Manu Bhaker: `முதல் தோல்வி; பயிற்சியாளருடன் மோதல்! - தடைகள் கடந்து சாதித்த மனு பாக்கரின் கதை!

போர்க்களத்தில் நிற்கும் படைவீரன் கையில் ஏந்தியிருக்கும் ஆயுதம் திடீரென பழுதுபட்டால் எப்படியிருக்கும்? அப்படியொரு நிலைதான் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மனு பாக்கருக்கு ஏற்பட்டிருந்தது.

திடீரென துப்பாக்கி கோளாறானதால் அதை சரிசெய்ய மனு சில நிமிடங்களை எடுத்துக் கொண்டார். 6 நிமிடங்கள் அதிலேயே விரயமானது. விளைவு, 10 மீ ஏர் பிஸ்டலின் முதல் சுற்றிலேயே மனு எலிமினேட் ஆகியிருந்தார்.

Manu Bhaker

போதாக்குறைக்கு அவருடைய பயிற்சியாளரான ஜஸ்பால் ராணாவுக்கும் அவருக்குமே கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது. அதனால் கலந்துகொண்ட இன்னும் இரண்டு போட்டுகளிலும் கூட அவரால் சிறப்பாக ஆட முடியவில்லை. பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. மனு பாக்கர் மீது அப்போது மிகுந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருந்தது. ஏனெனில், அந்த ஒலிம்பிக்ஸுக்கு முன் மனு சுட்டதெல்லாம் வெற்றி மட்டுமே.

மூச்சை இழுத்துவிட்டு ஸ்டாண்ட் எடுத்து இடக்கையை பேன்ட் பாக்கெட்டுக்குள் விட்டு வலக்கையை மேலிருந்து நிதானமாக இறக்கி டார்கெட்டை லாக் செய்யும் போது, ஆள் அரவமற்ற அடர்ந்த காட்டில் சஞ்சலமற்று கிடக்கும் நதிக்கு நிகரான அமைதியையும் நிதானத்தையுமே அவரிடம் காண முடியும். சீறிப்பாயும் தோட்டாவிற்கான மூலதனம் இந்த நிதானம்தான்!

16 வயதில் ஜென் நிலையில் இப்படி ஒரு வீராங்கனை கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் முந்தைய ரெக்கார்டுகளையெல்லாம் உடைத்து 9 தங்கங்களை வென்ற போது, மொத்த தேசமும் மிரண்டு போனது.

ஹரியானாவின் ஜாஜர் பகுதியில் பிறந்த மனு முதலில் தேந்தெடுத்தது துப்பாக்கிச் சுடுதலை அல்ல. கிரிக்கெட் தொடங்கி நீச்சல், கராத்தே, பாக்ஸிங் என பலதரப்பட்ட விளையாட்டுகளில் பயிற்சி பெற்றிருக்கிறார். எல்லா தோட்டாக்களும் எல்லா துப்பாக்கிகளுக்கும் செட் ஆகிவிடாதே! அந்தந்த துப்பாக்கிகளுக்கு ஏற்ற பிரத்யேகமான தோட்டாக்கள் மட்டும்தான் அவற்றுக்கு செட் ஆகும். மனு எத்தனையோ விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினாலும் அவருக்கு கனகச்சிதமாக செட் ஆனது என்னவோ துப்பாக்கிச் சுடுதல்தான்.

Many Bhaker

இளையோருக்கான ஒலிம்பிக்கில் தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம், காமென்வெல்த் போட்டியில் தங்கம் என இவரின் தோட்டாக்கள் குறி வைத்தது தங்கத்தை மட்டும்தான். பெரிய தொடர்களில் இதுவரை 14 தங்கங்ளை வென்றிருக்கும் மனு 4 வெள்ளிகளை வென்றிருக்கிறார். ஒரு வெண்கலம் கூட அவரது பதக்கப் பட்டியலில் இல்லை. மனு பாக்கரின் திறமைக்கு சாட்சி இதுதான். 99% தங்கம் வென்றுவிடுவார் மிஸ் ஆனால் வெள்ளி உறுதி. இதனால்தான் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அவர் மீது அத்தனை எதிர்பார்ப்பு. ஆனால், அத்தனையும் பொய்த்துப் போனது. மனு பாக்கர் என்றில்லை, டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் பங்குகொண்ட துப்பாக்கிச்சுடுதல் முகாமே மொத்தமாக கோட்டைவிட்டது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸுக்குப் பிறகு நான் கடும் அதிருப்திக்குள்ளாகியிருந்தேன். அதிலிருந்து மீண்டு நிறைய காலம் பிடித்தது. என மனு பாக்கர் வெண்கலம் வென்றுவிட்டு பேசியிருக்கிறார். அந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் சோகத்திற்குப் பிறகு மனு கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார். துப்பாக்கிச்சுடுதலை விட்டு விட்டு முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தலாம் எனும் முடிவையெல்லாம் எடுத்திருக்கிறார். ஆனால், காலம் எல்லாவற்றையும் மாற்றியது. காற்றை கிழித்து பழகிய தோட்டாக்கள் வெற்று பெட்டிக்குள் எப்படி அடங்கியிருக்கும்? நடந்ததையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால் இப்படியேத்தான் இருக்க வேண்டும். இனி என்ன என்பதைப் பற்றி யோசிக்க நினைக்கிறார்.

செய்த தவறுகள் என்னவென்பதை ஆழமாக யோசித்துத் தீர்வைத் தேடி நகர்கிறார். தனது பழைய பயிற்சியாளரான ஜஸ்பால் ராணாவிடமே மீண்டும் செல்கிறார். மனம் வருந்துகிறார். ராணாவும் மனுவுடன் மீண்டும் கைகோக்கிறார். மீண்டும் விட்ட இடத்திலிருந்தே பயிற்சியைத் தொடங்குகின்றனர். உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம், உலகக்கோப்பையில் வெண்கலம் என மனு மீண்டும் மெதுமெதுவாக வேகம் கூட்ட ஆரம்பித்தார்.
Manu

கடந்த முறை பெரும் ஏமாற்றமே மிஞ்சியதால் இந்த முறை அவர் மீது அவ்வளவாக எதிர்பார்ப்பு இல்லை. அதுவே அவருக்கு ஒரு சௌகரியத்தையும் நிதானத்தையும் கொடுத்தது. இறுதிப்போட்டியில் துப்பாக்கியை கையில் ஏந்திய தருணத்திலிருந்து எந்த உணர்வையும் அவர் வெளிக்காட்டவில்லை. வெண்கலப்பதக்கம் உறுதியான பிறகே அவர் முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்பட்டது. எதைப் பற்றியும் யோசிக்காதே. காரியத்தில் மட்டும் கவனமாக இரு. முடிவுகளைப் பற்றி கவலைக் கொள்ளாதே. என்பதை மட்டும்தான் மனதில் நிறுத்திக் கொண்டேன் வெற்றிக்குப் பிறகு பேசியிருக்கிறார்.

முதல் தோல்வியோடு முடங்கிவிடாமல் தொடர்ந்து முயன்றதால் மட்டுமே 22 வயதில் இந்தியாவுக்காக ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச்சுடுதலில் முதல் பதக்கத்தை வென்று கொடுத்த வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார்.

Manu Bhaker

இந்த முறை வெண்கலம் வென்றிருக்கிறேன். வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு நிறைய வெல்வேன். என ஆனந்த கண்ணீரோடு கூறியிருக்கிறார் மனு பாக்கர். நிச்சயம் சாதிப்பார்! வாழ்த்துகள் மனு!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.