Paris Olympics: சோலார் மின்சாரம்; மின்சார வாகனங்கள்; 9000 மரங்கள்- அசத்தும் ஒலிம்பிக்ஸ் கிராமம்!
ஜூலை 26 முதல் பாரிஸ் நகரத்தில் கோலாகலமாகத் தொடங்கவிருக்கிறது ஒலிம்பிக்ஸ். இது ஒரு உலகத் திருவிழா. உலகெங்கும் உள்ள 206 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்குபெற இருக்கின்றனர். இவர்களோடு இவர்களுக்கான பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், உதவியாளர்கள் எனச் சேர்த்தால் மொத்தமாக 14,500 க்கும் மேற்பட்ட நபர்கள் பாரிஸ் நகரத்தில் முகாமிட்டிருக்கின்றனர். இத்தனை பேரையும் முறையாக நிர்வகித்து உபசரித்து போட்டிகளெல்லாம் முடிந்த பிறகு சௌகரியமாக வழியனுப்பி வைக்க வேண்டியது போட்டியை நடத்தும் பிரான்ஸ் அரசின் பொறுப்பு.
இதற்காகவே பாரிஸ் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக்ஸ் கிராமத்தைப் பார்த்துப் பார்த்து கட்டியிருக்கிறார்கள். தங்களின் விருந்தினர்களுக்கு எந்த அசௌகரியமும் இல்லாத வகையில் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் பொருட்டு அவர்கள் உருவாக்கியிருக்கும் அந்த கிராமத்தைப் பற்றிய தகவல்கள் எல்லாமே ஆச்சரியத்தையே கொடுக்கிறது.

சாண்ட் ஓனி, சாண்ட் ஒன், இல் சாண்ட் ஓனி என பாரிஸ் நகரத்தின் மூன்று பகுதிகளில் 54 ஹெக்டேர் அளவுக்குப் பிரமாண்டமாக ஒலிம்பிக்ஸ் கிராமத்தை அமைத்திருக்கிறார்கள். இங்கேதான் 14,500 பேருக்குமான தங்குமிடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு அரங்கங்கள் என எல்லாமே அமைந்திருக்கின்றன. இங்கே தங்கியிருக்கும் வீரர், வீராங்கனைகள் 30 நிமிடத்தில் மைதானங்களுக்குச் சென்றுவிட முடியும். அவர்களின் போக்குவரத்து சௌகரியத்தையும் மனதில் வைத்தே தங்குமிடங்களைக் கட்டியிருக்கிறார்கள்.
கார்பன் வெளியேற்றத்தை வெகுவாக குறைக்க வேண்டும் என்பதை இந்த ஒலிம்பிக்ஸின் முக்கிய நோக்கமாக வைத்திருக்கிறார்கள். அதனடிப்படையில் காலநிலை மாற்றத்தையெல்லாம் மனதில் வைத்து 2050 காலகட்டத்தில் கட்டப்படுவதைப் போல இப்போது இந்த கிராமம் கட்டப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

வீரர், வீராங்கனைகளை மைதானத்துக்கு அழைத்து வரவும் மீண்டும் கிராமத்திற்கு அழைத்து வரவும் மின்சாரத்தில் இயங்கும் 55 பேருந்துகளை மட்டுமே பயன்படுத்தவிருக்கின்றனர். தங்கும் அறைகளிலுமே டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பயன்படுத்தியதை போல கார்ட்போர்ட் அட்டைகளால் செய்யப்பட்ட படுக்கைகளையே வைத்திருக்கின்றன. மேலும், மேஜைகளையுமே இறகுப்பந்துக்குப் பயன்படுத்தப்படும் இறகுகளைக் கொண்டும், இருக்கைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகளையும் பயன்படுத்தியே தயாரித்திருக்கின்றன.
முதலில் இந்த ஒலிம்பிக்ஸ் கிராமம் முழுவதும் வழக்கமான குளிர்சாதன வசதியைச் செய்ய வேண்டாம் எனவும் தீர்மானித்திருந்தனர். அதனால் ஏற்படும் கார்பன் வெளியேற்றத்தைத் தவிர்க்கும்பொருட்டு குளிர்ந்த தண்ணீரைத் தரைதளத்திலிருந்து குழாய்கள் மூலம் வேகமாகச் செலுத்திக் குளிரூட்டும் முறையை அறிமுகப்படுத்தியிருந்தனர். இதன்மூலம் வெளியில் இருப்பதை விட 6 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பநிலையை ஒலிம்பிக்ஸ் கிராமத்துக்குள் வைத்திருக்கலாம் என உறுதியாகவும் கூறினர். ஆனால், இதற்குப் பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். குளிர்சாதன வசதி இல்லாமல் வீரர்களின் தூக்கம் பாதிக்கப்பட்டால் போட்டிகளில் அவர்களின் செயல்பாடும் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்தனர். இதனால் இப்போது கடைசி நிமிடத்தில் ஒலிம்பிக்ஸ் கிராமம் முழுவதும் குளிர்சாதன வசதியைச் செய்திருக்கின்றனர்.
இன்னும் சில விஷயங்களை எண்களாகப் பார்த்தால் ரொம்பவே ஆச்சரியமாக இருக்கும். வீரர், வீராங்கனைகள் தங்களின் ஆடைகளைத் துவைப்பதற்காக 600 வாஷிங் மெஷின்கள் இந்த ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. முடித்திருத்தம் செய்து கொள்வதற்காகப் பிரபல அழகுக்கலை நிபுணர் ரபேல் பெர்ரியர் தலைமையில் 20 முடிதிருத்தகங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

400 மீட்டர் ஸ்கொயர் அளவுக்கு சோலார் தட்டுகள் அமைக்கப்பட்டு 78 கிலோ வாட் அளவுக்குச் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யவிருக்கின்றனர். 500 விதமான வகையில் சாப்பாடுகளை உள்ளடக்கிய நீண்ட மெனு தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றைச் சமைத்துக் கொடுக்க 200 சமையற்கலை நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒரே சமயத்தில் 3,200 நபர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் உணவகம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்படாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக்ஸ் கிராமம் முழுவதும் பசுமையைப் பேணும் வகையில் 9000 மரங்கள் நடப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக வீரர், வீராங்கனைகள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடத் தனி இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஒலிம்பிக்ஸ் கிராமத்தை இந்த ஒலிம்பிக்ஸெல்லாம் முடிந்த பிறகு அப்படியே விட்டுவிடப் போவதில்லை. அடுத்ததாக பாரா ஒலிம்பிக்ஸையும் நடத்தி முடித்துவிட்டு நவம்பர் 2024லிருந்து இந்த ஒலிம்பிக்ஸ் கிராமத்தை மாற்றியமைக்கும் வேலைகளில் ஈடுபட இருக்கின்றனர். அதன்மூலம் 2000 குடும்பங்களுக்கும் 800 மாணவர்களுக்கும் இவை வீடுகளாகக் கொடுக்கப்படும். இங்கே பயன்படுத்தப்படும் பர்னிச்சர்களுமே எல்லாம் முடிந்த பிறகு இராணுவத்திற்கும் பள்ளி கல்லூரிகளுக்குமே வழங்கப்பட இருக்கின்றன.
பாரிஸ் ஒரு மாபெரும் விருந்தோம்பலை நிகழ்த்திக் காட்ட தயாராகிவிட்டது!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


