T20 World Cup: `Well Done India - வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணி - வாழ்த்தி மகிழும் தலைவர்கள்!

இந்தியா ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது. 2011-க்குப் பிறகு உலகக்கோப்பைத் தொடர்களில் இந்தியாவுக்கு எத்தனையோ முக்கியமான தருணங்கள் சாதகமாக கைகூடாமல் போயிருக்கின்றன. ஆனால், இந்த முறை போட்டியே கையைவிட்டு சென்றுவிட்டது எனத் தோன்றிய நிலையிலிருந்து மீண்டு வந்து, இந்தியா சாதனை புரிந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று மிரட்டியிருக்கிறது. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறது.

T20 WorldCup

ஏற்கெனவே 2007-ம் ஆண்டில் முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பையை தோனியின் தலைமையில் வென்றிருந்த நிலையில், இது இரண்டாவது வெற்றியாகும். 20 ஓவர் உலகக் உலகக்கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்ற நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பகிர்ந்த வீடியோவில், ``சாம்பியன்ஸ்! எங்கள் அணி டி20 உலகக்கோப்பையை வீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணிக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்தது." எனத் தெரிவித்திருக்கிறார்.

ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ``ஒரு அற்புதமான உலகக்கோப்பை வெற்றி. போட்டி முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள்! என்ன ஒரு புத்திசாலித்தனமான கேட்ச் சூர்யா! ரோஹித், இந்த வெற்றி உங்கள் தலைமைக்கு ஒரு சான்று. ராகுல் டிராவிட், உங்கள் வழிகாட்டுதலை இந்திய அணி தவறவிடும் என்று எனக்குத் தெரியும். நீல நிற உடையணிந்த கண்கவர் மனிதர்கள் நம் நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,``டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஒருபோதும் தொய்வுரா மனப்பான்மையுடன், கடினமான சூழ்நிலைகளில் பயணம் செய்த அணி, போட்டி முழுவதும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியது. இது ஒரு அசாதாரண வெற்றியாகும். வெல்டன் இந்திய அணி! நாங்கள் இந்திய அணியால் பெருமையடைகிறோம்!" எனத் தெரிவித்திருக்கிறார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரும், ``2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் அற்புதமான வெற்றியால் பாரதம் மகிழ்ச்சியடைகிறது. போட்டி முழுவதும் டீம் இந்தியாவின் அட்டகாசமான செயல்திறன், அர்ப்பணிப்பு ஆகியவை கடின உழைப்புக்கு ஒரு சான்றாகும். அவர்கள் தொடர்ந்து தேசத்திற்கு பெருமை சேர்க்கட்டும். மனமார்ந்த வாழ்த்துகள்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா,``உலக சாம்பியனான இந்திய அணிக்கு வாழ்த்துகள். நம் தேசத்திற்கு ஒரு பெருமையான தருணம். இந்திய வீரர்கள் T20 உலகக்கோப்பை முழுவதும் இணையற்ற ஒற்றுமையுடனும், விளையாட்டுத் திறமையுடனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களின் வரலாற்று சாதனையால் தேசம் பெருமிதம் கொள்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமித் ஷா - மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே,``இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது! இந்திய கிரிக்கெட் வீரர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு வாழ்த்துகள். விராட் கோலி, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இப்போட்டியின் மூலம் மிகப் பிரகசகமாக வெளிப்பட்டனர். இந்த அபாரமான வெற்றியால் ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான். உங்கள் சாதனைகள் எப்போதும் கொண்டாடப்பட்டு போற்றப்படும். எதிர்காலப் போட்டிகளில் உங்களுக்கு தொடர்ந்து ஆதரவையும் உற்சாகத்தையும் அளிக்க நாங்கள் காத்திருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா,``ஹரே! சிறப்பான இந்திய அணி! 13 ஆண்டுகளுக்குப் பிறகு டி-20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. இது முழு நாட்டிற்கும் மகிழ்ச்சியான தருணம். அனைத்து நாட்டு மக்களுக்கும், அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள்" எனத் தெரிவித்திருக்கிறார்.

பியூஸ் கோயல்

இவர்கள் மட்டுமல்லாது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி-கள் எனப் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்திருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.