PCB: மேட்ச் பிக்ஸிங் விவகாரம் - பாபர் அசாமிற்கு ஆதரவாக பாக். கிரிக்கெட் வாரியம் அறிக்கை!
தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறி இருக்கிறது.
இந்தத் தொடரில் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியைச் சந்தித்ததால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தத் தோல்வியால் பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் வீரர்களைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். குறிப்பாக, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் பாபர் அசாம் மீது மேட்ச் பிக்ஸிங் புகாரும் எழுந்திருக்கிறது. பாகிஸ்தான் அணி கடந்த ஓர் ஆண்டாக 2023 ஆசியக் கோப்பை, 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை ஆகியவற்றில் குரூப் சுற்றுடன் வெளியேறி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர், "பாபர் அசாம் போட்டிகளில் தோல்வி அடைய வேண்டி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு வருகிறாரா?" என்ற சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார்.
"கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. மறுபுறம் பாபர் அசாமின் சொத்து மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட வாய்ப்புள்ளது" என பாகிஸ்தான் மூத்த பத்திரிக்கையாளர் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் "கிரிக்கெட் போட்டி சார்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அது அவசியமானவை.

அதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், மேட்ச் பிக்ஸிங் போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எங்களால் ஏற்கவே முடியாது. இது போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பியவர்கள் அதற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும். ஆதாரங்களை அளிக்காவிட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


