SA vs NEP : டெஸ்ட் போட்டிகள் ஆடும் ஒரு நாட்டை வீழ்த்தியே தீருவோம்! - நேபாள கேப்டன் உறுதி!

நடப்பு டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா மற்றும் நேபாளம் அணிகளுக்கிடையேயான லீக் போட்டி இன்று நடந்தது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் கடைசி பந்து வரை போராடி வெறும் 1 ரன் வித்தியாசத்தில்தான் நேபாள அணி தோல்வியைத் தழுவியிருந்தது. தென்னாப்பிரிக்க அணிக்குத் தோல்வி பயத்தைக் காட்டிவிட்ட நேபாள அணிக்குப் பலரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் போட்டிக்குப் பிறகு இரு அணிகளின் கேப்டன்களும் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தனர்.

SA vs NEP

அவர்கள் பேசியவை இங்கே,

நேபாள அணியின் கேப்டன் ரோஹித் பாடல் பேசுகையில், "நாங்கள் ஆடிய விதத்தை நினைத்துப் பெருமைகொள்கிறேன். கடைசியில் சில தருணங்களை எங்களுக்குச் சாதகமாக மாற்றத் தவறிவிட்டோம். ரசிகர்களின் அன்பிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவர்களுக்கு இந்த வெற்றியைப் பரிசளிக்க நினைத்தோம், முடியவில்லை.

SA vs NEP
இந்தத் தொடர் மூலமாக எங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளின் மூலம் கற்றுக்கொண்டவை அடுத்தடுத்த தொடர்களில் எங்களுக்குப் பெரிதாக உதவும். டெஸ்ட் ஆடும் ஒரு நாட்டை வீழ்த்த வேண்டும் என நினைத்தோம். இந்தப் போட்டியில் அது சாத்தியமாகவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான அடுத்த போட்டியில் வெற்றிக்காகக் கடுமையாக முயல்வோம்" என்றார்.

தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேசுகையில், "நாங்கள் இந்தப் போட்டியை இன்னும் கொஞ்சம் தீவிரமாக அணுகியிருக்க வேண்டும். நேபாள வீரர்கள் எங்களைப் பல சமயங்களில் அழுத்தத்திற்கு உள்ளாக்கினார்கள். அவர்கள் ஆடிய விதத்திற்குப் பாராட்டுகளைத் தெரிவித்தே ஆக வேண்டும். கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாகவே நேபாள அணி நன்றாக ஆடி வருகிறது.

South Africa
இரண்டு அணியினரும் ஒரே விடுதியில்தான் தங்கியிருக்கிறோம். அவர்கள் நற்குணம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். நட்புணர்வோடும் மரியாதையோடும் பழகுகிறார்கள். ரசிகர்கள் அன்பிற்கு அவர்கள் உரித்தானவர்களே. நேபாள கிரிக்கெட்டுக்கு இன்னும் பல சுவாரஸ்யமான நாட்கள் காத்திருக்கிறது" என்றார்.

நேபாள அணியின் செயல்பாட்டைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.