மிரள வைக்கும் சன் ரைசர்ஸ்... அன்று, ஜெயசூர்யா... இன்று, பேட் கம்மின்ஸ்..!
சன் ரைஸர்ஸ் ஐதராபாத் களத்துக்கு வந்தாலே... 1996 உலகக் கோப்பைப் போட்டிதான் நினைவுக்கு வருகிறது. களத்துக்கு வந்த நொடியிலிருந்தே வெளுத்து வாங்க ஆரம்பித்து, எதிரணியை நிலைகுலைய வைக்கும் பேட்டிங் டெக்னிக்கை அப்போது கையாண்டது, இலங்கை அணி. அதற்கு முன்புவரை, அந்த அணி எங்கிருக்கிறது என்பதே தெரியாதிருந்த நிலையில், அந்தத் தடவை, உலகக் கோப்பையைக் கைப்பற்றியது இலங்கை.
அன்று, முக்கியமான சூத்ரதாரி... ஆல் ரவுண்டர் ஜெயசூர்யா. தொடக்க ஆட்டக்காரராக துடுப்புடன் அவர் கிரவுண்டுக்குள் வந்தாலே... எதிரணிக்கு கிலிதான். தூக்கியதெல்லாம் ஃபோர்... சிக்ஸர்கள்தான். கிட்டத்தட்ட அதே டெக்னிக்கைத் தற்போது கையில் எடுத்து, ஐ.பி.எல் வரலாற்றிலேயே சாதனை அளவாக 287 ரன்களைக் குவித்து அசர வைத்துள்ளது சன்ரைசர்ஸ் அணி. கிட்டத்தட்ட எல்லாப் போட்டிகளிலுமே `பவர் ப்ளே எனப்படும் ஆரம்ப ஆறு ஓவர்களில் கிலி கிளப்புகிறார்கள், சன் ரைசர்ஸ்.
அன்று ஒரு ஜெயசூர்யா என்றால், இன்று ஒரு பேட் கம்மின்ஸ். ஆம், சன்ரைஸர்ஸின் கேப்டனாக வகுக்கும் வியூகங்களும்... பேட்டிங் வேகமும் அசரடிக்கின்றன. அத்தனை அணிகளுமே மிரட்சியோடு பார்த்து நிற்கின்றன. சன்ரைசர்ஸ் அணியின் கடந்த சில சீசன்களைப் பார்த்தவர்களுக்கு இந்த எழுச்சி, கொஞ்சம் ஆச்சர்யமே!
2013 தான் சன்ரைசர்ஸ் அணியின் முதல் சீசன். நான்காவது சீசனில் சாம்பியன். ஐ.பி.எல் முழுவதும் ஒன்றிரண்டு பெரிய அணிகளை மையமாக வைத்து சுற்றிச்சுழன்றுகொண்டிருக்கையில், சன்ரைசர்ஸ் திடீரென எழுச்சியடைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த எழுச்சியை சன்ரைசர்ஸ் அணியால் ஒரு கட்டத்துக்கு மேல் தக்கவைக்க முடியவில்லை. 2018-19 வரை சீராக ஆடிக்கொண்டிருந்த அணி, அதற்கு மேல் தடுமாறத் தொடங்கியது. அணிக்கும் அணி நிர்வாகத்துக்கும் முரண்பாடுகள் உண்டாகத் தொடங்கின. ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் அணியின் நிர்வாகமும் உரிமையாளரும் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. அப்படிச் செய்தால், அது கிரிக்கெட்டை மையப்படுத்தியதாக இருக்காது. வெறுமனே ஈகோ சார்ந்தே இருக்கும். சன்ரைசர்ஸ் விஷயத்தில் இதுதான் நடந்தது.

ஒரு சீசனில் தொடர் தோல்விகளைச் சகித்துக்கொள்ளாத சன்ரைசர்ஸ் நிர்வாகம், கேப்டன் டேவிட் வார்னரை பென்ச்சில் உட்கார வைத்தது. டுவல்த் மேன் (12வது வீரர்) என்கிற வகையில் தண்ணீர் பாட்டில்களைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார். அதையும் விரும்பாத நிர்வாகம், கேலரியில் உட்கார வைத்துக் கொடி ஆட்ட வைத்தது. இந்த மாதிரியான தலையீடுகளும் குழப்பங்களும்தான் சன்ரைசர்ஸ் அணியை கடந்த 2-3 சீசன்களில் பாதாளத்தில் தள்ளியது.
இப்போது... கொஞ்சம் விழித்துக்கொண்டு, சுதாரித்திருக்கிறார்கள். மினி ஏலத்தில், பேட் கம்மின்ஸை 20 கோடிக்கும் அதிக ரூபாயைக் கொடுத்து எடுத்தார்கள். கம்மின்ஸ்... ஒரு சாதனை கேப்டன். உலகக்கோப்பையை வென்றவர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றவர். ஆஷஸை கோப்பையை வென்றவர். கரியரில் அவருக்கு இது ஒரு பொற்காலம். அப்படியொரு சமயத்தில் சன்ரைசர்ஸ் கேப்டனாக்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் அணியிடம் நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் அளவுக்கு நெஞ்சுரம் இருந்ததில்லை. காரணம், அவர்களின் சமீபத்திய ரெக்கார்டுகள் கொடுத்த அயர்ச்சி. கம்மின்ஸ் முதலில் மாற்றியது இதைத்தான். `இங்கே ஒரு லட்சம் பேர் கூடப்போகிறார்கள். மைதானமே நீல அலையாக (இந்திய அணி ரசிகர்கள்) இருக்கும். இவர்களை அமைதிப் படுத்துவதுதான் பெரும் திருப்தியாக இருக்கும் என சமீபத்தில் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையின்போது சொல்லி, அதைச் செய்தும் காட்டியவர் பேட் கம்மின்ஸ். இது ஆஸ்திரேலிய வீரர்களின் மனநிலை. தங்களுக்கு மேல் யாரும் இல்லை என நம்பக்கூடியவர்கள். எப்போதுமே நம்பர் 1 ஆக இருக்க பகீரதப் பிரயத்தனங்களைச் செய்யக்கூடியவர்கள். பேட் கம்மின்ஸ் ஒரு ஆஸ்திரேலிய வீரரின் மனநிலையை மொத்த சன்ரைசர்ஸ் அணிக்குள்ளும் புகுத்தினார். வீரர்களுக்கு அவர்களின் விருப்பப்படி ஆட சுதந்திரம் கொடுத்தார்.

`எல்லா அணிகளும் நம்மைப் பார்த்துப் பதற்றப்படுகின்றன. சில அணிகள் மைதானத்திற்குள் வருவதற்குள்ளேயே நம்முடைய அணுகுமுறையைப் பார்த்து, தோல்வி மனநிலைக்குச் சென்றுவிடுகின்றன. இதை, அப்படியே தக்கவைத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் பேசி, ஒட்டுமொத்த அணியையுமே உளவியல்ரீதியாகத் தொட்டு, `மெச்சிக்கொள்ளும் உயரத்தில் இருக்கிறோம் என ஒவ்வொருவரையுமே நம்பவைக்கிறார் கம்மின்ஸ். இதுதான் அந்த அணியில் ஏற்பட்டிருக்கும் பெரிய எழுச்சிக்குக் காரணம்.
எல்லா அணியிலுமே ஏதோ ஒரு சீசனில் ஒட்டுமொத்த அணியுமே சிறப்பாகச் செயல்படும் சன்ரைசர்ஸுக்கு இந்த சீசன் அப்படியொரு சீசனாக இருக்கிறது. சன்ரைசர்ஸ் வீரர்கள் பேட்டை வீசினாலே சிக்சர்கள்தான்!
ஏற்கெனவே உலக அளவில் எல்லாக் கோப்பைகளையும் வென்றுவிட்ட கம்மின்ஸ், ஐ.பி.எல் கோப்பையையும் வென்றுவிடுவாரோ என்பதுதான் இப்போதைக்கு மற்ற அணி ரசிகர்களின் ஐயமாக இருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


