Lamine Yamal: மரடோனா, மெஸ்ஸி வரிசையில் ஒரு பள்ளி மாணவன்! 17 வயதில் யூரோ சாம்பியன் ஆனது எப்படி?
“அன்று மரடோனா, மெஸ்ஸி தற்போது லாமின் யமல்” இந்த வார்த்தைகளை உதிர்த்தது சாதாரண கால்பந்து ரசிகர் கிடையாது. ஓர் உலகக் கோப்பை, கால்பந்தின் உயரிய விருதான BallondOr, FIFAவின் சிறந்த வீரர் ஆகிய விருதுகளைப் பெற்ற ஜெர்மனியின் முன்னாள் வீரரான லோதர் மாத்தஸ்.
ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடக்கும் யூரோ கால்பந்து போட்டிகளின் 4வது முறையாக சாம்பியனாகியிருக்கிறது ஸ்பெயின். அதில் அதிக அசிஸ்ட் கொடுத்த வீரர் என்ற அடிப்படையில் சிறந்த இளம் வீரருக்கான விருதை வென்றிருக்கிறார் 17 வயதான லாமின் யமல். சடுதியாக சுருட்டை முடி, பல் நேர்த்திக்காக கிளிப் என்று குழந்தை முகமாகக் காட்சியளிக்கும் இந்த 16 வயது சிறுவன், அரையிறுதியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக அடித்த கோல் “காற்றில் பந்தால் எழுதப்பட்ட கவிதை” என போஸ்ட் கம்பத்துக்குள் சென்று உலகை உலுக்கியது. அன்றைய தினம் யூரோ கால்பந்தாட்ட வரலாற்றில் 16 வயதில் கோலடித்த முதல் வீரர் என்ற சாதனை பொறிக்கப்பட்டது. (இவர் சமீபத்தில்தான் 17வது பிறந்தநாளினைக் கொண்டாடியிருக்கிறார்). அது மட்டுமல்லாமல் உலக அளவில் பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையும் முறியடித்திருக்கிறார்.

அந்த சரித்திர கோலினை அடித்துவிட்டு அவர் செய்த கொண்டாட்டம் வித்தியாசமானது. இரண்டு கைகளையும் சேர்ந்து ‘304’ என்ற எண்ணைக் குறிப்பது போல அவர் செய்கை செய்தார். நாம் என்ன அது என்று தேட ஆரம்பிக்க, அந்த குறியீட்டுக்கு பின்னாலிருக்கும் கதை, யமல் யாரென்பதையும், அதன் அரசியல் என்ன என்பதையும் அவிழ்த்தது. 304 என்கிற எண்ணினை ஈக்வடோரியல் கினியா மற்றும் மொராக்கோ நாட்டின் கொடிகளோடு சேர்த்து தனது பூட்ஸில் பொறித்திருக்கிறார் இந்தப் பள்ளி செல்லும் சிறுவன்.
யமலின் தாயார் ஈக்வடோரியல் கினியா நாட்டைச் சேர்ந்தவர், அவரது தந்தை மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பொருளாதார சூழலால் உருவான இக்கட்டான காலகட்டத்தின்போது ஸ்பெயின் நாட்டுக்குப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அரேபியர், ஆப்பிரிக்கர்கள் மற்றும் ஸ்பானியர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்கிற பன்முக நகரமான ரோகாஃபோண்டா நகரம் அவர்களை வரவேற்றிருக்கிறது. யமல் பிறந்து வளர்ந்தது இங்கேதான். நகரத்துக்கு வெளியே வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகமாக வாழ்கிற அதன் அஞ்சல் குறியீட்டு எண்தான் 08304. அதன் கடைசி மூன்று எண்களைக் குறிக்கிற வகையில்தான் யமலின் கொண்டாட்டம் அமைந்திருக்கிறது. சொல்லப்போனால் நிறவெறிக்கு எதிரான செய்கை என்றுகூட இதைச் சொல்லலாம். ஏனெனில் 6 வயதில் பார்சிலோனா அணியின் முகாமுக்குள் வந்த இந்தச் சிறுவனுக்கு நிறவெறி தாக்குதல்கள் நிறையவே இருந்திருக்கின்றன என்கிறார் அவரது தந்தை.

“எங்கள் ஊரான ரோகாஃபோண்டாவை தீவிர வலதுசாரி கட்சியான வாக்ஸ், பல கலாசாரங்களை அடுக்கிய சாணி குவியல் என்று வர்ணித்தது. கறுப்பின மக்களின் மீது வெறுப்பு பிரசாரம் செய்த அந்த அமைப்புக்கு எதிராக நான் முட்டைகளை எரிந்து போராட்டமும் செய்திருக்கிறேன். ஏனெனில் யமலின் வெற்றிக்கு முன்னர் நாங்கள் வந்தேறியாக அவர்களுக்குத் தெரிந்தோம். ஆனால் இப்போது வெட்கமே இல்லாமல் யமலின் பள்ளிக்கு முன்பு எங்கள் நாட்டின் வீரன் என்று வந்து நிற்கிறார்கள்" என்கிறார் அவர்.
இப்போது ரோகாஃபோண்டா நகரத்தை எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள். அந்த ‘304’ செய்கை நாடு முழுக்க பிரபலமாகி, ‘இனவெறி முடிந்துவிட்டது, நாம் அனைவரும் ஒன்றுதான்’ என்ற செய்தியை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.
மெஸ்ஸி, புயோல், ஜாவி எனப் பல ஜாம்பவான்களை உருவாக்கிய லா மசியா எனும் பார்சிலோனாவின் இளையோர் பாசறையின் மாணவனே லாமின் யமல். தந்தை முனீர், யமலின் 6-ம் வயதிலேயே அவரைக் கால்பந்து பயிற்சியில் சேர்த்துள்ளார். 7 வயதில் பார்சிலோனா முதல் அணியில் விளையாடியவர், அடுத்த எட்டு வருடங்களில் கண்டது அசுர வளர்ச்சி. பதினைந்து வயதிலேயே U16 வயது பிரிவிலிருந்து U19 பிரிவுக்கு மாற்றப்பட்டார். எந்தத் திறமைக்கும் அதற்கான சரியான நபரின் கண்ணில் படவேண்டிய அதிர்ஷ்டத்துக்கான தேவை இருக்கிறது. அப்படியான அதிர்ஷ்டம் ஒரு தசாப்தம் ‘லா மசியா’வின் தலைமைப் பயிற்சியாளராக இருந்து ஓய்வு பெறும் நிலையிலிருந்த ஆல்பர்ட் கபெல்லாஸ் மூலம் யமலுக்கு ஏற்பட்டது. அதன் மூலம் பலருக்கும் கனவாகவே இருக்கும் ‘பார்சிலோனா’ முதன்மை அணிக்குள் நுழைந்தான் இந்த பள்ளிச் சிறுவன்.

யமலின் பயிற்சியாளரும் மெஸ்ஸியுடன் பார்சிலோனா அணியில் களமாடியவருமான லோபெஸ், “மெஸ்ஸியுடன் யமளைப் பலரும் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். மெஸ்ஸி எப்போதுமே ஓர் அணியாக என்ன செய்ய வேண்டும் என்பதையே யோசிப்பார். மிட் பீல்டில் விளையாட வேண்டுமா விளையாடுகிறேன், பார்வேர்ட்டில் விளையாட வேண்டுமா விளையாடுகிறேன் என்ற பொறுப்புக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வார். எங்கு நிதானமாக இருக்க வேண்டும் எங்கு வேகமெடுக்க வேண்டும் என்பதே அவருடைய பலம். அதனை யமலிடமும் காணலாம். ஆனால் மெஸ்ஸி அணியில் மற்றவர்கள் சரியாக ஆடவில்லை என்றாலும் ஒற்றை நபராக ஆட்டத்தை மாற்றக்கூடியவர். யமலுக்கு இப்போது பதினாறுதான் ஆகிறது. இன்னும் பத்து ஆண்டுகளில் அவன் செய்யப்போகும் விஷயங்கள் இந்தக் கால்பந்து உலகத்தை எப்படி மாற்றப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார்.
இந்த ஒப்பீடு மிகவும் அவசரமாகச் செய்யப்படுகிறது என்று கூறினாலும், பிரான்ஸ் அணிக்கு எதிராக அரையிறுதி போட்டியில் யமல் கோல் அடித்தபோது அவரது தந்தை இணையத்தில் பகிர்ந்த வைரல் புகைப்படம், இந்த ஒப்பீடு தவிர்க்கமுடியாததது என்பதை உணர்த்தியது. ஆம், 2007-ம் ஆண்டு ஆறு மாத குழந்தையாக இருந்த யமலை மெஸ்ஸி தொட்டு அவரது தாயாருடன் சேர்ந்து குளிப்பாட்டுவது போன்ற புகைப்படமே அது. ஒரு தொண்டு நிறுவனத்தின் நாட்காட்டிக்காக எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் 17 ஆண்டுகளில் பல குறியீடுகளை யூகித்து எழுதுகிற புகைப்படமாக மாறியிருக்கிறது.

யமல், “நான் கோப்பா அமெரிக்காவை மெஸ்ஸி ஜெயிக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். அப்போதுதான் நாங்கள் பைனலிசிமா இறுதிப் போட்டியில் ஒன்றாக விளையாட முடியும். மெஸ்ஸி இந்த உலகத்திலேயே சிறந்த வீரர். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால் என்னுடைய ஆதர்ச நாயகன் பிரேசில் வீரர் நெய்மர்தான்” என்கிறார். நடந்து முடிந்த கோப்பாவில் அர்ஜெண்டினா வென்றுள்ள நிலையில் யமலின் ஆசை நிறைவேறியிருக்கிறது. யூரோவின் வெற்றியாளர்களும், கோப்பா அமெரிக்காவின் வெற்றியாளர்களும் மோதும் இந்த பைனலிசிமா ஒரு குட்டி உலகக் கோப்பை போட்டி என்பதால் அதில் மெஸ்ஸி vs யமல் என்று தேதி அறிவிக்கப்படாத போட்டிக்கு இப்போதே எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கின்றன.
ஆரம்பக்கால மெஸ்ஸியினை போலவே துல்லியமான பாஸிங், வேகமான டிரிபிலிங், கச்சிதமான ஷூட் என இந்தப் பள்ளிச் சிறுவனின் இடது கால் கதிகலங்க வைத்திருப்பது யூரோவில் ஜாம்பவான்களாக இருக்கும் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மூத்த தேசிய அணி வீரர்களை! அதிலும் பிரான்ஸின் நட்சத்திர வீரரான எம்பாப்பே இவர் அடித்த கோலினைப் பார்த்து உறைந்து நின்ற காட்சிகள் சொல்வது ஒன்றுதான்...

“அடுத்த மரடோனா, மெஸ்ஸி உருவாகப் போகிறான் என்பதல்ல, கால்பந்து உலகில் லாமின் யமல் என்கிற புது நட்சத்திரம் உருவாகிக் கொண்டிருக்கிறான்” என்பதே!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


