USA Vs IND: `சிவம் துபே டிராப் செய்யப்படுவாரா? - ரோஹித் என்ன முடிவெடுப்பார்?
நடப்பு டி20 உலகக்கோப்பையின் முதல் சுற்றில் இந்திய அணி இன்று தனது மூன்றாவது போட்டியில் அமெரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியை இந்திய அணி வென்றால் அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றம் இருக்குமா, குறிப்பாக சிவம் துபே ப்ளேயிங் லெவனில் இருப்பாரா எனும் கேள்வி எழுந்திருக்கிறது.
இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளையும் வென்றிருக்கிறது. அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான அந்தப் போட்டிகளில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை. ரோஹித் சர்மாவின் முதல் சாய்ஸ் ப்ளேயிங் லெவனிலேயே சிவம் துபேவுக்கு இடம் கிடைத்திருந்தது. ஆனால், கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டாரா என்பதுதான் இப்போதைய கேள்வி. முதல் போட்டியில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் போட்டியில் நம்பர் 5 இல் வந்தார். கடைசிக்கட்டத்தில்தான் வந்தார். இரண்டு பந்துகளை மட்டும்தான் எதிர்கொள்ள முடிந்தது. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக நல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த போது 12 வது ஓவரில் உள்ளே வந்தார். அவருக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தது.
ஒன்று செட்டில் ஆகி கடைசி வரை நின்று ஆடுவது அல்லது அவரது ஸ்டைலில் ரிஸ்க் எடுத்து இரண்டு மூன்று சிக்சர்களை அடித்து அவுட் ஆகினாலும் பரவாயில்லை என ஆடுவது. துபேவால் இரண்டையுமே செய்ய முடியவில்லை. 9 பந்துகளில் 3 ரன்களை எடுத்து மோசமாக அவுட் ஆனார். பேட்டிங் சொதப்பல் என்றால் பீல்டிங் அதைவிட சொதப்பல். முகமது ரிஸ்வான் ஆரம்பத்திலேயே ஒரு கேட்ச்சை கொடுத்திருப்பார். 119 ரன்களை டிஃபண்ட் செய்கிற அந்தப் போட்டியில் அந்த கேட்ச் வாய்ப்பை மோசமாகத் தவறவிட்டிருந்தார். ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை தோற்றிருந்தால் சிவம் துபே பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும்.

இந்த விஷயங்கள்தான் அவர் அணியில் நீடிக்க வேண்டுமா எனும் கேள்வியை உண்டாக்கியிருக்கிறது. சிவம் துபேவை ஒரு ஆல்ரவுண்டராகவும் பார்க்கிறார்கள். ஆனால், அவர் பந்துவீச வேண்டிய தேவையே இந்திய அணிக்கு இருப்பதாக தெரியவில்லை. முதல் இரண்டு போட்டிகளிலும் ஒரு ஓவர் கூட வீசவில்லை. பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப், ஹர்திக் என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். 6 வது பந்துவீச்சாளரான ஹர்திக்கும் நன்றாக வீசிக்கொண்டிருக்கிறார். இவர்களை தாண்டி சிவம் துபேவுக்கான தேவை எழுவது அரிதினும் அரிது. கிடைத்த வாய்ப்பில் பேட்டிங்கில் நன்றாக ஆடவில்லை. அவருடைய பௌலிங்கிற்கான தேவை இல்லை. எப்போதுமே சுமாரான பீல்டர்தான். இப்படி எல்லா பாக்ஸிலும் அடிவாங்குவதுதான் சிவம் துபேவின் பிரச்னை.
சரி, சிவம் துபேவை லெவனிலிருந்து ட்ராப் செய்வதாக இருந்தால் யாரை அணியில் சேர்ப்பார்கள்? யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் என இரண்டு வாய்ப்புகள் கண்முன்னே தெரிகிறது. இதில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டிக் அடிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. ஏனெனில், தன்னுடைய ஓப்பனிங் பார்ட்னர் விராட்தான் என்பதில் ரோஹித் இப்போது வரை உறுதியாக இருக்கிறார். மேலும், நம்பர் 3 இல் ரிஷப் பண்ட் நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறார். ஜெய்ஸ்வால் ஓப்பனராக இறங்கி கோலி நம்பர் 3 க்கு சென்றால் பண்ட் நம்பர் 4 க்கு செல்ல வேண்டும். நன்றாக ஆடிக்கொண்டிருப்பவரின் ஆர்டரை குழப்பி சிரமம் ஏற்படுத்த யாரும் விரும்பமாட்டார்கள். ஆக, சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வர அதிக வாய்ப்பிருக்கிறது.

சஞ்சு சாம்சனால் ஆங்கர் இன்னிங்ஸ் அட்டாக்கிங் இன்னிங்ஸ் என இரண்டு விதமாகவும் ஆட முடியும். ஆங்கர் இன்னிங்ஸ் ஆடும் திறனோடு இருக்கும் கோலி ஓப்பனிங் வந்துவிடுகிறார். அவர் சீக்கிரமே அவுட் ஆகும்பட்சத்தில் கீழே நின்று ஒருமுனையில் விக்கெட் விடாமல் ஆட ஆளில்லை. அந்த ரோலை சாம்சனால் செய்ய முடியும். ஆக, சாம்சன் ஒரு நல்ல தேர்வாக இருப்பார்.

ஆனால், ரோஹித் சிவம் துபேவை இந்தப் போட்டியிலேயே கழட்டிவிடுவாரா என்பதும் பெரிய கேள்விதான். இந்திய அணி தொடர்ந்து வென்றுகொண்டேதான் இருக்கிறது. வெற்றி பெற்ற லெவனை கலைக்க விரும்புவாரா என்பதும் சந்தேகமே. மேலும், ஒரே போட்டியின் செயல்பாட்டை வைத்து மட்டும் துபேவை வெளியில் வைத்தால் அது நன்றாகவும் இருக்காது. அதனால் துபேவுக்கு கூடுதலாக வாய்ப்பு கொடுக்கவும் சாத்தியம் இருக்கிறது. ஆனால், இப்போதைய நிலைமைக்கு துபேவை விட போட்டியில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வீரர்கள் வெளியே பென்ச்சில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
துபே இன்றைய போட்டியில் ஆடலாமா உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


