேண்டும் - பிரகாஷ் படுகோனே காட்டம்!
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் நேற்றைய நாளில் பேட்மிண்டன் வெண்கலப்பதக்கப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் மலேசிய வீரருக்கு எதிராக களமிறங்கியிருந்தார். கட்டாயம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லக்சயா சென் தோல்வியைத் தழுவினார்.
லக்சயா சென்னின் இந்த அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு மைதானத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களை சந்தித்த இந்தியாவின் பிரபலமான பேட்மிண்டன் பயிற்சியாளர் பிரகாஷ் படுகோனே, பதக்கம் வெல்லாததற்கு அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லாதீர்கள். வீரர்கள் நீங்கள் சரியாக செயல்படுகிறீர்களா எனும் கேள்வியே நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். என காட்டமாக பேசியிருக்கிறார்.
அவர் பேசியதாவது, ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் நாம் இதற்கு முன்பும் பலமுறை நான்காம் இடம்பிடித்திருக்கிறோம். மில்கா சிங், பி.டி.உஷா போன்றோரும் நான்காம் இடம்பிடித்திருக்கின்றனர். பதக்கம் வெல்வதற்கான செயல்பாடுகள் சிறப்பாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் நாம் வேகம் எடுக்கலாம். ஆனால், இந்த சமயத்தில் வீரர்களும் தோல்விகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என நினைக்கிறேன். குறைந்தபட்சமாக நடப்பு ஒலிம்பிக்ஸ் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்ஸின் செயல்பாடுகளுக்காகவாது வீரர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தையும் விளையாட்டு சங்கங்களையும் மட்டுமே குறை சொல்லக்கூடாது. அவர்கள் என்ன செய்ய முடியுமோ அது அத்தனையையும் செய்துவிட்டார்கள். வீரர்கள்தான் சிறப்பாக செயல்படுவதில்லை. அதிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டியில் சொதப்புகிறார்கள்.
எங்களுக்கு இன்னும் வசதிகள் வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கக்கூடாது. அதற்கு பதில் வீரர்கள் தங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டும். நாம் தேவையான அளவுக்குக் கடினமாக உழைக்கிறோமா? பதக்கம் வெல்வதில் எங்கே கோட்டைவிடுகிறோம்? என்பதைப் பற்றி வீரர்கள் தங்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டும். உங்களுக்கென ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் டீம் இருக்கிறது, தனி பயிற்சியாளர்கள், உடற்தகுதி நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் என எல்லாமே கொடுத்திருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன செய்ய முடியுமென தெரியவில்லை. அமெரிக்கா உட்பட வேறெந்த நாடுமே கூட வீரர்களுக்கு இவ்வளவு வசதிகளைச் செய்து கொடுப்பதில்லை.
உங்களுக்கு எதாவது வேண்டுமெனக் கேட்கிறீர்கள் எனில் அதற்கேற்ப வென்றும் காட்டுங்கள்.

லக்சயா சென் நான்காம் இடம்பிடித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சியே இல்லை. ஆக்சல்சனே லக்சயாவை பார்த்து புகழலாம். அதற்காக இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் ஆரம்பக்கட்டத்திலேயே தோற்று வெளியேறியிருந்தால் கூட பரவாயில்லை. இவ்வளவு தூரம் வந்தால் கட்டாயம் வெல்ல வேண்டும். லக்சயா இந்த தோல்விக்கெல்லாம் காரணம் சொல்லக்கூடாது. பொறுப்பை ஏற்றுக்கொண்டு இன்னும் கடினமாக அவர் உழைக்க வேண்டும். என்றார். பிரகாஷ் படுகோனே கூறியிருப்பது பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

