USA vs PAK: `பாகிஸ்தான் அணியை இப்படித்தான் வீழ்த்தினோம் - ரகசியம் பகிரும் அமெரிக்க அணியின் கேப்டன்
நடப்பு உலகக்கோப்பையின் முதல் அப்செட் நிகழ்ந்திருக்கிறது. வலுவான பாகிஸ்தானை அனுபவமற்ற அமெரிக்க அணி வீழ்த்தியிருக்கிறது.
சீறிப்பாயும் வேகப்பந்து வீச்சாளர்களையும் அனுபவமிக்க பேட்டர்களையும் கொண்ட பாகிஸ்தான் அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அமெரிக்கா அசாத்தியத்தை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்க அணியின் கேப்டனான மோனாங் படேலே இப்போது பாகிஸ்தானை எப்படி வீழ்த்தினார்கள் என்பதைப் பற்றி பேசியிருக்கிறார்.
அவர் பேசியதாவது, டாஸை வென்று முதலில் பந்துவீச வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான். முதல் அரைமணி நேரத்திற்கு பிட்ச் பௌலர்களுக்கு ஒத்துழைக்கக்கூடியதாக இருக்கும். நாங்களும் திட்டமிட்டபடியே பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை எடுத்தோம். இந்த மைதானத்தின் ஒரு பக்க பவுண்டரி சிறியது. அதை மனதில் வைத்துப் பார்க்கையில் 160 எடுக்கக்கூடிய ஸ்கோராகத்தான் தெரிந்தது.
கடைசி ஓவரில் எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. க்ரீஸில் இருந்த பேட்டர்களுக்கு நாங்கள் எந்த மெசேஜையும் சொல்லி அனுப்பவில்லை. அவர்கள் இருவருமே அவர்களின் பணியை சிறப்பாகச் செய்து முடித்துவிட்டனர்.
எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. அழுத்தமெல்லாம் பாகிஸ்தான் அணிக்குதான். ரசிகர்களிடமிருந்து எங்களுக்கு போதிய ஆதரவு இருக்காது என்பது எங்களுக்கு முன்பே தெரியும். பாகிஸ்தானுக்குதான் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருக்கும், ஆனால் அதுவே அவர்களுக்கு பின்னடைவாக இருக்கும் என்றும் எங்களுக்குத் தெரியும். கூடவே நாங்களும் சிறப்பாக ஆடினால் பாகிஸ்தானை கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளாக்க முடியும் என நினைத்தோம்.
டாஸை வென்று பவர்ப்ளேயில் நன்றாக வீசியதன் மூலம் பாகிஸ்தானுக்கு ரன் எடுக்கும் வாய்ப்பைக் கொடுக்கவே இல்லை. அழுத்தத்தோடு வந்த பாகிஸ்தான் மீது நாங்களும் அழுத்தத்தைச் செலுத்தினோம். அது எங்களுக்கு நன்றாக உதவியது.

களச்சூழலை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். ஓவர் தி விக்கெட்டில் வந்து இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கட்டர்களையும் ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளையும் சிறப்பாக வீசினால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். பாகிஸ்தான் பேட்டர்கள் அவுட் சைட் தி ஆப் ஸ்டம்பில் ஆட வைக்க வேண்டும் என நினைத்தோம். அலிகான் ஸ்டம்ப் டூ ஸ்டம்பாக வீசக்கூடியவர். அதனால்தான் அலி கானுக்கு கொடுக்காமல் சவுரப்புக்கு கொடுத்தோம். சவுரப்புக்கு இது நல்ல நாளாக அமைந்திருந்தது. நாங்களும் அவரை நம்பினோம் அதற்கேற்ப சிறப்பாக வீசிக்கொடுத்தார். என மோனாங் படேல் பேசினார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் வங்கதேசத்துக்கு எதிராக நீங்கள் தொடரை வென்றதை அதிர்ஷ்டம் என்றார்கள். இப்போது பாகிஸ்தானை வீழ்த்தியதையும் அதிர்ஷ்டம் என்பார்களே? என இப்படி ஒரு கேள்வியும் மோனாங் படேலிடம் கேட்கப்பட்டது. அதற்கும் ஒரு நச் பதிலை மோனாங் கூறினார் .
அவர் கூறியதாவது, வெளியில் இருப்பவர்கள் பேசுவதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை. எங்களின் திறன் என்னவென்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் எவ்வளவு உழைத்திருக்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்.
ஒவ்வொரு போட்டியாக கவனம் குவித்து ஆடி வருகிறோம். உணர்வுகளை சமநிலையில் வைத்திருக்க முயல்கிறோம். இந்த வெற்றிக்காக இந்த ஒரு நாள் மட்டும் கொண்டாடிவிட்டு நாளை உற்சாகமாக அடுத்த சவாலுக்குத் தயாராகிவிடுவோம். என்றார்.

அமெரிக்க அணி அடுத்தப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா பாகிஸ்தானை வீழ்த்தியதைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட்டில் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


