Gautam Gambhir: ஆண்டுக்கொரு ஐ.சி.சி தொடர்; சீனியர்களின் விலகல் - கம்பீருக்கான சவால்கள் என்னென்ன?

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவிருக்கும் கம்பீர் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்னனென்ன?
Gambhir

நவீன கிரிக்கெட் சூழல் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த தன்மையோடு இல்லை. இப்போது ஆண்டுக்கொரு பெரிய தொடரை ஐ.சி.சி நடத்திக் கொண்டிருக்கிறது. புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் கம்பீரின் பதவிக்காலம் 2027 வரை நீடிக்கிறது. இடைப்பட்ட இந்தக் காலத்தில் இந்திய அணி மூன்று பெரிய ஐ.சி.சி தொடர்களில் ஆடப்போகிறது.

Gambhir
அடுத்த ஆண்டில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கப்போகிறது. 2026-ல் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடக்கப்போகிறது. 2027-ல் தென்னாப்பிரிக்காவில் ஓடிஐ உலகக்கோப்பைத் தொடர் நடக்கப்போகிறது. இதுபோக அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிப்பெறும்பட்சத்தில் அதை வேறு கணக்கில் சேர்க்க வேண்டும்.
Virat Kohli - Gambhir

ஆக, கம்பீர் பதவியில் இருக்கப்போகும் மூன்று ஆண்டுகளில் நான்கு பெரிய தொடர்களை இந்தியா சந்திக்க வாய்ப்பிருக்கிறது. இதுவே ஒரு பெரிய அழுத்தம். ஒவ்வொரு தொடரின் மீதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். "ரோஹித் தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் சாம்பியன்ஸ் டிராபியையும் வெல்வோம்" என ஜெய்ஷா இப்போதே பேசிக்கொண்டிருக்கிறார். இதே எதிர்பார்ப்பு எல்லா மட்டத்திலும் இருக்கிறது. இதைச் சமாளிப்பதே பெரிய தலைவலியாகத்தான் இருக்கும்.

ஆனால், கம்பீர் இப்படியான சூழல்களையெல்லாம் ஒரு வீரராக இருந்து நிறையவே பார்த்திருக்கிறார் என்பதுதான் பெரிய பலம். 2011 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியின் போது அவர் மீது இல்லாத அழுத்தமா? அதையே சமாளித்துவிட்டார் என்பதால் இந்த விஷயத்தை அவர் திறம்பட எதிர்கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு கேப்டனாகவும் ஐ.பி.எல்-இல் கொல்கத்தா அணியை இரண்டு முறை சாம்பியனாக்கியிருக்கிறார். லக்னோ, கொல்கத்தா போன்ற அணிகளின் பயிற்சியாளர் குழுவிலும் இருந்திருக்கிறார். கொல்கத்தா மூன்றாவது முறை கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறார். அதனால் ஒரு பெரிய தொடரை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்கிற அனுபவம் கம்பீருக்கு நிறையவே இருக்கிறது.

Rohit & Kohli

ஆனால், இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இந்திய அணி இப்போது அடுத்த கட்டத்துக்குள் நுழையப்போகிறது. கோலி, ரோஹித், ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருக்கின்றனர். கோலியும் ரோஹித்தும் அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் சாம்பியன்ஸ் டிராபி வரை ஆடுவார்கள் என்பதுதான் உறுதி. அதன்பிறகு அவர்களின் எதிர்காலம் இந்திய அணியில் எப்படியிருக்கப் போகிறது என்பது ஒரு கேள்விக்குறியே. பும்ரா இப்போது உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். ஆனால், காயங்கள் அவருக்கு எப்போதுமே பிரச்னையாகத்தான் இருக்கின்றன. 2027 உலகக்கோப்பை வரைக்கும் அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பாரா என்பதும் சந்தேகம்தான்.

Ganguly & Gambhir
2025க்குப் பிறகு இவர்களைத் தாண்டி ஓர் இந்திய அணியை யோசிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இவர்களெல்லாம் சாதாரண வீரர்கள் இல்லை. அணியின் ஆணி வேர்கள்.

இவர்கள் இல்லாமல் புதிய இளம் வீரர்களை வைத்து ஒரு புதிய அணியை உருவாக்குவது கடினமான டாஸ்க்காக இருக்கக்கூடும். இப்படியொரு சூழலில் இதற்கு முன் ஒரு சில பயிற்சியாளர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். 2000களுக்குப் பிறகு என எடுத்துக் கொண்டால் கங்குலி - ஜான் ரைட் கூட்டணி ஒரு இளம் பட்டாளத்தை அணிக்குள் கொண்டு வந்து அடுத்த சில ஆண்டுகளுக்கான இந்திய அணியை உருவாக்கிக் கொடுத்தது. அவர்கள் செட் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் 2011 உலகக்கோப்பையை தட்டித் தூக்கிய அணியில் இடம்பெற்றிருந்தனர். 2011க்குப் பிறகு இந்திய அணி மீண்டும் நிறைய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த சமயத்தில் டங்கன் ப்ளெட்சர் பயிற்சியாளராக இருந்தார். ஆனால், உலகக்கோப்பையை வென்ற கேப்டன் தோனியும் அணிக்குள் இருந்தார்.

Dhoni

சீனியர்களைக் கூண்டோடு வெளியேற்றிவிட்டு முழுமையாக ஒரு புதிய அணியை தோனியும் ப்ளெட்சரும் கட்டமைத்தனர். இதில் தோனியின் கை அதிகமாக ஓங்கியிருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்தக் கட்டத்தில் தோனி உருவாக்கிக் கொடுத்த அணிதான் அடுத்த 10 ஆண்டுகளுக்கான இந்திய அணியாக இருந்தது.

இப்போது மீண்டும் அப்படியொரு நிலைமை. இப்போது பயிற்சியாளராக கம்பீர் அந்தச் சவாலை எதிர்கொள்ளப் போகிறார். அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியாதான் எனில் அவரோடு இணைந்து 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை கம்பீர் இப்போதிருந்தே கட்டமைக்க தொடங்க வேண்டும்.

கம்பீர்

ஒரு மாஸ்டராக முன் நின்று இளம் வீரர்களை வழிநடத்தி அவர்களுக்கு வெற்றிக்கான ஊக்கத்தைக் கொடுப்பதில் கம்பீர் வல்லவர். ஆக, இந்தச் சவாலையும் அவர் திறம்பட எதிர்கொள்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

கம்பீர் பயிற்சியாளர் ஆக்கப்பட்டிருப்பதைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.