AUS vs SCO: `போராடிய ஸ்காட்லாந்து! - இங்கிலாந்தை அலறவிட்டு குஷிப்படுத்திய ஆஸ்திரேலியா!

55 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியாவை வீழ்த்த முனைந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஹோட்டல் அறையில் ஆஸ்திரேலியா வென்றே ஆக வேண்டும் என இங்கிலாந்து காத்திருக்கிறது. என இயான் பிஷப் ஆஸ்திரேலியா Vs ஸ்காட்லாந்து போட்டியைப் பற்றி வர்ணனையில் பேசிக்கொண்டிருந்தார். இந்தப் போட்டியின் கதையாடல் இதுதான். சூப்பர் 8 க்கு ஸ்காட்லாந்து செல்ல வேண்டுமெனில் ஸ்காட்லாந்து இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும். அதேநேரத்தில் இங்கிலாந்து சூப்பர் 8 க்கு செல்ல வேண்டுமெனில் ஆஸ்திரேலியா இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும்.

England Team
இங்கிலாந்தின் உயிர் ஆஸ்திரேலியாவின் கையில் இருந்தது. இங்கிலாந்தைத் தொடரிலிருந்து வெளியேற்ற எங்களால் இயன்றதை செய்வோம்.. என ஹேசல்வுட் இந்தப் போட்டிக்கு முன்பாக நகைச்சுவையாக பேசியிருந்தார்.
Aus vs Sco

ஆனால், இந்தப் போட்டியில் ஒரு கட்டம் வரைக்கும் ஆட்டம் ஸ்காட்லாந்து கையிலேயேதான் இருந்தது. இன்னொரு அப்செட் நிகழ்ந்து அது இங்கிலாந்துக்கு எதிராக முடியுமோ என்றெல்லாம் தோன்றியது. ஆனால், கடைசியில் ஆஸ்திரேலியா தங்களின் அனுபவத்தின் வழி சிறப்பாக ஆடி போட்டியை வென்றது.

இந்தப் போட்டியில் பல இடங்களில் ஆஸ்திரேலிய அணி ஹோட்டல் அறையில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இங்கிலாந்து வீரர்களுக்கு பயத்தைக் கொடுத்தது. ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை எடுத்திருந்தது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அவர்கள் எடுத்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இது ஆஸ்திரேலியாவின் தடுமாற்றத்தாலும்தான் சாத்தியப்பட்டது. கடந்த போட்டி வரை அற்புதமாக கேட்ச்களை பிடித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் கன்னாபின்னாவென கேட்ச்களை ட்ராப் செய்தது. ஸ்காட்லாந்தும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு ரன்னை உயர்த்திக் கொண்டது. ஸ்பின்னர்களுக்குதான் அதிக முக்கியத்துவத்தை ஆஸ்திரேலியா கொடுத்திருந்தது. ஆஸ்டன் அகர்தான் முதல் ஓவரை வீசியிருந்தார்.

Scotland

அகர், மேக்ஸ்வெல், ஷம்பா மூவரும் முழுமையாக தங்கள் ஓவர்களை வீசியிருந்தனர். ஸ்காட்லாந்து வீரர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக விக்கெட்டுகளை விட்டிருந்தாலும் ஸ்கோரும் செய்திருந்தனர். ஓப்பனர் மன்ஷி மேக்ஸ்வெல்லின் பந்துகளை பவுண்டரியும் சிக்சருமாக பறக்கவிட்டு அவருடைய பந்திலேயே அவுட்டும் ஆகியிருந்தார். மெக்முல்லன் நின்று நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி அரைசதம் அடித்திருந்தார். பெர்ரிங்டனும் ஸ்கோரை உயர்த்தும் வகையில் 42 ரன்களை அடித்திருந்தார். இவர்களின் உதவியால் ஸ்காட்லாந்து அணி 180 ரன்களை எடுத்திருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 181. முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா ஆடியவிதத்தைப் பார்த்து இங்கிலாந்து அணி நிச்சயமாக அலறியிருப்பார்கள். பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு ஊருக்கே கிளம்பிவிடலாம் என்கிற மனநிலைக்குக் கூட வந்திருக்கக்கூடும்.
Stoinis

ஆஸ்திரேலியா அந்தளவுக்கு சோதித்தது. வார்னர், கேப்டன் மார்ஸ் இருவருமே பவர்ப்ளேக்குள்ளாகவே வீல் மற்றும் ஷரீப் ஆகியோரின் பந்தில் அரைகுறையாக ஷாட் ஆடி அவுட் ஆகினர். மேக்ஸ்வெல் ஸ்பின்னர் வாட்டின் பந்தில் பந்து திரும்புவதை கணிக்க முடியாமல் போல்டை பறிகொடுத்து அவுட் ஆனார். 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 74-3 என்று இருந்தது. ரன்ரேட் எகிறிக்கொண்டே சென்றது. ஹெட்டும் ஸ்டாய்னிஸூம் களத்தில் இருந்தார்கள். தேவைப்பட்ட ரன்ரேட் 12 க்கும் மேல் எகிறும் வரை அமைதியாகவே இருந்தனர். அதன்பிறகு ஒரு வேகம் எடுத்தனர். லீஸ்க் வீசிய 14 வது ஓவரில் இரண்டு சிக்சர்கள் மற்றும் பவுண்டரியோடு ஸ்டாய்னிஸ் 18 ரன்களை சேர்க்க, ஷரீப் வீசிய 16 வது ஓவரில் 3 சிக்சர்களை ஹெட் பறக்கவிட்டு மிரட்டினார். இந்த ஓவரிலேயே அவர் அவுட் ஆகியிருந்தாலும் 24 ரன்கள் வந்திருந்தது.

ஸ்டாய்னிஸ் அரைசதத்தைக் கடந்து வாட்டின் ஓவரில் அவுட் ஆகினார். கடைசி 3 ஓவர்களில் ஆஸ்திரேலியாவுக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. இங்கிருந்தும் ஸ்காட்லாந்து அணியால் சவாலளித்திருக்க முடியும். ஆனால், இங்கேதான் அனுபவம் என்கிற விஷயம் பெரிதாக உதவியது. ஆஸ்திரேலிய வீரர்கள் எந்த அழுத்தமும் தங்கள் மீது இருப்பதாக காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், ஸ்காட்லாந்து பதற்றப்பட்டது. சிக்சர்களிலிருந்து தப்பித்தால் போதும் என டிஃபன்ஸிவ்வாக வீசினர். கேட்ச்சை ட்ராப் செய்தனர்.

England
கடைசி ஓவர் வரை இழுத்திருந்தாலும் ஆஸ்திரேலியா சௌகரியமாக 5 விக்கெட். வித்தியாசத்தில் போட்டியை வென்றது. டிம் டேவிட் சிக்சரோடு முடித்து வைத்தார். இங்கிலாந்து அணியினரும் இப்போதுதான் ஆசுவாசம் அடைந்திருப்பர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.