Dhoni: ``என் ரசிகர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்! - ஐ.பி.எல் ஆடுவது பற்றி தோனி விளக்கம்

ஐ.பி.எல் 2025 ஏலத்திற்கான பி.சி.சி.ஐ-யின் விதிகளைப் பொறுத்து சி.எஸ்.கே-வுடன் வருங்காலத்தில் விளையாடுவது குறித்த முடிவு இருக்கும் என்று தோனி கூறியிருக்கிறார்.

2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனி 5 கோப்பைகளை வென்று கொடுத்து சாதனை படைத்திருக்கிறார். 42 வயதான தோனி அவர் சமீப காலமாக முழங்கால் வலியால் முழுமையாக பேட்டிங் செய்வதில்லை. அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருத்துராஜ் கையில் ஒப்படைத்து சாதாரண கீப்பராக மட்டுமே விளையாடினார். இதனிடையே தோனியின் ஓய்வு குறித்த பேச்சுகளும் எழுந்தன.

தோனி

2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள் மத்தியிலும் நிலவுகிறது. இந்நிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு பதிலளித்த தோனி, " 2025 ஐபிஎல் சீசனில் எத்தனை வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள் என்பதைப் பொறுத்தே நான் விளையாடுவேன். “தக்க வைக்கப்படும் வீரர்களுக்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. அந்த விதிமுறைகள் பொறுத்துதான் முடிவுகள் எடுக்கப்படும்.

அந்த முடிவை நாங்கள் அணியின் நன்மைக்காக எடுப்போம். ஏனெனில் நாளின் இறுதியில் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம். அதனால் விதிமுறைகள், தக்க வைப்புகளின் அடிப்படையில் சிஎஸ்கே அணிக்கு எது சிறந்தது என்பதைப் பார்த்து அதற்கு ஏற்றவாறு நல்ல முடிவை எடுப்போம்” என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து 2025 ஆம் ஆண்டிற்கான ஏலத்தில் 4க்கு பதில் 5 முதல் 7 வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதியளித்தால் நான் விளையாடுவேன் என்று தோனி கூறியிருக்கிறார்.

தோனி

இதனைத்தொடர்ந்து ரசிகர்களின் அன்பு குறித்து பேசிய தோனி, " THALA FOR A REASON என்ற டிரெண்டை இன்ஸ்டாகிராம் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். என் ரசிகர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். நான் சமூக வலைதளங்களில் போராடி என்னை தற்காத்துக்கொள்ள வேண்டிய அவசியமே எனக்கு ஏற்படவில்லை. தக்க சமயத்தில் எனக்காக எனது ரசிகர்களே போராடுகிறார்கள். அவர்கள் என்னை அதிகம் கொண்டாடுகிறார்கள். நான் சமூக வலைதளங்களில் அதிகம் பங்களிக்கவில்லை என்றாலும் எனது பதிவிற்காகக் காத்திருக்கிறார்கள்" என்று நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.