Paradise Review: இது சீதையின் பார்வையில் ராமாயணமா? இலங்கை அரசியலை எடுத்துரைக்கும் டிராமாவா?
கேரளத்திலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் தம்பதிகளுக்கு சில திடுக்கிடும் பிரச்னைகள் ஏற்பட, அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே `பேரடைஸ் படத்தின் கதை.
தங்கள் ஐந்தாவது திருமண நாளினைக் கொண்டாடும் விதமாக கேரள தம்பதிகளான கேசவ் (ரோஷன் மேத்யூ), அம்ரிதா (தர்ஷனா ராஜேந்திரன்) ஆகியோர் ராமாயண சுற்றுலாவாக இலங்கைக்கு வருகிறார்கள். தங்கள் தேசத்திற்கு வந்தவர்களை ஆண்ட்ரூ (ஷியாம் பெர்னான்டோ) என்கிற நபர் ஓட்டுநராகவும், கைடாகவுமிருந்து வழிநடத்திச் செல்கிறார்.
அது பொருளாதார நெருக்கடியில் இலங்கை மாட்டிக்கொண்டிருந்த காலகட்டம் என்பதால், வழிநெடுகிலும் அதைக் கண்டித்து சிங்கள - தமிழ் மக்கள் போராட்டங்களும், மறியல்களும் நடத்துகிறார்கள். இருப்பினும் சுற்றுலா வந்திருக்கும் நபர்களுக்கு எந்த நெருக்கடியும் அவர்கள் கொடுக்கவில்லை. இப்படியான சூழலில் பசுமை கொஞ்சுகிற இல்லற விடுதிக்கு வருகிறார்கள் தம்பதிகள். அன்றிரவு தம்பதிகளுக்கு இரவு உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடுக்கிடும் பிரச்னை ஒன்று வருகிறது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதைப் பொறுமையாகப் பேசுவதே இந்த மலையாள மொழிப் படத்தின் கதை.
காதலுக்கான அன்னியோன்னியம், சரி தவறு ஆகிய இரண்டுக்கும் நடுவே தத்தளிக்கும் மனித இயல்பு, இறுதிக்காட்சியில் நரகத்தை உடைத்து வெளிவருகிற அழுகை என தர்ஷனா ராஜேந்திரன் படத்தின் மைய கருவுக்கு வலுசேர்த்து அற்புதமான நடிப்பினை வழங்கியிருக்கிறார். அவருக்குப் போட்டியாக மனித இயல்பின் தடுமாற்றம், தன்னலத்திலிருந்து சுயநலத்துக்கு மாறுகிற நிலை, குற்றவுணர்ச்சியை போக்கடிக்க காரணம் கற்பிக்கும் மனநிலை என யதார்த்த நடிப்பினை வழங்கி தன் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்திருக்கிறார் ரோஷன் மேத்யூ. காவல்துறை அதிகாரியாக பெரேரா, ஓட்டுநராக ஷியாம் பெர்னான்டோ, விடுதி வேலைக்காரர்களாக சம்சுதீன் மற்றும் இளங்கோ தங்களுக்கான வேலையைத் திரையில் திறம்படச் செய்திருக்கிறார்கள்.
தீவு தேசத்தின் பசுமையை ரம்மியமாகப் படம் பிடித்திருக்கிறது ராஜிவ் ரவியின் கேமரா கண்கள். வலிந்து திணிக்கப்படாத காட்சிகளுக்குச் சரியான வேகத்தினை கொடுத்து யதார்த்தினை உறுதி செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத். தனிமையில் இயற்கையுடன் அமர்ந்து பேசுகிற விதமாக ஒளி வடிவமைப்பு கச்சிதமாகச் செய்யப்பட, அதில் தேவைக்கேற்ப ‘கே’யின் பின்னணி இசை மேஜிக் செய்திருக்கிறது. காவல்நிலையம், ஹோம் விடுதிக்குள் பணியாட்கள் தங்குமிடம் எனக் கலை இயக்கத்தில் தம்மிக்கா ஹேவாடுவத்தாவின் மெனக்கெடல் தெளிவாகத் தெரிகிறது.

படம் ஆரம்பித்ததிலிருந்தே உலக சினிமாவுக்கான இலக்கணத்தின் படி மிதமான வேகத்தில் எதார்த்த திரைமொழியைக் கொண்டு நகர்கிறது திரைக்கதை. ஒருபுறம் இலங்கையில் நடக்கும் சமகால பிரச்னையை மையமாக வைத்து ஏற்றத்தாழ்வுகளைப் பேசுகிற படம், மறுபுறம் மனித மனங்களில் மண்டி கிடக்கும் கசடுகளைத் தூர் செய்கிறது. பல அடுக்குகளை உருவகமாக வைத்து நகரும் காட்சிகளில் ராமாயணம், மான் ஆகியவற்றைப் பயன்படுத்திய விதத்தில் இயக்குநர் பிரசன்ன விதானகே பார்வையாளர்களுக்குப் பலப்பரீட்சை நடத்துகிறார். அதனால் படம் முடிந்த பின்னரும் ஒவ்வொரு காட்சியாக நாம் மீண்டும் அசை போடத் துவங்குகிறோம். இந்த உரையாடலே படைப்புக்கான வெற்றி எனக் கருதலாம்.
“நான் சோகமாக இருக்கவேண்டுமென்று நீ நினைக்கிறாயா”, “மனித உயிரோட மதிப்பு என்ன? ஒரு ஓட்டுதான்” போன்ற வசனங்கள் போகிற போக்கில் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. அதிலும் “சீதையே ராவணனைக் கொல்லும் ராமாயணம் உட்பட 300க்கும் மேற்பட்ட ராமாயண வெர்ஷன்கள் இங்கே இருக்கின்றன”, “சந்தேகப்படும் ராமனை அக்கினி பரீட்சையில் வெல்கிறாள் சீதை” என்று பேசப்படும் வசனங்கள் இறுதிக் காட்சிக்கான குறியீடாக நம் மனதில் பதிகிறது. அதே போலக் கதையில் பேசப்பட்ட விஷயங்களைப் பெண் மையபார்வையில் அணுகியதற்கும், அந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மை மக்களை அதிகாரம் என்ன செய்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டியதற்கும் படக்குழுவுக்குப் பாராட்டுக்கள்.

பதற்றமான சூழலில் மனிதன் தன்னை எந்த நிலையில் வெளிப்படுத்துகிறான் என்பதை, ஒரு நாட்டின் பதற்ற சூழலை வைத்துப் பின்னியிருக்கும் இறுதிக் காட்சி நம்மைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்தி உறைய வைக்கிறது. சில இடங்களில் பொறுமையாக நகரும் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகின்றன என்றாலும், அந்த நிதானத்தைத்தான் படைப்பாளர் நம்மிடம் விரும்புகிறார் என்கிற இடத்தில் இந்தப் படம் நிஜமாக ஓர் உரையாடலை நிகழ்த்துகிறது.
மொத்தத்தில் 90 நிமிடங்களுக்குள் நம் அக உணர்வுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் இந்த `பேரடைஸ், ஒரு பெண்ணின் பார்வையில் `எது சொர்க்கம்’ என்ற கேள்வியை முன்வைத்து, படத்தில் வரும் வசனம் போலவே மற்றொரு ராமாயண பதிப்பாக நம் மனதில் ஆழமாகப் பதிகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


