Mitchell Starc: ``என் சம்பளத்தைப் பத்தி கிண்டல் பண்ணாங்க. ஆனா... - ஸ்டார்க் பளிச்!
2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது.
கொல்கத்தா அணியின் இந்த வெற்றிக்கு மிட்செல் ஸ்டார்க் மிக முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஐபிஎல் தொடரின் மினி ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு வாங்கப்பட்டபோது கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். தொடக்கத்தில் சில போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு வழங்கப்பட்ட தொகையை வைத்து கேலி செய்யப்பட்டது.
ஆனால் நேற்று சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப் பெற்றிருந்தார். ஓப்பனரான அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அதுபோக இக்கட்டான சூழலில் நின்று ராகுல் திரிபாதியின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். முதல் தகுதிச்சுற்றுப் போட்டியிலும் பவர்ப்ளேக்குள்ளாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்தப் போட்டியிலும் அவர்தான் ஆட்டநாயகன்.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு பிறகு பேசிய மிட்செல் ஸ்டார்க், “கொல்கத்தா அணிக்கு இந்த சீசன் மிகவும் சிறப்பாக அமைந்தது. எங்கள் அணியில் சிறந்த பந்து வீச்சாளர்களும், பேட்டர்களும் இருந்தனர். நாங்கள் ஒரு நிலையான அணியாக இருந்தோம். எங்களுடைய பவுலிங் யூனிட் தங்களிடம் இருக்கும் விக்கெட் எடுக்கும் திறமை மொத்தத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இதுவே எங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. என்னுடைய சம்பளம் குறித்து நிறைய கேலி செய்யப்பட்டது. நான் நல்ல அனுபவம் உள்ளவனாக இருக்கிறேன். எனவே இவற்றையெல்லாம் சமாளிக்க முடிந்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு இது மிகவும் வேடிக்கையாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


