Indian Football: இந்திய கால்பந்து அணியின் அடுத்த கட்டப் பயணம் எதை நோக்கி? மாற்றம் எங்கே வரவேண்டும்?

ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் யூரோ, கோபா அமெரிக்கா எனக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய கால்பந்து ரசிகர்களால் அப்படிக் கொண்டாட முடியவில்லை. 2026 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றின் இரண்டாவது ரவுண்டிலேயே வெளியேறியிருக்கிறது இந்திய அணி. கத்தாருக்கு எதிரான அந்த கடைசி தகுதிச் சுற்றுப் போட்டி பெரும் சர்ச்சைகளை வேறு கிளப்பியது. அதுமட்டுமல்லாமல் இத்தனை ஆண்டுக்காலம் இந்திய அணியின் ஆணி வேராக இருந்த சுனில் சேத்ரி சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

முதலில் பெரும் சர்ச்சைக்குள்ளான இந்தியா vs கத்தார் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியைப் பற்றிப் பார்ப்போம். அதற்கு முன் அந்தப் போட்டி ஏன் முக்கியத்துவம் பெற்றது என்பதையும் பார்த்துவிடுவோம்.

Indian team

2026 உலகக் கோப்பைக்கான ஆசிய அளவிலான தகுதிச் சுற்றில் இந்திய அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருந்தது. 2வது சுற்றில் ஆப்கானிஸ்தான், கத்தார் மற்றும் குவைத் அணிகளுடன் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு இரண்டு போட்டிகளில் மோதும். மொத்தம் 6 போட்டிகளின் முடிவில் குரூப்பில் முதலிரு இடங்கள் பிடிக்கும் அணிகள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறும். குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை விட இந்தியா தரவரிசையில் முன்னாலிருந்ததால், எப்படியும் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் செயல்பாடு மிகவும் சுமாராகவே இருந்தது.

குவைத்துக்கு எதிரான முதல் போட்டியை வென்ற இந்திய அணி, அதன்பிறகு ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை. ஆப்கானிஸ்தான் (1-2 தோல்வி) மற்றும் குவைத் (0-0 டிரா) அணிகளுக்கு எதிரான ஹோம் மேட்ச்களில் கூட இந்திய அணி வெல்லவில்லை. ஜூன் 6ம் தேதி குவைத் உடன் நடந்த அந்தப் போட்டியில் சுனில் சேத்ரி தன்னுடைய கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடினார். மிகவும் சுமாராக விளையாடிய இந்திய அணி தோல்வியைத் தவிர்க்கவே போராடவேண்டியதாக இருந்தது. 5 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடமும், ஆப்கானிஸ்தான் (5 புள்ளிகள்) மற்றும் குவைத் (4 புள்ளிகள்) அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் இருந்தன. அதனால்தான் கத்தார் அணியுடனான அந்தக் கடைசிப் போட்டி பெரும் முக்கியத்துவம் பெற்றது.

37வது நிமிடத்தில் சாங்க்டே அடித்த கோலால் இந்திய அணி முன்னிலையில் இருந்தது. 73வது நிமிடத்தில் ஆய்மென் கோலடிக்க, ஆட்டம் சமனானது. அந்தச் சமயம் குவைத் vs ஆப்கானிஸ்தான் போட்டி 0-0 என சமனில் இருந்ததால், இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 81வது நிமிடத்தில் கோலடித்து 2வது இடத்துக்கு முன்னேறியது குவைத். அதனால் இந்திய அணிக்கு வெற்றி அவசியமானது. ஆனால் இந்தியாவுக்கோ அதிர்ச்சி காத்திருந்தது. 85வது நிமிடத்தில் கத்தார் கோலடிக்க முயல, குர்ப்ரீத் சாந்து பந்தைத் தடுக்க முயன்றார். ஆனால் போஸ்ட்டுக்கு அருகே பந்து கோட்டைத் தாண்டே வெளியே சென்றது. ஆனால் லைன் மேன் அதை அறிவிக்கவில்லை. அதற்குள் சற்றே வெளியே சென்ற பந்தை சட்டென்று உள்ளே இழுத்து கோலுக்குள் அடித்தார் அல்-ராவி.

India vs Qatar

பந்து வெளியே சென்றது தெரியாத நடுவர்கள் அதை கோல் என்று அறிவித்தனர். இந்திய வீரர்கள் முறையிட்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அதன் விளைவாக இந்திய அணி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு மூன்றாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. கத்தார் அடித்த கோல் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அப்படி ஒரு கோலால் இந்திய அணி வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

அந்த கோல் ஏற்றுக்கொள்ளக்கூடாததுதான். நடுவர்களின் முடிவு தவறானதுதான். ஆனால், அதுதான் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதைத் தடுத்ததா? இந்தியாவின் செயல்பாடு எப்படி இருந்தது? ஒரு கிரிக்கெட் அணியின் தவறுகளை அலசுவது போல் தராசில் நடுநிலையாக நின்று அலசினால், இந்திய அணி மிகவும் மோசமாகவே விளையாடியிருக்கிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தாலும் அந்த அணி படுதோல்வி அடைந்து வெளியேறவே செய்திருக்கும். அந்தக் கடைசி தகுதிச் சுற்றுப் போட்டியில் பெரும்பாலான கத்தார் வீரர்கள் முதல் சாய்ஸ் வீரர்கள் இல்லை. ஏற்கெனவே அந்தப் பிரிவில் முதலிடத்தை உறுதி செய்துவிட்டதால், கத்தார் அணி முன்னணி வீரர்களைக் களமிறக்கவில்லை.

அந்த அணிக்கு எதிராகவும் இந்தியாவால் ஜெயிக்க முடியவில்லை. தரவரிசையில் மிகவும் பின்தங்கியிருக்கும் இரு அணிகளுக்கு எதிராக இந்தியாவால் ஹோமில் வெற்றி பெற முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் 6 போட்டிகளிலும் சேர்த்தே இந்தியாவில் 3 கோல்களே அடிக்க முடிந்தது. இப்படியொரு செயல்பாட்டுக்குப் பிறகு ஒரு கோலை மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனம் இல்லை.

சரி இந்த தகுதிச் சுற்றில்தான் செயல்பாடு இப்படியா என்றால், அதுவும் இல்லை. தொடர்ந்து இப்படித்தான் இருக்கிறது. 2023 AFC ஏசியன் கப் தொடரில் 3 போட்டிகளிலும் ஒரு கோல் கூட அடிக்காமல் தோற்றது இந்தியா. ஆங்காங்கே ஒருசில நல்ல முடிவுகள் கிடைத்திருந்தாலும், தொடர்ந்து இந்திய அணியால் முன்னேற்றம் காணவே முடியவில்லை.
India

கத்தாரையே ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்வோமே... 2018ம் ஆண்டின் முடிவில் ஃபிஃபா தரவரிசையில் 93வது இடத்தில் இருந்த அந்த அணி இப்போது 34வது இடத்தில் இருக்கிறது. 6 ஆண்டுகளில் சுமார் 60 இடங்கள் முன்னேறியிருக்கிறது. ஆனால் இந்தியா அப்படியில்லை. 2018ன் முடிவில் 98வது இடத்தில் இருந்த அணி, இப்போது 121வது இடத்தில் இருக்கிறது. கொஞ்சம் கூட முன்னேற்றம் என்பதே இல்லை. கொஞ்சமும் தொலைநோக்கி சிந்தனை இல்லாத ஒரு வாரியம், பிளான் பி கூட இல்லாத ஒரு மேனேஜர் என எதுவுமே இந்திய அணிக்கு சரியாக அமையவில்லை என்பதை மறுக்க முடியாது. 2019ம் ஆண்டு இந்திய பயிற்சியாளரகப் பதவியேற்ற இகோர் ஸ்டிமேக் பெரிதாக எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை. அணிக்கு எந்த நம்பிக்கையும் கொடுக்கவில்லை.

ஸ்குவாட் தேர்வு, போட்டிக்கான அணித் தேர்வு என அனைத்திலுமே சொதப்பினார் அந்த குரேஷிய மேனேஜர். ஃபார்மில் இருக்கும் இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்புக் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்த்தது. உதாரணம், நம் தமிழக வீரர் சிவசக்தி. 2022-23 சீசனில் அவர் பெங்களுரு எஃப்.சி அணிக்கு ஆடும்போது சரியான ஃபார்மில் இருந்தார். பெங்களுரு அணியே சேத்ரியை விட இவரை அதிக போட்டிகளில் ஆடவைத்தது. ஆனால், அவர் இந்திய அணியின் ஸ்குவாடுக்கு கூட தேர்வு செய்யப்படவில்லை. நந்தகுமார் போன்ற வீரர்களுக்கு ஸ்குவாடில் வாய்ப்பு கிடைத்தாலும், லெவனில் விளையாடும் வாய்ப்பு அவ்வளவாகக் கிடைக்காது.
Stimac

திரும்பத் திரும்ப ஒரே வீரர்களோடு, ஒரே திட்டத்தோடுதான் ஆடியிருக்கிறார் அவர். சரி ஆட்ட முறையிலாவது ஒரு மாற்றம் வந்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. சேத்ரியின் கடைசிப் போட்டியில் குவைத்துக்கு எதிராக இந்தியாவின் கால்பந்துத் தலைநகர் கொல்கத்தாவில், இந்திய வீரர்கள் பந்தைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் தடுமாறியதெல்லாம் பார்க்கவே சங்கடமாக இருந்தது.

இதற்கு மத்தியில் கடினமான தருணங்களிலெல்லாம் இந்திய அணியை தனி ஆளாகக் கரைசேர்த்துக்கொண்டிருந்த சுனில் சேத்ரியும் இப்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இப்போது இந்திய அணி இக்கட்டான நேரங்களில் யாரைச் சார்ந்து இருக்கப்போகிறது தெரியவில்லை. களத்தில் அவரைப் போல் அணியைத் தூக்கிச் சுமக்கக்கூடிய வீரர்கள் இருக்கிறார்களா என்றால், இல்லை என்பதுதான் சோகம். களத்துக்கு வெளியே, உள்ளே என இந்திய கால்பந்தில் மாறவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. பயிற்சியாளர்கள், வீரர்கள் எல்லாம் கடந்து, ஒரு சரியான திட்டம் வேண்டும். எப்படி கத்தார் ஆஸ்பயர் அகாடமி என்ற ஒன்றைத் தொடங்கி, இன்று ஆசிய சாம்பியன் ஆகியிருக்கிறதோ அப்படியொரு திட்டம் வேண்டும். இல்லையெனில், இந்திய கால்பந்து ரசிகர்கள் கடைசி வரை கனவு மட்டுமே காணவேண்டும்.

Indian Football Team
இனி உலகக் கோப்பைகளில் 48 அணிகள் ஆடுவதால், ஆசியாவில் இருந்து 9 அணிகள் வரை தகுதி பெறக்கூடும் என்பதால் பலரும் இந்தியா உலகக் கோப்பையில் ஆடலாம் என்று அடித்து விடலாம். ஆனால் அதற்கு அடுத்த 3 - 4 உலகக் கோப்பைகளுக்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.