``அந்த ஒரு காரணத்தால்தான் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாகத் தேர்வு செய்யவில்லை- கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பொறுப்பேற்றபின் அணியில், மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்றவாறே, இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை உடனான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மற்றும் இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.
அப்போது பேசிய கவுதம் கம்பீர், "வீரர்கள் எப்போதும் எனக்குப் பின்னால் இருப்பார்கள். மகிழ்ச்சியான டிரஸ்ஸிங் ரூம் என்பது முக்கியம். நான் விஷயங்களை சிக்கலாக்க விரும்பவில்லை. நான் வெற்றிகரமான அணியைதான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். 3 வித ஃபார்மட்களுக்கும் வெவ்வேறு அணி இருக்கும் என்று சொல்ல முடியாது. டி20 ஃபார்மட்டில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் ஓய்வு பெறும் நிலையில் மாற்றம் ஏற்படலாம். எதையும் தற்போது உறுதியாகச் சொல்ல முடியாது.
இதற்கு முன் அபிஷேக் மற்றும் ரியானுடன் பணிபுரிந்திருக்கிறேன். தற்போது மற்றவர்களுடனும் பணிபுரிய ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்திய அணியில் பும்ரா போன்ற முக்கிய வேகப் பந்துவீச்சாளருக்கு நாங்கள் நிச்சயம் ஓய்வு அளிப்போம். அவர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் என்பதால் அவர்களது உடற் தகுதியை நாங்கள் கருத்தில் கொள்வோம். பும்ரா மட்டுமல்ல, மற்ற வேகப் பந்துவீச்சாளர்களுக்கும் அவர்களது பணிச்சுமைக்கு ஏற்ப ஓய்வு அளிக்கப்படும். ஆனால், பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடும் போது அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.

எனவே, பேட்ஸ்மேன்கள் இனி அனைத்துத் தொடர்களிலும் பங்கேற்பார்கள். ஜடேஜாவை ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கவில்லை அவருக்கு ஓய்வுதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. சூர்யகுமார் இந்திய டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவார். சுப்மன் கில் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்குமான வீரராகப் பார்க்கப்படுகிறார். ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் அடைகின்ற காரணத்தினால் கேப்டன் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்படவில்லை. முகமது ஷமி பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்குத் திரும்புகிறார்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


