Lakshya Sen: `வானமே எல்லை... - பெரும் கனவோடு வரலாறு படைக்கக் காத்திருக்கும் இந்த லக்ஷயா சென் யார்?
21 வயதில் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருந்த அந்த இளைஞனின் கரியரில் திடீர் பின்னடைவு. அடுத்தடுத்து தோல்விகள். தொடர்ச்சியாக 8 தொடர்களில் முதல் ரவுண்டிலேயே தோற்று வெளியேறுகிறார்.
என்ன செய்வதென்றே தெரியவில்லை... என்கிற விரக்தி மனநிலைக்குச் செல்கிறார், அயர்ச்சி அடைகிறார். பெரும் கனவான ஒலிம்பிக்ஸை அடைய முடியுமோ முடியாதோ எனும் கவலை ஒரு பக்கம் வாட்டி எடுக்கத் தொடங்குகிறது. இதெல்லாம் நடந்தது பாரிஸ் ஒலிம்பிக்ஸிற்கு சில மாதங்களுக்கு முன்பு. அந்த இளைஞர் வேறு யாருமில்லை லக்ஷயா சென்தான்.

இப்போது பாரிஸ் ஒலிம்பிக்ஸில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறார். பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை அதிர்ச்சிகரமாக வெளியேறிவிட எதிர்பார்ப்பில்லாமல் களமிறங்கிய லக்ஷயா சென் அசத்தி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் உயிரைக் கொடுத்து ஆடி பேட்மிண்டன் தனிநபர் பிரிவின் அரையிறுதியை எட்டியிருக்கிறார். ஆண்கள் பிரிவில் எந்த ஒரு இந்திய வீரரும் ஒலிம்பிக்ஸில் இவ்வளவு தூரம் வந்ததில்லை. அரையிறுதியை வென்றால் லக்ஷயா சென்னுக்கு பதக்கம் உறுதி. இல்லையெனினும் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நடைபெறும். அதிலும் அவர் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸூக்கு பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய விளையாட்டு உலகில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் லக்ஷயா சென். இளம் வீரராக தன்னைவிட ரேங்கில் மேலே இருக்கும் பல வீரர்களையும் தோற்கடித்தார். 2021 இல் உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்றிருந்தார். 2022 இல், கிரிக்கெட்டில் உலகக்கோப்பைக்கு நிகராக பேட்மிண்டனில் மதிக்கப்படும் தாமஸ் கோப்பையை இந்தியா வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தார். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருந்தார். ஜெர்மன் ஓபனில் வெள்ளி, ஆல் இங்கிலாந்து தொடரில் வெள்ளி என களமிறங்கிய அத்தனை தொடர்களிலும் முத்திரையைப் பதித்தார்.

இவ்வளவு இளம் வயதில் லக்ஷயா சென் சாதித்ததற்கு முக்கிய காரணம் அவரது குடும்பம். லக்ஷயா சென்னின் அப்பா பேட்மிண்டன் வீரர் மற்றும் பயிற்சியாளர். அண்ணனும் பேட்மிண்டன் வீரர். இதனால் லக்ஷயா சென்னின் கைகளுக்கு ரேக்கெட் மிக எளிதாகவே வந்து சேர்ந்தது. உத்தரகாண்ட்டில் பிறந்திருந்தாலும் சிறுவயதிலேயே பல ஊர்களுக்கும் பயணம் செய்கிற பக்குவம் லக்ஷயா சென்னுக்கு இருந்தது. 10 வயதிலேயே இந்தியாவின் பிரபலமான பிரகாஷ் படுகோனேவின் பேட்மிண்டன் அகாடெமியில் பெங்களூருவில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்துதான் லக்ஷயா வேகம் பிடித்தார்.
எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. ரேக்கட்டை கையில் பற்றி பேட்மிண்டனை ஆடிக்கொண்டிருந்தால் மட்டுமே போதும் என நினைத்தேன். ஆனால், பயிற்சியாளர் பிரகாஷ் படுகோனேதான் என்னை ஒழுங்குப்படுத்தினார். பேட்மிண்டன் ஆடுவதென்றால் இந்த ஆட்டத்தை ஆடுவது என்று மட்டும் பொருளாகாது. வாழ்வியல்ரீதியாகவே முறையாக நடந்துக்கொண்டால் மட்டுமே பேட்மிண்டனில் வெல்ல முடியும்.

காலையில் சீக்கிரமாக எழுவதிலிருந்து அந்த ஒழுக்கம் தொடங்குகிறது. உடலை உறுதியாக வைத்திருக்க வேண்டும். மனநிலையை சீராக வைத்திருக்க வேண்டும். இதெல்லாம் சேர்ந்ததுதான் பேட்மிண்டன் என்கிற புரிதலை அவர்தான் கொடுத்தார். என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் லக்ஷயா சென்.
இளம் வயதிலேயே இவ்வளவு பக்குவமான விஷயங்களைக் கற்றுக்கொடுக்கக்கூடிய பயிற்சியாளர் வாய்த்ததால்தான் லக்ஷயா சென்னால் சிறுவயதிலேயே பல சாதனைகளை படைக்க முடிந்தது. ஆனாலும் ஒரு விளையாட்டு வீரரின் கரியர் ஒரே மாதிரியாக ஏறுமுகமாகவும் இருக்காது அல்லவா. லக்ஷயா சென்னுக்கும் பின்னடைவு ஏற்பட்டது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தவர் திடீரென சறுக்க ஆரம்பித்தார். கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் தொடங்கி தொடர்ச்சியாக 8 தொடர்களில் முதல்சுற்றிலேயே தோற்று ஒரே போட்டியோடு வெளியேறினார். லக்ஷயா சென் சீக்கிரமே உச்சத்தை எட்டி வீழ தொடங்கிவிட்டார் எனும் பேச்சுகள் எழுந்தன.
தன் மீதான சந்தேகக் கேள்விகளை அவராலேயே எதிர்கொள்ள முடியவில்லை. ஒரு போட்டிக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் லக்ஷயா சென்னின் எதிர்காலம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் ஆட்டத்தில் இன்னும் இருக்கிறேன், அவ்வளவுதான். என விரக்தியோடு கூறினார். இந்த சமயத்தில் அவரின் பயிற்சியாளராக இருந்த அனுப் ஸ்ரீதருக்கும் அவருக்குமே கருத்து மோதல் ஏற்பட்டு பிரிந்தனர். ஒலிம்பிக்ஸூக்கு தகுதிப்பெற வேண்டுமெனில் உலகத்தரவரிசையில் முதல் 16 இடங்களுக்குள் இருக்க வேண்டும் எனும் சூழலில் லக்ஷயாவின் ரேங்க் அதைத்தாண்டியும் சென்றது. 22 வயது இளைஞனுக்கு ஏற்படக்கூடாத சரிவு. லக்ஷயா எப்படி மீண்டு வரப்போகிறார் என்பதே தெரியாமல் இருந்தது.
.jpg)
மீண்டும் இந்த கதை ஆரம்பித்த இடத்துக்கே சென்றார். பிரகாஷ் படுகோனேவிடமே சென்று தன்னுடைய நிலையைக் கூறி நின்றார். உனக்கு ஒலிம்பிக்ஸூக்கு தகுதிப்பெற்றால் மட்டும் போதுமா இல்லை அங்கே சென்று தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதா? பிரகாஷ் படுகோனே கேட்க, நிச்சயம் தங்கம் வெல்ல வேண்டும்! என லக்ஷயா நம்பிக்கைக் குரலில் ஒலிக்கிறார். எனில், எதற்கு சகட்டுமேனிக்கு அத்தனை தொடர்களிலும் ஆடுகிறாய்? ரேங்கிற்காக ஆடாதே. ரேங்கிங்கை விட தங்கம் முக்கியம். அதற்காக குறி வை. என்கிறார். இருள் சூழ்ந்த வெளியில் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி நின்ற லக்ஷயாவுக்கு தெளிவு கிடைக்கிறது. சிறுவயது பயிற்சியாளர் விமல் குமாருடன் மீண்டும் இணைகிறார். 2011 கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணியின் மனநல ஆலோசகராக இருந்த பேடி அப்டனிடம் சில செஷன்களுக்கு செல்கிறார். உணவுப்பழக்கத்திலிருந்து எல்லாவற்றையும் மாற்றி மீண்டும் ஒரு ஒழுங்கிற்கு வருகிறார். பிரகாஷ் படுகோனேவின் அறிவுரைப்படி சில தொடர்களில் ஆடாமல் தவிர்க்கிறார். சிறப்பான ரிசல்ட்டுகள் கிடைக்கிறது. பிரெஞ்சு ஓபனிலும் ஆல் இங்கிலாந்து தொடரிலும் அரையிறுதி வரை முன்னேறுகிறார். ஒலிம்பிக்ஸூக்கும் தகுதிப்பெறுகிறார்.
ஒலிம்பிக்ஸிலும் அவருக்கு எக்கச்சக்க சவால்கள் காத்திருந்தது. ஒரு போட்டியில் வலுவான இந்தோனேஷிய வீரர் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். லக்ஷயா வெல்வது கடினம் என கணிக்கப்பட்டது. ஆனால், ஆக்ரோஷமான ஆட்டத்தால் முதல் இரண்டு செட்களையே வென்று அசத்திவிட்டார். அடுத்தப் போட்டியில் சக இந்திய வீரர் ஹெ.எஸ்.பிரணய்யை எதிர்கொண்டார். இங்கேயும் பிரணய்தான் பலரின் பேவரைட்டாகவும் இருந்தார். லக்ஷயா விடவில்லை. பிரணய்க்கு இடமே கொடுக்காமல் எளிதில் வென்றார். காலிறுதியில் மீண்டும் வலுவான சீன தைபே வீரர் சௌவை எதிர்கொண்டார். முதல் செட்டை தோற்றார். அவ்வளவுதான் கதை முடிந்தது என்கிற சூழலில், போராடினார்.

உயிரைக் கொடுத்து ஆடினார். 75 நிமிடங்கள் நீடித்த அந்த போட்டியின் கடைசி இரண்டு செட்டையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போது அரையிறுதியில் உலகின் நம்பர் 3 வீரர் விக்டர் ஆக்சல்சனை எதிர்கொள்கிறார். ஆக்சல்சன் டோக்கியோவில் தங்கம் வென்றவர். ஆக்சல்சனும் லக்ஷயாவும் 8 முறை மோதியிருக்கின்றனர். 7 முறை ஆக்சல்சன் தான் வென்றிருக்கிறார். ஆனாலும் லக்ஷயாவின் மீது நம்பிக்கை இருக்கிறது. Resilience எனப்படும் மீண்டெழும் போராட்டக்குணம் அவரிடம் அதிகமாகவே இருக்கிறது. அதனாலயே அவர் ஒரு ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிக்காட்டுவார் என நம்பலாம்.

லக்ஷயா சென்னின் இடது காதின் ஓரத்தில் Sky is the limit என டேட்டூவாக எழுதியிருப்பார். உண்மைதான் தோல்விகளைக் கண்டு துவழாமல் மீண்டெழும் போராட்டக்குணம் மிக்கவர்களுக்கு வானம் மட்டும்தான் எல்லையாக இருக்க முடியும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

