Kalki 2898 AD Review: வில்லன் கமல், மிரட்டல் அமிதாப், மகாபாரத ரெஃபரன்ஸ் - பிரமாண்டம் மிரட்டுகிறதா?
கி.பி 2898-ம் ஆண்டு பல பேரழிவுகளுக்குப் பின் எஞ்சி நிற்கும் உலகின் கடைசி நகரமாக இருக்கிறது காசி. காம்ப்ளக்ஸ் என்ற பெயரில், மிஞ்சியிருக்கும் இயற்கையைச் சுரண்டி, சர்வ வசதிகளும் கொண்ட தனி வாழ்விடத்தை அந்நகரில் உருவாக்கி, மக்களை அவ்வாழ்விடத்திற்கு வெளியே வறுமையில் வைத்திருக்கிறார் சுப்ரீம் யாஸ்கின் (கமல் ஹாசன்). சுப்ரீமிற்கும் காம்ப்ளக்ஸிக்கும் எதிராகப் புரட்சி செய்யப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் ஷம்பாலா என்ற ரகசிய நகரத்தைச் சேர்ந்த மக்கள். அந்த உலகத்தின் கரண்சியான யூனிட்ஸ்-ஐ தேடும் சேட்டைக்கார வீரனான பைரவா (பிரபாஸ்), எப்படியாவது காம்ப்ளக்ஸிற்குள் சென்று செட்டிலாக வேண்டும் என்று முயல்கிறான்.
மறுபுறம், கர்ப்பிணியாக உள்ள SUM 80-ஐ (தீபிகா படுகோன்) குறி வைக்கிறார்கள் சுப்ரீமின் ஆட்கள். அதனால், அப்பெண்களைப் பிடித்து சுப்ரீமின் ஆட்களிடம் கொடுக்க பைரவாவும் களமிறங்குகிறான். மறுபுறம், குருச்சேத்திரப் போர் நடந்த காலத்திலிருந்து உயிரோடிருக்கும் அஸ்வத்தாமனும் (அமிதாப் பச்சன்), ஷம்பாலா நகரத் தலைவியும் (ஷோபனா) அப்பெண்ணைக் காப்பாற்றப் போராடுகிறார்கள். அப்பெண்ணுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு, இறுதியில் அப்பெண்ணுக்கு என்ன ஆனது, உண்மையில் பைரவா யார் போன்ற கேள்விகளுக்கான பதிலைச் சொல்லியிருக்கிறது இயக்குநர் நாக் அஷ்வினின் கல்கி 2898 ஏடி.
தனது வழக்கமான கெத்தான மேனரிஸத்தோடு சண்டைக்காட்சிகள், பறக்கும் ஆக்ஷன் காட்சிகள், சின்ன சின்ன சேட்டைகள் என ஸ்கோர் செய்திருக்கிறார் பிரபாஸ். ஆனால், தன் நடிப்பால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல், ஒரு எக்ஸ்டெண்டட் கேமியோவாகவே தேறுகிறார். கதாநாயகனுக்கு இணையாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டினாலும், தன் முதிர்ச்சியான நடிப்பால் அத்திப்பூத்தாற்போல படத்தில் வரும் உணர்வுபூர்வமான தருணங்களை வீரியமாக்க முயன்றிருக்கிறார் அமிதாப் பச்சன். தீபிகா படுகோனுக்குப் பெரிய வேலை இல்லை, நடிப்பிலும் குறையில்லை. ஒரு சில காட்சிகளே வந்தாலும் தன் குரலாலேயே அதிர்வைக் கடத்தியிருக்கிறார் கமல்ஹாசன்.
சஸ்வதா சாட்டர்ஜி, ஷோபனா, பசுபதி, அன்னா பென் ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். மிருணாள் தாக்கூர், திஷா பதானி, பிரம்மானந்தா ஆகியோர் அழுத்தம் தராமல் வந்து போகிறார்கள். இவர்கள் தவிர. துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, இயக்குநர்களான ராஜமொலி, ராம் கோபால் வர்மா, அனுதீப் என ஒரு பெரிய பட்டாளமே கௌரவ தோற்றத்தில் தலைகாட்டியிருக்கிறது. ஆனால் யாரும் எந்தத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை.
கற்பனை உலகம், அதற்குள் நடக்கும் அதிரடியான ஆக்ஷன்/சேஸிங் காட்சிகள், பிரமாண்ட ஷாட்கள் என ஒரு பிரத்யேக உலகத்தை ஒரு திரையனுபவமாக மாற்றும் பெரும் பணியில் பாதி வெற்றியைப் பதிக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச். முக்கியமாக, டெம்ப்ளட்டான சில சண்டைக்காட்சிகளைச் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார். நீளமான சண்டைக்காட்சிகள், பிரபாஸுக்கான நீளமான இன்ட்ரோ என நீளும் நீளமா....ன முதற்பாதியைத் தேவைக்கேற்ப செதுக்கத் தவறியிருக்கிறது கோட்டகிரி வெங்கடேசுவர ராவின் படத்தொகுப்பு.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பிரமாண்ட காட்சிகளுக்கு உதவியிருப்பதோடு, சண்டைக்காட்சிகளுக்கான பின்னணியில் புதுமையான முயற்சிகளைச் செய்து ரகளை செய்கிறது. அனில் ஜாதவ், சந்தோஷ் ஷெட்டி, வேலு, ரெம்பன் ஆகியோரின் கலை இயக்கத்தின் பெரும் உழைப்பை ஒவ்வொரு பிரேமிலும் உணர முடிகிறது. பிரவீன் கிலாறுவின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளின் நுணுக்கம் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. பிளாஷ்பேக் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஏ.ஐ தொழில்நுட்பம் கவனம் பெறுகிறது.
மகாபாரத புராணக் கதைகளுடன், ரோபோக்கள், ஏ.ஐ போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் இணைத்து எதிர்காலத்தில் நடக்கும் ஒரு கற்பனை கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் நாக் அஷ்வின்.
குருசேத்திரப் போர், பாண்டவர்களின் குலத்தையே அழிக்கத் துடிக்கும் அஸ்வத்தாமன், கிருஷ்ணரின் கட்டளை போன்ற மகாபாரத பின்கதைகளோடு தொடங்கி, காசி நகரம், அந்நகரைச் சுற்றியுள்ள வறட்சி, காம்ப்ளக்ஸ், அடிமை மக்கள் எனச் சுவாரஸ்யமாகவே தொடங்குகிறது படம். அதற்கடுத்து புதிய புதிய கதாபாத்திரங்கள், வாமா மின்னல் என மறையும் கெஸ்ட் ரோல் நடிகர்கள், பிரபாஸின் நீண்ட இன்ட்ரோ, அடுத்தடுத்து வரும் சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், காமெடி காட்சிகள் எனச் சுவாரஸ்யமற்று நீண்டுகொண்டே போகும் முதற்பாதி, கதை எனும் வஸ்துவைக் கண்டடையாமல் கண்மூடித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை கதையைக் கண்டுபிடிப்பதுதான் கதையோ என எண்ண வைக்கிறது படம்.

காம்ப்ளக்ஸுக்குள் உள்ள தனியுலகம், கமல்ஹாசனின் அறிமுகம், கீர்த்தி சுரேஷின் குரலில் வரும் புஜ்ஜி என்கிற அதிநவீன ஏ.ஐ கார் போன்ற சில ரசிக்க வைக்கும் ஐடியாக்களும் இருக்கின்றன. ஆனால், அந்த ஏரியாவில் டேரா போடாமல் ஒரு சண்டைக்காட்சி, ஒரு கெஸ்ட் ரோல் காட்சி என வண்டியை ஓட்டியிருக்கிறது திரைக்கதை. அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமன் கதாபாத்திரம் மட்டுமே கதையை நோக்கி திரைக்கதையை நகர்த்துகிறது.
ஒருவழியாகக் கதையை அடையும் இரண்டாம் பாதிதான் படத்தையே காப்பாற்றுகிறது. விறுவிறுப்பாக நகரும் சேசிங் காட்சிகள் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. இயக்குநர் ராஜமௌலியின் கௌரவத் தோற்றம் கலகலப்பைத் தருகிறது. ஆனாலும், தேவையே இல்லாமல் திணிக்கப்படும் மாஸ் வசனங்களும் சண்டைக்காட்சிகளும் சோதனையிலும் சோதனைகளே! அதில் தேவையான நேர்த்தியும் இல்லை என்பது மைனஸ்.
இந்த இடர்பாடுகளுக்கு இடையே எமோஷனலான காட்சிகளும் எவ்வித தாக்கத்தையும் தராமல் ஓடிவிடுகின்றன. காண்டீபம் என்கிற தபசு, பாண்டவர்களின் வாரிசு, கர்ணன் பயன்படுத்திய ஆயுதம், அஸ்வத்தாமனுக்குக் கொடுக்கப்பட்ட பணி என மகாபாரத புராணக்கதையின் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் படத்துக்கு வலுசேர்த்திருக்கின்றன. அவை ஆழமாகவும் கையாளப்பட்டுள்ளன. ஆனால், எதிர்கால உலகில் நடக்கும் சம்பவங்கள் அழுத்தமாக எழுதப்படாதது பின்னடைவையே தந்திருக்கிறது.

ரோபோ, ஏ.ஐ, மாயாஜாலம், புராணம், அறிவியல் என எந்த வரைமுறையும் இல்லாமல் சுவாரஸ்யத்திற்காகக் காட்சிகளை மூட்டை மூட்டையாகச் சேர்த்தது திரையெழுத்தின் போதாமையையே காட்டுகிறது. டியூன், ஸ்டார் வார்ஸ், ஹாரிபாட்டரின் வால்டர்மோர்ட் கதை, மேட் மேக்ஸ் படங்கள், பிளாக்பேந்தரின் வக்காண்டா உலகம் என நேரடியாகவே ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களின் தாக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. மேலும், திரையில் கட்டமைக்கப்பட்ட உலகத்திற்குள்ளேயே ஆயிரம் லாஜிக் ஓட்டைகள் பூத்துக்குலுங்குகின்றன. உதாரணமாக, அஸ்வத்தாமன் பாத்திரத்தின் சக்தி என்ன, அவரால் என்ன முடியும், என்ன முடியாது என்பதற்கெல்லாம் எங்குமே பதில் இல்லை.
இந்து மத இதிகாச புராணக் கதைக்கு அறிவியல், மாயாஜாலம், கற்பனை, மாஸ் ஆக்ஷன் என மேம்போக்காகத் திரைக்கதை அமைத்து, சில சுவாரஸ்ய காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப பிரமிப்புகளின் உதவியால் தன்னிடமே போராடி தன்னை காத்துக்கொள்கிறது இந்த `கல்கி 2898 ஏடி.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


