Under Paris: பாரிஸுக்குள் புகுந்த சுறா, களமிறங்கும் காவல்துறை; ரசிக்க வைக்கிறதா `மேன் vs சுறா படம்?
காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்ட ராட்சத சுறா ஒன்று, ஆழ் கடலிலிருந்து பாரிஸ் நகரத்துக்குள் ஓடும் செய்ன் ஆற்றுக்குள் புகுந்துவிடுகிறது. மறுபுறம், பிரபலமான நீச்சல் போட்டியை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக இருக்கிறது பாரிஸ் மேயர் தலைமையிலான குழு. சுறா விவகாரம் மேயரின் காதுகளுக்குச் செல்ல, அதை நம்ப மறுக்கும் அவர் நீச்சல் போட்டியை நடத்தியே தீருவேன் என உறுதியாக இருக்கிறார்.
சுறாவைக் கொல்லாமல், அதைக் காப்பாற்றி கடலில் விட, ஆராய்ச்சியாளர் சோபியாவும், காவல்துறையும் களமிறங்க, அது கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக மாறுகிறது. இறுதியில் அப்பிரச்னைகளைச் சமாளித்து சுறாவை மீட்டார்களா, நீச்சல் போட்டி தடைப்படாமல் நடந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள அண்டர் பாரிஸ் திரைப்படம்.
நீருக்கடியில் சுறாவுடன் மோதும் காட்சிகளில் நிக்கோலஸ் மஸார்ட்டின் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ரிவானனின் படத்தொகுப்பு தேவையான நிதானத்தை வழங்கத் தவறியிருக்கிறது. அலெக்ஸ், ஆண்டனி, எட்வார்ட் ஆகியோரின் பின்னணி இசை விறுவிறுப்புக்கும், எமோஷனலான இடங்களுக்கும் கைகொடுத்திருக்கிறது. நடிகர்களில் சோபியாவாக பேரேனைஸ் பேஜோ, காவல்துறை அதிகாரியாக நஸ்ஸீம் என இருவர் மட்டும் தங்கள் நடிப்பால் வலுசேர்க்கிறார்கள்.
காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள், குப்பைத் தொட்டியாக்கப்படும் கடல், அவற்றால் பாதிப்பிற்குள்ளாகும் கடல் வாழ் உயிரினங்கள் என அறிவியல் ரீதியாக ஆரம்பிக்கிறது படம். ரிவர் போலீஸ் என்கிற பாரிஸ் காவல்துறை பிரிவினர், பாரிஸ் நகரத்தின் நீர் வழிப்பாதைகள் போன்றவை சுவாரஸ்யத்தைத் தருகின்றன. ஆனால், சிறிது நேரத்திலேயே த்ரில்லர், சர்வைவல், டிசாஸ்டர் (பேரழிவு) போன்ற ஜானர்களை அரைகுறையாகத் தொட்டு, எதிலும் முழுமையில்லாமல் செல்கிறது திரைக்கதை.

சுறாவைப் பிடிக்கப் போடும் திட்டங்கள், சுறாவிற்கும் காவல்துறைக்கும் இடையிலான மோதல்கள், எதிர்பாராத திருப்பங்கள் போன்றவை சிறிது சுவாரஸ்யத்தோடு, பதைபதைப்பையும் கடத்துகின்றன. மேலோட்டமாக எழுதப்பட்ட க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகளில் உள்ள தெளிவின்மையும், லாஜிக் ஓட்டைகளும் பெரிய மைனஸாக மாறவே, சாதாரண `மேன் vs சுறா படமாக மட்டுமே தேறுகிறது இந்த `அண்டர் பாரிஸ்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


