Paris Olympics 2024: இந்த ஒலிம்பிக்ஸில் கவனிக்கவேண்டிய டாப் 10 வீரர்கள் யார், யார்?
2024 ஒலிம்பிக்ஸ் இன்னும் ஒருசில தினங்களில் பாரிஸில் தொடங்கப்போகிறது. கோலாகலமான இந்தத் தொடரில் மொத்தம் 206 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 329 பதக்கத்துக்கான போட்டிகள் நடக்கவிருக்கின்றன.
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் தொடரில் வழக்கம்போல் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற அணிகள் ஆதிக்கம் செலுத்தும். பல சூப்பர் ஸ்டார் அத்லெட்கள் பங்கேற்கும் இந்தத் தொடரில் நாம் அதிகம் கவனிக்கவேண்டிய டாப் 10 வீரர், வீராங்கனைகள் யார்? ஒரு பார்வை.
1. நோவா லைல்ஸ் (அமெரிக்கா) - ஓட்டப்பந்தயம்
என்னதான் 329 பதக்கத்தான போட்டிகள் இருந்தாலும், ஒட்டுமொத்த உலகமும் கண்கொட்டாமல் பார்க்கக் காத்திருக்கும் ஒரு நிகழ்வு - 100 மீட்டர் ஓட்டப்பந்தயம். பரபரப்பான இந்த பந்தயத்தில் தன் தடத்தைப் பதிக்கக் காத்திருக்கிறார் அமெரிக்காவின் நோவா லைல்ஸ். 2023 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருக்கும் அவர் அமெரிக்காவுக்கு மீண்டும் அந்த 100 மீட்டர் ஒலிம்பிக் பட்டத்தை வென்று கொடுப்பார் என்று பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஒரு வெற்றி மட்டுமல்லாமல், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றிலும் அவர் தங்கம் வெல்ல வாய்ப்பிருக்கிறது. ரியோ மற்றும் லண்டன் ஒலிம்பிக் தொடர்களில் ஹாட்ரிக் வென்று அசத்திய உசேன் போல்ட்டின் மேஜிக்கை இவரும் பாரிஸில் நிகழ்த்துவார் என்று பலரும் கணித்திருக்கிறார்கள். ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருக்கிறார் லைல்ஸ்.
2. விக்டன் ஏக்சல்சன் (டென்மார்க்) - பேட்மின்டன்

பேட்மின்டன் முழுக்க முழுக்க ஆசிய நாடுகளின் ஆட்டமாகக் கருதப்பட்டுவந்த நிலையில், தொடர்ந்து உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறார் ஏக்சல்சன். ஒற்றையர் பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அவர், டோக்கியோவில் தங்கம் வென்று டாப் அரியணை ஏறினார். இப்போது பாரிஸில் இரண்டாவது முறையாக அவர் தங்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 30 வயதான இந்த டென்மார்க் வீரர் 2022 உலக சாம்பியன்ஷிப்பையும் வென்று அசத்தினார். தற்போது உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இவருக்கு, சீனாவின் ஷி யூக்கி, ஜப்பானின் கொடாய் நரோகா போன்றவர்கள் சவாலாக இருப்பார்கள். அதேசமயம் இந்திய வீரர்களுக்கும் இந்த ஒலிம்பிக்கில் சவாலாக இருக்கப்போவது இவர்தான். பிரனோய், லக்ஷயா சென் இருவரில் யார் காலிறுதிக்கு முன்னேறினாலும் அவர்கள் ஏக்சல்சனை தான் அங்கே சந்திக்கவேண்டும்!
3. மா லாங் (சீனா) - டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸில் தன்னுடைய ஆறாவது தங்கத்தை அடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார் மா லாங். ரியோ, டோக்கியோ என அடுத்தடுத்த ஒலிம்பிக் தொடர்களில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார் அவர். இவைபோக, அணிப் பிரிவில் லண்டன் முதல் டோக்கியோ வரை ஏற்கெனவே ஹாட்ரிக் தங்கங்கள் வென்றுவிட்டார். 35 வயதான அவர், இம்முறை அணிப் பிரிவில் மட்டுமே பங்கேற்கப்போகிறார் என்றாலும் இவரது ஆட்டம் டேபிள் டென்னிஸ் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து. டிராகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவரால் இன்னும் எந்த உலகத்தர வீரரையும் வறுத்தெடுக்க முடியும்.
4. அரியார்ன் டிட்மஸ் (ஆஸ்திரேலியா) - நீச்சல்

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய ஒலிம்பிக் நம்பிக்கை அரியார்ன் டிட்மஸ். 19 வயதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் களம் கண்ட அவர் 4 பதக்கங்கள் வென்றார். 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல், 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவுகளில் தங்கம் வென்ற அவர், 800 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் வெள்ளியும், 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் வெண்கலமும் வென்றார். இப்போது பாரிஸ் ஒலிம்பிக்கிலும் அதே 4 பிரிவுகளிலும் பங்கேற்கிறார். நிச்சயம் இந்த முறையும் இந்த 4 பிரிவுகளிலுமே பதக்கங்கள் வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவுகளில் உலக சாதனைகள் இவர் வசமே இருக்கின்றன. 200 மீட்டர் ரிலேவிலும் கடந்த ஆண்டு இவர் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணி உலக சாதனை படைத்தது. அதனால் இந்த 3 பிரிவுகளிலும் தங்கத்தையே எதிர்பார்க்கலாம்.
5. ஷெல்லி-ஆன் ஃப்ரேஸர்-பிரைஸ் (ஜமைக்கா) - ஓட்டப்பந்தயம்

37 வயதிலும் ஓயாமல் பறந்துகொண்டே இருக்கிறது இந்த ஜமைக்கா எக்ஸ்பிரஸ். இதுவரை 3 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 8 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்றிருக்கிறார் இவர். பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்திலும், 100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் பங்கேற்கிறார் ஷெல்லி-ஆன். கடந்த ஒலிம்பிக்கில் 100 மீட்டரில் அவர் வெள்ளி வென்றிருந்தாலும் இப்போது இந்த வயதில் அவரால் அதே வேகத்தைக் காட்ட முடியாது. இருந்தாலும் கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டர் ரேஸில் வெள்ளி வென்றது அவர் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. பதக்கம் வெல்கிறார் இல்லை என்பதையெல்லாம் கடந்து ஐந்தாவது ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் அவரது மகத்துவத்தை நிச்சயம் அனைவரும் கொண்டாடியே தீரவேண்டும்.
6. எலீட் கிப்சோக் (கென்யா) - மாரத்தான்

நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் ஈடு இணையற்ற ஜாம்பவான் கிப்சோக். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை இவர் 2004ம் ஆண்டே தொடங்கிவிட்டார். ஏதன்ஸில் 5000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றவர், பீஜிங்கில் அந்தப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2012 ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச் சுற்றில் சோபிக்காததால் அவரால் லண்டனுக்குச் செல்ல முடியவில்லை. ஆனால் அதன்பிறகு தான் விஸ்வரூபம் எடுத்தார். ஒலிம்பிக்கின் மிக முக்கிய விளையாட்டான மாரத்தானில் அடுத்தடுத்து 2 தங்கப் பதக்கங்கள் வென்று வரலாறு படைத்திருக்கிறார் அவர். வயதாகியிருந்தாலும் 2022, 2023 பெர்லின் மாரத்தான் பந்தயங்களை வென்று அசத்தியிருப்பதால், பாரிஸில் அவர் ஹாட்ரிக் அடிக்க வாய்ப்புண்டு என்றே கருதப்படுகிறது.
7. ரஃபேல் நடால் (ஸ்பெய்ன்) - டென்னிஸ்

ஒலிம்பிக் அரங்கில் முத்திரை பதிக்கக் காத்திருக்கும் சீனியர்கள் வரிசையில் அடுத்தது ரஃபேல் நடால். 2008 ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற நடால், ரியோவில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார். இம்முறை ஒற்றையர், இரட்டையர் என இரண்டு பிரிவிலுமே பங்கேற்கிறார். அதிலும் இரட்டையர் பிரிவில் அவருடைய வாரிசாகக் கருதப்படும் கார்லோஸ் அல்கரஸுடன் கூட்டணி வைத்து மோதுவதால் டென்னிஸ் ரசிகர்கள் அந்த அட்டகாச ஜோடியைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள். இந்த அசத்தல் இணை பதக்கம் வெல்லவும் வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. அட வெல்லாவிட்டால் தான் என்ன, ரோலண்ட் காரோஸ் அரங்கில் கடைசி முறையாக (இல்லாமலும் இருக்கலாம்) ரஃபேல் நடாலை பார்ப்பது என்பது காலகாலத்துக்குமான நினைவு. நிச்சயம் இந்த ஒலிம்பிக் நடக்கும் 15 நாள்கள் ஒட்டுமொத்த பாரிஸும் இவர் நிழல் பின்னால் தான் நடக்கும்!
8. அர்மாண்ட் டுப்ளான்டிஸ் (ஸ்வீடன்) - போல்வால்ட்

போல் வால்ட் அரங்கில் சாதனை படைப்பது மட்டும்தான் இவரது பொழுதுபோக்கு. சாதனை படைக்கும் இவரது வேலைக்கு நடுவே எந்தத் தொடர்களெல்லாம் வருகிறதோ அதிலெல்லாம் தங்கத்தை உரித்தாக்கிவிடுவார். இப்போது பாரிஸ் ஒலிம்பிக் இவர் முன். ஏற்கெனவே டோக்கியோவில் தங்கம் வென்றார். ஆனால், அப்போது அவரால் தன்னுடைய பழைய உலக சாதனையான 6.18 மீட்டர் தூரத்தை உடைக்க முடியாமல் இருந்தது. அது அவருக்கு பெரும் வருத்தம் கொடுத்தது. ஆனால் அதன்பிறகு 6.24 மீட்டர் தூரம் வரை இப்போது தாண்டிவிட்டார். இப்போது பாரிஸில் அவருடைய இலக்கு அதுவாக மட்டும் தான் இருக்கும். 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட்டுக்கும் மற்றவர்களுக்கும் எப்படிப்பட்ட இடைவெளி இருந்ததோ, அப்படியான இடைவெளியே போல் வால்ட்டில் டுப்ளான்டிஸுக்கும் மற்றவர்களுக்கும் இடையே பார்க்கலாம். இந்த சாதனை நாயகனுக்கு இப்போது வயது வெறும் 24 தான்.
9. சிமோன் பைல்ஸ் (அமெரிக்கா) - ஜிம்னாஸ்டிக்ஸ்

ஜிம்னாஸ்டிக்ஸ் உலகின் ஆகச் சிறந்த வீராங்கனையாகக் கொண்டாடப்படும் சிமோன் பைல்ஸ் இதுவரை 7 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்றிருக்கிறார். ரியோவில் 4 தங்கங்கள் வென்று அசத்திய அவர், டோக்கியோவில் உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார். அதனால் தன்னுடைய சில போட்டிகளில் இருந்தே பிரேக் எடுக்கும் மிகத் தைரியமான முடிவை எடுத்தார். இருந்தாலும் அந்தத் தொடரிலும் 1 வெள்ளியும் 2 வெண்கலமும் வென்றார் அவர். களத்தில் மட்டுமல்லாமல் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது, போராடுவது என ஒரு முன்னுதாரணமாகவும் விளங்கும் பைல்ஸுக்கு இப்போது வயது 27 தான். நிச்சயம் பாரிஸிலும் அவர் கொடி உயரப் பறக்கும்.
10. சிண்டி காம்பா (அகதிகள் அணி) - குத்துச்சண்டை

இந்தப் பட்டியலில் இருப்பவர்களில் இதற்கு முன் ஒலிம்பிக் பதக்கம் வெல்லாத ஒரே ஆள் இவர்தான். ஆனால் மிகப் பெரிய சரித்திரம் படைக்கும் வாய்ப்பு இவருக்கு இருக்கிறது. கேமரூனில் பிறந்த காம்பா, இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்தார். ஆனால், குடியேற்ற சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதால் அவரால் பிரிட்டன் குடியுரிமை வாங்க முடியவில்லை. தன்பால் ஈர்ப்பாளர் என்பதால், அதை ஏற்காத தன் பிறந்த நாடான கேமரூனுக்கும் செல்ல முடியாத நிலை. அதனால் பாரிஸ் ஒலிம்பிக்கில் அகதிகள் அணி சார்பாக 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்கிறார் அவர். இதில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அவருக்கு இருக்கிறது. அப்படி வென்றால் அகதிகள் அணி சார்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனை படைப்பார் அவர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


