Olympics Nostalgia - Norman Pritchard: இந்தியா வென்ற முதல் பதக்கமும் தொடரும் சர்ச்சையும்!
பாரிஸில் ஒலிம்பிக்ஸ் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கவிருக்கிறது. இந்தியா இந்த ஒலிம்பிக்ஸில் எத்தனை பதக்கங்களை வெல்லப்போகிறது என்பதுதான் இப்போதைக்கு அத்தனை பேரின் ஆர்வமாகவும் இருக்கிறது. அதைத் தெரிந்துகொள்ள நாம் இன்னும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும். அதேநேரத்தில் கொஞ்சம் வரலாற்றைப் புரட்டி ஒலிம்பிக்ஸில் இந்தியா வென்ற முதல் பதக்கம் எதுவென்பதை தேடிப் பார்த்தால் ஒரு சுவாரஸ்யமான கதை கண்ணில்படுகிறது.
2024 ஒலிம்பிக்ஸ் நடைபெறவிருக்கும் பாரிஸ் மண்ணில்தான் இந்தியா தனது முதல் பதக்கத்தையும் வென்றிருக்கிறது. 1900-ம் ஆண்டில் பாரிஸில் முதல் முறையாக ஒலிம்பிக்ஸ் நடைபெற்றது. அந்த ஒலிம்பிக்ஸின் 200 மீ ஓட்டம் மற்றும் 200 மீ தடை தாண்டும் ஓட்டம் ஆகிய இரண்டிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்திருக்கிறது. ஆனால், இதை இந்தியாவின் பதக்கம் எனச் சொல்வதைப் போலவே பிரிட்டனின் பதக்கம் இவை என்றும் ஒரு தரப்பு சொல்கிறது.
காரணம், இந்த இரண்டு பதக்கங்களையும் வென்ற நார்மன் பிரிட்சர்ட் ஒரு ஆங்கிலோ இந்தியர். 1875-ல் கொல்கத்தாவில் பிறந்திருக்கிறார். கால்பந்து, ரக்பி, தடகளம் என சிறுவயதிலிருந்தே பல விளையாட்டுகளிலும் தீவிரமாக ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். கால்பந்தில் இந்தியாவுக்காக முதல் ஹாட்ரிக் கோலை அடித்ததும் நார்மன் பிரிட்சர்ட்தான். கொல்கத்தாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாகச் செயல்பட்டு பல முறை சாம்பியனாகியிருக்கிறார்.
1900 வாக்கில் பிரிட்டனுக்கு சென்று அங்கே தடகள கூட்டமைப்பில் உறுப்பினராகி பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். 1900 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் நார்மன் பிரிட்சர்ட் கலந்துகொண்ட போது பெங்கால் தடகள சங்கம், பிரிட்டன் தடகள கூட்டமைப்பு என இரண்டிலுமே உறுப்பினராக இருந்திருக்கிறார். இதனால்தான் 200 மீ ஓட்டம், 200 மீ தடை தாண்டும் ஓட்டம் என இரண்டிலும் அவர் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருப்பதை இரண்டு நாடுகளுமே உரிமைக்கோரி வருகிறது.
ஒலிம்பிக்ஸ் அமைப்பாலுமே இதற்கு சரியான தீர்வைக் கொடுக்க முடியவில்லை. ஏனெனில், ஒரு சில போட்டிகளில் இவர் பிரிட்டக்ச் சேர்ந்தவர் என்றும் ஒரு சில போட்டிகளில் இவர் பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் பதிவாகியிருக்கிறது. இதனால் இந்த உரிமைப்போர் இன்னமும் தொடந்து கொண்டிருக்கிறது.

நார்மன் பிரிட்சர்ட் அந்த ஒலிம்பிக்ஸிற்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். 1902-ம் ஆண்டில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் செயலாளராகவும் இருந்திருக்கிறார். அதன்பிறகு நாட்டை விட்டு வெளியேறிவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்திருக்கிறார்.
அங்கே நார்மன் ட்ரெவர் என்ற பெயரில் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 1929-ல் கலிபோர்னியாவில் மூளையில் ஏற்பட்ட ஒரு வியாதி காரணமாகத் துன்புற்று இறந்திருக்கிறார். பிரிட்சர்ட்டின் உறவினர்கள் பல பேர் 1960 வரைக்கும் கொல்கத்தாவில் வாழ்ந்திருக்கின்றனர்.
ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா இதுவரைக்கும் 35 பதக்கங்களை வென்றிருக்கிறது. அதில் சர்ச்சைகள் சூழ வரலாற்றில் தொக்கி நிற்பது இந்த இரண்டு பதக்கங்கள் மட்டுமே!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


