Noah Lyles : `ஆஸ்துமா நோயாளி டு உலகின் அதிவேக ஓட்டக்காரன்! - நோவா லைல்ஸ் எப்படி சாதித்தார்?
அமெரிக்காவின் சீட்டன் ஹால் பல்கலைகழகத்தில் கெவின், கெய்ஸ் என இருவர் பயில்கின்றனர். கெவின் தடகள வீரர், பல்கலைகழகப் போட்டிகளில் அசத்திவிடுவார். அமெரிக்காவுக்காக ஒலிம்பிக்ஸ் தகுதிச்சுற்று வரை முன்னேறியவர். கெய்ஸூம் ஒரு தடகள வீராங்கனை அமெரிக்காவின் தேசிய அளவிலான போட்டிகளில் நிறையவே சாதித்திருக்கிறார். காலம் இருவரையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது. இருவரும் காதல் வயப்படுகின்றனர்.
இவர்களின் திருமணத்தின் போது, அநேகமாக இவர்களுக்குப் பிறக்கப் போகிற குழந்தைகள் அதிவேக ஓடும்திறனை கொண்டவர்களாக இருப்பார்கள். என்கிறார் சீட்டன் ஹால் பல்கலைகழகத்தின் தடகளப் பயிற்சியாளர் ஜான் மூன். 1995 இல் அவர்களின் திருணம் நடந்தது. இப்போது 29 ஆண்டுகள் கழித்து ஜான் மூனின் வாழ்த்து அப்படியே முழுமையாக நிறைந்திருக்கிறது.

ஆம், பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றிருக்கும் நோவா லைல்ஸ், இவர்களின் புதல்வன்தான். இந்த நொடியில் உலகின் அதிகவேகமான மின்னல் கால்களுக்கு சொந்தக்காரர் நோவா லைல்ஸ்தான். ஒலிம்பிக்ஸின் 100 மீ ஓட்டப்பந்தயம், உலகமே உற்றுநோக்கும் ஒரு போட்டி. இதில், அமெரிக்காதான் பல முறை தங்கத்தை வென்றிருக்கிறது. அமெரிக்காவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது உசேன் போல்ட்தான்.

2008 பீஜிங் ஒலிம்பிக்ஸ் தொடங்கி 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் வரைக்கும் இந்த 100 மீ களம் அவருடையதாகத்தான் இருந்தது. அமெரிக்காவுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம்தான் மாறி மாறி கிடைத்துக் கொண்டிருந்தது. கடைசியாக 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில்தான் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் தங்கம் வென்றிருந்தார். காலம் காலமாக தாங்கள் கட்டி ஆண்ட களம் இப்போது தங்களின் கால்களின் கீழ் இல்லையே என்கிற வெறி அமெரிக்காவுக்கு எப்போதும் உண்டு. 2017 ஆம் ஆண்டு உசேன் போல்ட் ஓய்வு பெற்றுவிட்டார். ஆக, டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இழந்த இடத்தை மீண்டும் பெற்றுவிடலாம் என அமெரிக்கா எண்ணியது. ஆனால், அங்கேயும் துண்டு தவறியது. இத்தாலியைச் சேர்ந்த மார்ஷெல் ஜேக்கப் சர்ப்ரைஸாக 9.80 நொடிகளில் ஓடி தங்கத்தை அள்ளினார். அமெரிக்காவின் ஃப்ரெட் கெர்லிக்கு இரண்டாமிடமே கிடைத்தது.
இதன் பின்னணியில்தான் நோவா லைல்ஸின் வெற்றியின் முக்கியத்துவத்தைப் பார்க்க வேண்டும். நோவா லைல்ஸின் மூலம் அமெரிக்கா மீண்டும் அரியணை ஏறியிருக்கிறது. நோவா லைல்ஸ் இந்த இடத்தை அத்தனை எளிதில் எட்டிவிடவில்லை.

முதலிடம் பிடித்த நோவாவுக்கும் இரண்டாமிடம் பிடித்த ஜமைக்காவின் தாம்சனுக்கும் 0.005 நொடிகள்தான் வித்தியாசம். அதாவது ஒரு நொடியை 5000 ஆக கூறுபோட்டால் கிடைக்கும் துளிதான் இருவருக்குமான வித்தியாசம். இந்த வித்தியாசத்தை எட்ட அவர் மேற்கொண்ட பயணம் நீண்ட நெடியது.

அப்பா - அம்மா இருவருமே விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நோவாவையோ அவரது சகோதரரையோ விளையாட்டுக்குள் இழுக்க வேண்டும் என யோசிக்கவில்லை. இருவரும் தங்களுக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும், அதற்கு தாங்கள் துணை நிற்க வேண்டும் என்பதுதான் இருவரின் எண்ணமாகவும் இருந்திருக்கிறது. நோவாவை இந்த உலக அரங்கிற்குக் கொண்டு வந்ததில் அவரின் அம்மா கெய்ஸூக்குதான் அதிக பங்கு இருக்கிறது. நோவா தடகளத்தை வாழ்க்கையாகத் தேர்ந்தெடுப்பதற்கு பல காலம் முன்பாகவே கெவினுக்கும் கெய்ஸூக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. இதனால் ஒற்றை ஆளாக இருந்துதான் தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் கெய்ஸ் வளர்த்திருக்கிறார்.
நோவா லைல்ஸ் சிறுவயதில் அவ்வளவு ஆரோக்கியமான நபரும் கிடையாது. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர். மூச்சுவிடுவதில் அவருக்கு பெரும் சிரமம் இருந்திருக்கிறது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சையிலேயேதான் இருந்திருக்கிறார். மகனுக்காக பல இரவுகளில் கெய்ஸ் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறார். ஆனாலும் இளம்பிராயத்தை எட்டிய சமயத்தில் நோவா மற்றும் அவரது ஜோசப்பஸ் இருவரின் கவனமும் தடகளத்தை நோக்கி திரும்புகிறது.
விடாமுயற்சி, தீவிரப்பயிற்சியின் துணையோடு இருவருமே இதுதான் தங்களின் வாழ்க்கை என தீர்மானிக்கின்றனர். இருவருமே பள்ளிப்படிப்போடு நிறுத்திக் கொண்டு விளையாட்டுகளில் கவனம் செலுத்தத் தொடங்குகின்றனர். 200 மீ ஓட்டம்தான் நோவா லைல்ஸின் பெரும்பலம். 2014 இளையோர் ஒலிம்பிக்ஸில் 200 மீ ஓட்டத்தில்தான் தங்கம் வென்றார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 6 முறை தங்கம் வென்றிருக்கிறார். இதில் 3 முறை 200 மீ ஓட்டத்துக்காகத்தான் தங்கம் வென்றிருக்கிறார். நோவா ஒரு பெரும் நம்பிக்கையாளன்.

அவருக்கு ஓட வேண்டும், ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ள வேண்டும் என்பது மட்டும் இலக்கல்ல. அவருக்கு உசேன் போல்டின் உலகசாதனையை உடைக்க வேண்டும். ஜமைக்காவின் ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும்.
மீண்டும் இந்த ஓடுகளத்தை அமெரிக்காவின் அடிபொடியாக மாற்ற வேண்டும். அவரின் இலக்கு, லட்சியமெல்லாம் விண்ணை முட்ட வேண்டும் முடிந்தால் விண்ணை கிழித்துவிட்டு அதற்கு அப்பாலுள்ள வெளிகளையும் ஆள வேண்டும்.
இப்படியொரு மனநிலையில் இருந்தவர் 2020 வாக்கில் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். அதற்கு நிறைய காரணங்கள் இருந்தது. கொரோனாவால் அனைவருமே முடங்கியிருக்க வேண்டிய சூழல். ஒலிம்பிக்ஸ் தள்ளிப் போகிறது. அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்டு கொல்லப்பட்ட நிகழ்வு என எல்லாமுமே சேர்ந்து நோவாவை ஒரு மூலைக்குள் தள்ளுகிறது. ஆனால், நோவா தன்னுடைய மன அழுத்தத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார். அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார். மனநல ஆலோசகர்களைத் தொடர்ந்து அணுகினார். Black Lives Matter இயக்கத்தில் தன்னைத் தீவிரமாக இணைத்துக் கொண்டார். நாங்களும் மனிதர்கள்தான். இங்கே எல்லாரும் சமம்தான். என்கிற கோஷத்தை போராட்டங்களில் ஓங்கி ஒலித்தார்.
விளையாட்டுப் போட்டிகளில் கருப்பு நிற கையுறைகளை அணிந்து நிறவெறிக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டைப் பதிவு செய்தார். இங்குள்ள அநீதிகளை இன்னும் அதிகமாக எப்படி உலகிற்கு எடுத்துக்கூறலாம் என எப்போதுமே யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்த முறை இசையின் மூலம் அதைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் பாடல் கருப்பின மக்கள் அத்தனை பேரும் தங்கள் வாழ்க்கையில் சுமந்துகொண்டிருக்கும் வலியையும் பயந்தையும் விவரிக்கக்கூடியதாக இருக்கும். எனக் கூறி Black Lives Matter க்காக அவரே ஒரு பாடலைத் தயாரித்து வெளியிட்டார்.

எந்தக் காரணமும் இல்லாமல் நான் கொல்லப்பட்டேன் என்கிற செய்தியை நீங்கள் நாளை கேட்கக்கூடும். அதற்காக கொஞ்சம் மக்கள் வருத்தப்படுவார்கள். ஆனால், அதனால் அதற்காக இதெல்லாம் முடிந்துவிடாது. கொல்லப்பட்டவனாக நான் ஒருவன் மட்டுமே இருக்கமாட்டேன். இனியும் இது நடக்கும். இன்னொருவருக்குப் பிறகு இன்னொருவர் என கொல்லப்பட்டுக் கொண்டேதான் இருப்போம். இதை ஒழிக்க வேண்டும்.

இவ்வளவு வலுவாக உலகின் ஒரு சில விளையாட்டு வீரர்கள் மட்டுமே Black Lives Matter க்கு எதிராக தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
மேலும், நோவா லைல்ஸ் உலக அரங்கில் தன்னுடைய இருப்பையே கருப்பின மக்களுக்கான ஊக்கச் செய்தியாக கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். ஒரு மனிதனாக என்னுடைய அத்தனை பக்கத்தையும் வெளியே காட்ட விரும்புகிறேன். அதில் நான் கருப்பினத்தைச் சேர்ந்தவன் என்கிற பக்கமும் அடக்கம். அதனால்தான் என்னுடைய முடியை இப்படி கொஞ்சம் வித்தியாசமாக திருத்தி வைத்திருக்கிறேன். ஏனெனில், இங்கே கருப்பின சிறுவர் சிறுமிகள் தங்களின் முடியின் வழி கூட சிறுமையாக உணர்கின்றனர்.
அவர்களின் முடி அசிங்கமாகத்தான் இருக்கும் என்றே சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். அதற்காகத்தான் நான் இப்படி ஒரு ஸ்டைலில் முடி வைத்திருக்கிறேன். நான் ஒலிம்பிக்ஸ் களத்தில் ஓடுகிறேன். என்னை தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். நான் ஸ்டார் அந்தஸ்தை பெற்றிருக்கிறேன். இதன்வழி உங்களின் முடி எப்படி இருந்தாலும் அதை நீங்கள் எப்படி திருத்திக்கொண்டாலும் பிரச்சனையில்லை. நீங்கள் நன்றாகத்தான் இருப்பீர்கள் என்பதை சொல்ல விரும்புகிறேன். என்கிறார்.
நெஞ்சில் ஈட்டியை வாங்கியவனுக்கு மட்டும்தான் உயிர்போகும் வலியை உணர முடியும். நோவா லைல்ஸின் வார்த்தைகள் அவர் எதிர்கொண்ட வலிகளின் வழி வந்த வார்த்தைகள். முடியைப் பற்றி அவர் கொடுத்த அந்த ஒரு ஸ்டேட்மெண்டிலேயே அவர் ஏன் இந்த உலகத்தையே வெல்ல நினைக்கிறார் என்பதற்கான பதில் இருக்கிறது.

2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸின் 200 மீ ஓட்டத்தில் நோவா வெண்கலப் பதக்கம் மட்டுமே வெல்கிறார். அந்தப் பதக்கத்தால் நோவா லைல்ஸூக்கு எந்த உற்சாகமும் இல்லை. அந்தப் பதக்கம் அவனுக்குள் ஒரு நெருப்பைப் பற்ற வைத்தது. என்கிறார் நோவாவின் அம்மா. அது தங்கம் வெல்ல வேண்டும் என்கிற நெருப்பு.
அதற்காக 200 மீட்டரில் மட்டும் கவனம் செலுத்தாமல் 100 மீட்டர் ஓட்டத்திலும் அதிக கவனம் செலுத்துகிறார். அதற்கான ரிசல்ட்டும் கிடைக்கிறது. கடந்த ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் சாம்பியன் மார்ஷெல் ஜேக்கப்பை வீழ்த்தி தங்கம் வெல்கிறார். ஒலிம்பிக்ஸில் ஜமைக்காவின் தாம்சன் சவாலளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே தாம்சனுக்கும் நோவாவுக்கும்தான் நேற்று கடும்போட்டி.
முதல் 40 மீட்டர்களுக்கு நோவா கடைசி வீரராகத்தான் ஓடிக்கொண்டிருந்தார். 60 மீட்டர்களை கடக்கும்போது மூன்றாவது வீரர். அதன்பிறகு, கடைசி 10 மீட்டர்களில் தாம்சனுக்கும் நோவாவுக்கும்தான் போட்டியே. அதில்தான் 0.005 நொடிகளில் முந்தி நோவா தங்கத்தை வென்றிருக்கிறார். அமெரிக்காவை மீண்டும் அரியணையில் ஏற்றியிருக்கிறார்.

மேலும், இதன்வழி அனைவரும் சமம்! என்கிற செய்தியை அமெரிக்காவுக்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கே எடுத்துக்கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

