6 மாதங்களுக்கு முன் மும்பையின் கேப்டானாகக் கூட இல்லை; ஆனால் இப்போது... - ரோஹித் குறித்து கங்குலி
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதவிருக்கின்றன.
இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே தழுவாமல் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. ரோஹித் சர்மா இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியிருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி, ரோஹித் சர்மாவைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். ரோஹித் சர்மா குறித்து பேசிய சவுரவ் கங்குலி, "ரோஹித் சர்மாவை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கை ஒரு வட்டம். ஆறு மாதங்களுக்கு முன் மும்பையின் கேப்டனாகக் கூட அவர் இல்லை.
அதே நபர்தான் தற்போது டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி வரை இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வந்திருக்கிறார். இந்தத் தொடரில் ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டது மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். உலகக் கோப்பையை வெல்வது மிகுந்த மரியாதைக்குரிய விஷயம். இறுதிப் போட்டியில் அவர் அதை நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து இந்திய அணி குறித்து பேசிய கங்குலி, "இறுதிப் போட்டியில் அதிர்ஷ்டம் இந்தியாவிடம் இருக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். இந்திய அணி இறுதிப் போட்டியில் சுதந்திரமாக விளையாட வேண்டும். அவர்கள் வெற்றியாளர் இடத்தில் நிற்க வேண்டும் என்று நான் விருப்பப்படுகிறேன். எப்போதும் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்கிறது என்று பலரும் சொல்கிறார்கள்.

ஆனால் நான் அதை வித்தியாசமாகப் பார்க்கிறேன். இறுதிப் போட்டிக்குச் செல்வதே உண்மையில் ஒரு பெரிய விஷயம்தான். பல்வேறு அணிகள் முதல் சுற்று, இல்லை இரண்டாவது சுற்றிலேயே வெளியேறி விடுகிறார்கள். ஆனால் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


