Rahul Dravid: அவரது கண்ணீரில் 17 வருட தோல்வி வலியை பார்த்தேன்-டிராவிட் குறித்து நெகிழ்ந்த அஷ்வின்

ராகுல் டிராவிட் குறித்து அஷ்வின் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. கடைசியாகக் கடந்த 2013ல் இந்திய அணி ஐ.சி.சி தொடரை வென்றிருந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஐ.சி.சி கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்தக் கோப்பையை வெல்ல பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

ராகுல் டிராவிட்

கோப்பையை இந்திய அணிக்குப் பெற்றுக்கொடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த உலகக்கோப்பை வெற்றியுடன் தனது பணிக்காலம் முடிந்ததனால், பயிற்சியாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் ராகுல் டிராவிட். இந்நிலையில் ராகுல் டிராவிட் குறித்துப் பேசிய அஷ்வின், “ராகுல் டிராவிட்டை அழைத்து விராட் கோலி கோப்பையை கொடுத்ததே எனக்குப் பிடித்த தருணம். அதை வாங்கிய டிராவிட் அவரைக் கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

அவரது கண்ணீரில் 17 வருட தோல்வி வலியை பார்த்தேன். அந்த தருணத்தை என்னால் உணர முடிந்தது. அதை நான் ரசித்துப் பார்த்தேன். குறிப்பாக 2007 உலகக் கோப்பையில் டிராவிட் தலைமையில் இந்தியா நாக் அவுட் செய்யப்பட்டது. அதனால் அந்தக் காலகட்டங்களில் இந்தியா ஒரு போட்டியில் தோற்றால் உடனே ராகுல் டிராவிட் என்ன செய்கிறார் என்று கேட்டனர்.

ரவிச்சந்திரன் அஷ்வின்

அப்படிப்பட்ட ராகுல் டிராவிட் கடந்த 2 – 3 வருடங்களாக இந்திய அணியில் என்ன செய்தார் என்பது எனக்குத் தெரியும். மிகவும் சமநிலையுடன் இருந்த அவர் இந்திய அணியின் அணுகுமுறையை மாற்ற எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதும் எனக்குத் தெரியும். வீட்டிலிருந்த போது கூட அணியின் வெற்றிக்காக திட்டமிட்ட அவர் ஒவ்வொரு வீரருக்கும் என்ன செய்தார் என்பதும் எனக்கு தெரியும்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.