USA Vs IND : `சூப்பர் 8 சுற்றில் இந்தியா; பயம் காட்டிய அமெரிக்கா! - எப்படி வென்றது ரோஹித் & கோ!
நடப்பு உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது இந்திய அணி. அமெரிக்காவை வீழ்த்தி ஆடிய 3 போட்டிகளில் மூன்றையும் வென்றதன் மூலம் இது சாத்தியப்பட்டது.
அமெரிக்காவுக்கு எதிராக இந்திய அணி எளிமையாக வெல்லும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், அமெரிக்கா கொஞ்சம் பயம் காட்டிவிட்டது. கொஞ்சம் தட்டித்தடுமாறிதான் இந்திய வென்றிருக்கிறது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாதான் டாஸை வென்று சேஸிங்கை தேர்வு செய்தார். அமெரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 111 ரன்களை எடுத்திருந்தது. நியூயார்க் மைதானத்தில் இது வெற்றிபெறக்கூடிய ஸ்கோராகத்தான் தெரிந்தது. இந்திய பௌலிங்கின் ஹைலைட் அர்ஷ்தீப் சிங்தான். முதல் ஓவரை வீசினார். அதிலேயயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜஹாங்கீர், கோஸ் என டாப் ஆர்டரை சேர்ந்த இருவரும் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் நடையைக்கட்டினர்.

ஜடேஜாவைத் தவிர சிவம் துபே உட்பட அத்தனை பௌலர்களையும் ரோஹித் பயன்படுத்தினார். பெரிதாகக் கூட்டம் கூட்டமாக அமெரிக்கா விக்கெட்டுகளை விடவில்லை. சீரான இடைவெளியில்தான் விக்கெட் விழுந்துகொண்டிருந்தது. ஆனால், ரன்னும் உயரவில்லை. இந்த பிட்ச்சில் ரன் அடிக்கவும் முடியவில்லை. உருட்டி உருட்டி தட்டி ஓடி ரன்களைச் சேர்த்தனர். ஒரு வழியாக 100 ரன்களைக் கடந்துவிட்டனர். அதுவே அவர்களுக்கு பெரிய சாதனையை போல தெரிந்திருக்கும். 20 ஓவர்களில் 111 ரன்களை எடுத்திருந்தனர்.
இந்தியாவுக்கு 112 ரன்கள் டார்கெட். ஒரு அரைமணி நேரத்திற்கு எதோ அப்செட் நிகழப்போகிறதோ என்கிற பயத்தை இந்திய அணிக்கு அமெரிக்க கொடுத்தது. அமெரிக்காவில் குடியேறிவிட்ட இந்தியரான சௌரப் நேத்ரவால்கர்தான் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி விராட் கோலி அதிர்ச்சி கொடுத்தார். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான சௌரப் ஓவர் தி விக்கெட்டில் வந்து 4-5 வது ஸ்டம்ப் லைனில் பந்தை வெளியில் எடுக்க பேட்டை விட்டு எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் விராட் கோலி. இந்த உலகக்கோப்பையில் நடந்து முடிந்திருக்கும் 3 போட்டிகளிலுமே விராட் கோலி பெரிதாக சோபிக்கவே இல்லை. எல்லா போட்டிகளிலும் ஆரம்பத்திலேயே அவுட் ஆகியிருக்கிறார். அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக சௌரப் வீசிய அடுத்த ஓவரிலேயே ரோஹித் சர்மாவும் காலி. மிடில் & லெக் ஸ்டம்பில் வீசப்பட்ட பந்தை சரியாக கணிக்காமல் ஆடி கேட்ச் ஆனார்.

இந்திய ரசிகர்கள் கொஞ்சம் பதற்றம் வந்துவிட்டது. 2007 ஓடிஐ உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி அதிர்ச்சிகரமாக தோற்றிருக்கும் அதன்பிறகு ஐ.சி.சி தொடர்களில் இந்திய அணி அப்செட்களை எதிர்கொண்டதே இல்லை. நீண்ட காலம் கழித்து ஒரு அப்செட்டை நோக்கி இந்தியா நகர்கிறதோ எனும் ஐயம் எழுந்தது. நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் பண்ட் வேறு 18 ரன்களில் ஸ்டம்புகள் சிதற அவுட் ஆகி வெளியேறினார். துபேவும் சூர்யகுமார் யாதவும் கூட்டணி சேர்ந்தனர். இருவருமே இந்த உலகக்கோப்பையில் இன்னும் சோபிக்காதவர்கள். சூர்யா அடித்தாலும் நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுக்கமாட்டார். ஆனால், சூழலை உணர்ந்து இந்த ஆட்டத்தில் இருவருமே நின்று ஆடினர். சிவம் துபே கடுமையாக சிரமப்பட்டார். பந்துகளை கனெக்ட் செய்யவே முடியவில்லை. அடியெல்லாம் வாங்கினார்.
ஆனாலும் சமாளித்து நின்றுவிட்டார். சூர்யகுமார் யாதவ் அவ்வபோது பந்துகளை நன்றாக கனெக்ட் செய்து சிக்சர்களையும் பவுண்டரிகளையும் அடித்தார். இந்த கூட்டணியை யாராலும் பிரிக்க முடியவில்லை. 19 வது ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதிப்பெற்றது.
இந்திய அணி வென்றிருப்பது பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாறியிருக்கிறது. எஞ்சியிருக்கும் ஒரே போட்டியில் அமெரிக்கா அயர்லாந்திடம் தோற்க வேண்டும். அயர்லாந்தை பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும். இதெல்லாம் நடந்தால் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிப்பெறும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


