SA vs AFG : ஆஃப்கானிஸ்தானின் கனவு கலைந்தது; முதல் முறையாக இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா!
அரையிறுதிப்போட்டியில் எல்லாரின் எதிர்பார்ப்பும் ஆஃப்கானிஸ்தான் மீதுதான் இருந்தது. அவர்கள் அந்தளவுக்கு சிறப்பாக ஊக்கமளிக்கும் வகையில் ஆடி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தனர்.
தென்னாப்பிரிக்கா வலுவான அணியாக இருந்தாலும் ஆஃப்கானிஸ்தான் எப்படியாவது போராடி இறுதிப்போட்டிக்கு முன்னேற முயற்சி செய்யும் என்கிற நம்பிக்கையும் இருந்தது. ஆனால், ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. தென்னாப்பிரிக்க அணி மிகச்சிறப்பாக ஆடி ஆஃப்கானிஸ்தானின் பேட்டிங் லைன் அப்பை குலைத்து முதல் முறையாக உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதித்திருக்கிறது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத்கான் தான் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்து டார்கெட்டை டிஃபண்ட் செய்வதுதான் அவர்களின் பலம். அதற்கேற்றாற் போலவே ரஷீத் கானும் முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார். ஆனால், எல்லாரும் எதிர்பார்த்தது போல ஆஃப்கானிஸ்தானின் பேட்டிங் அத்தனை சிறப்பாக அமையவில்லை. வெறும் 56 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது.
முதல் ஓவரிலிருந்தே ஆஃப்கானிஸ்தானின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. யான்சென் முதல் ஓவரை வீசியிருந்தார். ஓவர் தி விக்கெட்டில் வந்து ஸ்லிப்பையும் லெக் ஸ்லிப்பையும் வைத்து அட்டாக் செய்தார். இந்த முதல் ஓவரிலேயே குர்பாஸ் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்களை அமைத்து வந்த ஓப்பனிங் கூட்டணி முறிந்தது.

நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் எதிராக குர்பாஸ் - ஷத்ரான் கூட்டணி பார்ட்னர்ஷிப்பாக 100 ரன்களை சேர்த்திருந்தது. இவர்களின் கூட்டணிதான் ஆஃப்கானிஸ்தானுக்கு பெரிய பலம். பேட்டிங்கில் அந்த அணி இவர்களைத்தான் முழுமையாக நம்பியிருந்தது.
மிடில் ஆர்டரில் எல்லாம் யாருமே பெர்ஃபார்ம் செய்வதே இல்லை. குர்பாஸின் விக்கெட் அடுத்தடுத்த விக்கெட்டுகளுக்கான ரிப்பன் வெட்டை போல இருந்தது. நம்பர் 3 இல் குல்பதின் வந்தார். இரண்டு பவுண்டரிக்களை அடித்தார். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. யான்செனின் பந்தில் டாப் ஆஃப் தி ஆஃப் ஸ்டம்ப்பில் வாங்கி வெளியேறினார். ரபாடா கைக்கு பந்து சென்றது. அவர் தன் பங்குக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்தார். இப்ராஹிம் ஷத்ரான், முகமது நபி என இருவரும் ஒரே ஓவரில் ஸ்டம்பை பறிகொடுத்து அவுட் ஆகினர்.

பந்து கொஞ்சம் நன்றாகவே நகர்ந்தது. ரபாடா தனது பேட்டனை நோர்கியாவிடம் கொடுக்க அவர் ரெண்ட்ம்பது... இவரு ரெண்டம்பது ஆகமொத்தம் 10.. என்கிற பாணியில் நோர்கியாவும் இரண்டு விக்கெட்டுகளை அள்ளினார். எதாவது செய்து காப்பாற்றுவார் என நம்பிய ரஷீத்கானின் விக்கெட்டும் இதில் அடக்கம். ஸ்டம்புகள் சிதற அவர் அவுட் ஆகி வெளியேறினார். ஸ்பின்னரான ஷம்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கரீம் ஜனத்,நூர் அஹமது என இருவரையும் ஒரே ஓவரில் வீள்த்தினார். அஷ்மத்துல்லா ஒமர்சாய் மட்டும்தான் இரட்டை இலக்கத்தில் 10 ரன்களை அடித்திருந்தார். மற்றவர்களெல்லாம் சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். 11.5 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் ஆல் அவுட்.
ஆஃப்கானிஸ்தான் அணி பெரும் உத்வேகத்துடன் ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகளை வீழ்த்தி அரையிறுதி வரை முன்னேறியிருந்தது. ஆஃப்கானிஸ்தான் மக்கள் அவர்களின் வெற்றியை கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். மற்ற நாட்டு ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவளிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இப்படியொரு தருணத்தில் அந்த அணியிடம் ஒரு நல்ல செயல்பாட்டை அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பி ஏமாற்றிவிட்டனர்.
பௌலிங்தான் அவர்களின் பலம். 57 ரன்களை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டிஃபண்ட் செய்வது இமாலய இலக்கு என தோன்றினாலும் ஆஃப்கானிஸ்தான் போராடுவார்கள், அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. அதை காப்பாற்றும் வகையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாகவே தொடங்கியிருந்தனர். நவீன் உல் ஹக்கும் ஃபரூக்கியும் பந்தை உள்ளேயும் வெளியேயும் திருப்பி தென்னாப்பிரிக்காவை தடுமாற வைத்தனர்.

ஃபரூக்கி இரண்டு பந்துகளை வெளியே திருப்பிவிட்டு உள்ளே திருப்பிய ஒரு பந்தை கணிக்காமல் ஸ்டம்ப்பை பறிகொடுத்து டீகாக் வெளியேறினார். கொஞ்சம் மெதுவாக ஆடினாலும் பவர்ப்ளேவுக்குள் 34 ரன்களை தென்னாப்பிரிக்கா எடுத்துவிட்டது. இதன்பிறகு 23 ரன்கள்தான் அந்த அணிக்கு தேவைப்பட்டது. கையில் 9 விக்கெட்டுகள் இருந்தது. ரீஸா ஹென்றிக்ஸூம் மார்க்ரமும் க்ரீஸில் இருந்தனர். 14 ஓவர்கள் மீதமிருந்தது. அப்படியிருக்க இது ஒரு பெரிய டாஸ்க்காக தென்னாப்பிரிக்காவுக்கு இல்லை. ரொம்பவே சௌகரியமாக போட்டியை வென்றுவிட்டது.
இந்த ஒரு அரையிறுதிப் போட்டியை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஆஃப்கானிஸ்தான் அணி இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பாகத்தான் ஆடியிருக்கிறது. அதைவிட முக்கியம் ஒவ்வொரு ஐ.சி.சி தொடரிலும் அவர்களின் அசுரத்தனமான முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கண்கூடாக பார்க்க முடிகிறது. அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடக்கவிருக்கிறது. ஆஃப்கானிஸ்தானுக்கு ரொம்பவே பழக்கப்பட்ட களம். அதில் அவர்களின் பாய்ச்சல் இன்னும் வீரியமிக்கதாக இருக்கும். தென்னாப்பிரிக்க அணியுமே இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியிருந்தது. எல்லா போட்டிகளையும் நெருக்கமாக சென்றே வென்றிருந்தது.

இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்த சௌகரியமான வெற்றி அவர்களுக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்திருக்கும். உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இந்த முறையாவது அவர்களின் கனவு மெய்ப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


