IND v ENG: 12:15 மணி வரை கெடு; தொடர்ந்து மழை பெய்தால் ஓவர்கள் எப்படிக் குறைக்கப்படும்?
டி20 உலகக்கோப்பையில் இந்தியா - இங்கிலாந்து ஆடும் அரையிறுதிப் போட்டி கயானாவில் இன்று நடைபெறுகிறது. ஒருவேளை இந்தப் போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? ஓவர்கள் எப்படிக் குறைக்கப்படும்?
இந்தியா - இங்கிலாந்து மோதும் இந்த அரையிறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டே என்பது கிடையாது. ஆனால், வழக்கமான போட்டி நேரத்தை விட கூடுதலாக 250 நிமிடங்கள் இந்தப் போட்டிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 4 மணி நேரம் 10 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்திய நேரப்படி கயானாவில் காலை 10:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஆக, மழை பெய்தாலும் ஒரு முழு நாளுக்கும் கூட காத்திருந்து போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.
சரி, ஒரு வேளை மழை பெய்தால் ஓவர்கள் எப்படிக் குறைக்கப்படும்? கூடுதலாக 250 நிமிடங்கள் போட்டியை நடத்தக் கொடுத்திருக்கிறார்கள் அல்லவா... அதனுடன் இன்னிங்ஸ் பிரேக்கிலிருந்து 5 நிமிடங்களை எடுத்துக் கொள்வார்கள். இப்போது மொத்தம் 255 நிமிடங்கள் கையில் இருக்கும். வழக்கமாக இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு முதல் பந்து வீசப்பட்டிருக்க வேண்டும்.
மழை பெய்யும்பட்சத்தில் அந்த 255 நிமிடங்களையும் சேர்த்துக் கொண்டு இரவு 12:15 மணி வரை காத்திருப்பார்கள். அதற்குள் மழை நின்று பிட்ச் பந்துவீசத் தயாராகி முதல் பந்து 12:15 மணிக்குள் வீசப்படும் சூழல் ஏற்பட்டால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாது. முழுமையாக 20 ஓவர் போட்டியே நடந்துவிடும்.
12:15க்கும் மேல் மழை பெய்துகொண்டே இருக்கும்பட்சத்தில் ஒவ்வொரு 4 நிமிடம் 25 நொடிகளுக்கும் ஒரு ஓவர் வீதம் குறைந்துகொண்டே வரும். அப்படிப் பார்த்தால் தோராயமாக 12:19 போட்டி தொடங்குகிறதெனில் 19 ஓவர் போட்டியாக நடக்கும். இப்படி ஒவ்வொரு 4.25 நிமிடங்களுக்கும் ஒரு ஓவர் ஆட்டத்தில் குறைந்துக்கொண்டே வரும். இந்த அரையிறுதிப் போட்டியில் முடிவை எட்ட வேண்டுமெனில் குறைந்தபட்சமாக 10 ஓவர் போட்டியாவது நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் கூடுதல் நேரமெல்லாம் எடுத்த பிறகும் 10 ஓவர் போட்டியை கூட நடத்தமுடியவில்லையெனில் சூப்பர் 8 சுற்றில் அதிகப் புள்ளிகள் எடுத்திருக்கும் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெறும். அப்படி நடந்தால் அது இந்திய அணிக்குச் சாதகமாக முடியும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


