USA Vs IND: `லேட்டாச்சுன்னா 5 எக்ஸ்ட்ரா ரன்கள்!; அது என்ன Stop Clock விதிமுறை?
இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளுக்கிடையேயான நேற்று நியூயார்க்கில் நடந்திருந்தது. இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.
அமெரிக்கா செய்த ஒரு தவறுக்காக அவர்களுக்கு பெனால்டி வழங்கும் வகையிலேயே இந்த 5 ரன்கள் வழங்கப்பட்டது. Stop Clock விதிமுறையின் அடிப்படையில்தான் அமெரிக்காவுக்கு பெனால்டி வழங்கப்பட்டிருக்கிறது. அது என்ன?
நேர விரயம் இல்லாமல் ஒரு திரைப்படத்தை பார்க்கும் நேரத்திலேயே டி20 போட்டிகளை பார்த்துவிடலாம் என்பதுதான் அதன் சிறப்பம்சமே. ஆனால், காலப்போக்கில் டி20 போட்டிகளே 4 மணி நேரம் வரைக்கும் இழுக்க ஆரம்பித்தது. இது ஆட்டத்தின் மீதான சுவாரஸ்யத்தையும் ஈர்ப்பையும் குறைக்க ஆரம்பித்தது. இதை சரிகட்டும் வகையில்தான் ஐ.சி.சி Stop Clock என்ற விதிமுறையை கொண்டு வந்தது. அதாவது, பௌலிங் செய்யும் அணி ஒவ்வொரு ஓவர் முடிந்த பிறகும் அடுத்த ஓவரை வீச 60 நொடிக்குள் தயாராக வேண்டும். மைதானத்தில் உள்ள பெரிய திரையில் ஸ்டாப் க்ளாக் பாணியில் நேரம் ஓடிக்கொண்டிருக்கும். இதன் மூலம் ஆட்டத்தை வேகப்படுத்தலாம் என்பதே எண்ணம்.
ஒரு ஆட்டத்தில் பௌலிங் செய்யும் அணிக்கு இரண்டு முறை எச்சரிக்கை கொடுக்கப்படும். அதாவது, இரண்டு முறை அந்த 60 நொடி கெடுவைத் தாண்டினாலும் எச்சரிக்கை மட்டுமே வழங்கப்படும். மூன்றாவது முறையும் அதே தவறு நடக்கும்பட்சத்தில்தான் பெனால்டியாக 5 ரன்கள் வழங்கப்படும். இந்த விதிமுறை கடந்த டிசம்பரில் பரிச்சார்த்த முறையில் அமல்படுத்தப்பட்டு ஏப்ரல் முதல் முழுமையாக அமலுக்கு வந்திருக்கிறது.
அமெரிக்க அணிக்கு நேற்று இரண்டு முறை எச்சரிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது முறையும் ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையில் 60 நொடிக்கு மேல் எடுத்துக் கொண்டதால்தான் 16 வது ஓவருக்கு முன்பாக இந்திய அணிக்கு 5 ரன்கள் இலவசமாக வழங்கப்பட்டது. நடப்பு உலகக்கோப்பையில் இந்த விதியின் அடிப்படையில் தண்டிக்கப்படும் முதல் அணி அமெரிக்காதான்.

அமெரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டுவர்ட் லா இதைப்பற்றி பேசுகையில், கடந்த போட்டிகளிலுமே எங்களுக்கு இது சம்பந்தமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் இந்த விதிமுறையைப் பற்றி பேசிக்கொண்டுதான் இருந்தோம். அமெரிக்க அணி எதையும் கற்றுக்கொள்ளும் காலக்கட்டத்தில் இருக்கிறது. நாங்கள் இந்த விதிமுறை சார்ந்த விஷயத்தில் இன்னும் சரியாக செயல்பட வேண்டும். சமீபத்தில் ஆடிய வங்கதேசம், கனடாவுக்கு எதிரான தொடர்களில்தான் இந்த விதிமுறை அமலுக்கு வந்தது. வீரர்கள் இன்னும் இந்த விதிமுறைக்கு பழக்கப்படவில்லை. அவர்களின் மனதில் அது அழுத்தமாக பதியவில்லை. என கூறியிருந்தார்.

இந்த விதிமுறை பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


