Babar Azam: ``காசு கொடுத்து பாராட்ட வைக்குறாங்க- பாபர் அசாமை விளாசிய பாக். முன்னாள் வீரர்

டி 20 உலகக்கோப்பைத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணி கனடாவுக்கு எதிரான போட்டியில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.

இருப்பினும் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியைச் சந்தித்ததால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த தோல்வியால் பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் அவர்கள் பாகிஸ்தான் வீரர்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தோல்விக்குப் பிறகு பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

pakistan players

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் பாகிஸ்தான் அணியின் தோல்விகளுக்கு கேப்டன் பாபர் அசாம்தான் முக்கிய காரணமாக இருப்பதாகவும், பாபர் அசாம், ஷாஹின் அப்ரிடி ஆகியோர் காசு கொடுத்து ஒரு தரப்பு ரசிகர்களை தங்களை விராட் கோலி, பும்ரா ஆகியோருடன் ஒப்பிட வைத்துள்ளதாகவும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய அவர், " கேப்டன் கிங் என்று பாபர் அசாம் தன்னை சுய பிரகடனம் செய்து கொள்கிறார். சில நேரங்களில் இவர்களை பும்ரா மற்றும் கோலி ஆகியோருடன் ஒப்பிடுகிறீர்கள். ஆனால் நீங்கள் நிதர்சனத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். பாபர் அசாம் நீங்கள் உங்களுடைய சொந்த வழியில் வெற்றியை பெற்றுக் கொடுக்கிறீர்களா? அணிக்காக நிற்கிறீர்களா? எதுவும் இல்லை. எனவே இது போன்ற ஒப்பீடுகள் போலியான யூடியூப் வீடியோவைத் திறந்து பார்ப்பதற்காக வேண்டுமென்றே வைக்கப்படும் தம்ப்னைல் போன்றதாகும்.

Babar Azam

சமூக வலைதளங்களில் ஒரு மோசமான விஷயம் என்னவெனில் காசு கொடுக்கும் பிரசாரங்களால் உங்களால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். முதலில் நீங்கள் போட்டியை வெல்லுங்கள், பெரிய தொடரில் வெற்றியைப் பெற்றுக் கொடுங்கள். பெரிய அணிக்கு எதிராக வெற்றியை பெற்றுக் கொடுங்கள், தனி ஒருவனாக ஃபினிஷிங் செய்து காட்டுங்கள். பின்னர் உங்களை கிங் என்று பிரகடனம் செய்யுங்கள்" என்று சல்மான் பட் விமர்சித்திருக்கிறார். மேலும் பாகிஸ்தானை விட இந்தியா ஒவ்வொரு வருடமும் முன்னேறி வருவதாகவும் அவர் பாராட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.