எனக்கு நம்பிக்கை இல்லை என ரோஹித்திடம் சொன்னேன். ஆனால்... - மோடியின் கேள்விக்கு கோலியின் பதில்!
17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
திறந்தவெளி பேருந்தில் நின்று கொண்டு ரசிகர்களுக்கு கோப்பையை காட்டியபடி வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். கையில் பதாகைகள் ஏந்தியும், ஆடிப் படியும் கிரிக்கெட் வீரர்களை உற்சாகமாக ரசிகர்கள் வரவேற்றனர். அதற்கு முன்னதாக நாடு திரும்பியதும் இந்திய வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர். மோடியிடம் வீரர்கள் உரையாடினார்கள். அப்போது பிரதமர் மோடி விராட் கோலியிடம் ஃபைனலில் சிறப்பாக விளையாடியது குறித்து கேட்டிருக்கிறார்.
அதற்குப் பதிலளித்த விராட் கோலி, "அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. ஏனென்றால் அந்த தொடர் முழுவதும் நான் நினைத்ததைப் போல பங்காற்ற முடியவில்லை. அதனால் எனக்கும் அணிக்கும் நியாயமாக இருக்க முடியவில்லை என்று ராகுல் டிராவிட்டிடம் ஒரு கட்டத்தில் சொன்னேன். அப்போது நம்பிக்கை வையுங்கள் நேரம் வரும்போது அசத்துவீர்கள் என்று அவர் என்னிடம் சொன்னார்.
அதே போல ஃபைனலுக்கு முன்பாக எனக்கு நம்பிக்கை இல்லை என்று ரோஹித் சர்மாவிடமும் சொன்னேன். ஆனால் முதல் பந்தை எதிர்கொண்டதும் “ரன்கள் அடிக்க முடியவில்லையே என நினைத்த எனக்கு இன்று எல்லாம் ஒன்றாக சேர்ந்து வருகிறதே” என்று ரோஹித் சர்மாவிடம் சொன்னேன். ஒரு கட்டத்தில் என்ன நடக்குமோ அது நடக்கும் என்று நினைத்து விளையாடினேன்.

வெற்றி எனக்கும் அணிக்கும் கிடைக்கும் என்று நான் உணர்ந்தேன். போட்டி முடியும் தருணத்தில் கூட ஒவ்வொரு பந்திலும் வாழ்ந்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் வெற்றி பறிபோனது போல் தெரிந்தது. இருப்பினும் பாண்டியா விக்கெட் எடுத்ததும் நாங்கள் ஒவ்வொரு பந்திலும் கம்பேக் கொடுத்தோம்” என்று நெகிழ்ச்சியாக மோடியிடம் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


