Pat Cummins: `அமரேந்திர பேட்ரிக் ஜேம்ஸ் கம்மின்ஸ் எனும் நான்..! - கம்மின்ஸ் எப்படிச் சாதிக்கிறார்?

"அபிஷேக் சர்மாவுக்கு ஓவர் கொடுக்கலாம் என முடிவெடுத்தது பேட் கம்மின்ஸ்தான். அது ஒரு ரிஸ்க். எதுவாக இருந்தாலும் பார்த்துவிடலாம் என்கிற மனநிலையில்தான் அந்த முடிவை எடுத்தார். அதற்கான க்ரெடிட்டை பேட் கம்மின்ஸூக்குதான் கொடுக்க வேண்டும்" என்கிறார் சன்ரைசர்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் சைமன் ஹெல்மோட்.
Cummins

சேப்பாக்கத்தில் சென்னை அணியின் ஸ்பின்னர்கள் கூட இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை. அதற்கு சூழலும் ஒத்துழைக்கவில்லை என்பது வேறு கதை. ஆனால், சன்ரைசர்ஸின் ஸ்பின்னர்கள் ராஜஸ்தானுக்கு எதிராக அசத்திவிட்டார்கள். ஷபாஷ் அகமதுவும் அபிஷேக் சர்மாவும் இணைந்து 8 ஓவர்களை வீசி 47 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். மேட்ச் வின்னிங் ஸ்பெல்! இவ்வளவு தைரியமாக ஸ்பின்னர்களை நம்பி ஓவர் கொடுத்த பேட் கம்மின்ஸூக்குதான் அத்தனை பாராட்டுகளும் சென்று சேர வேண்டும். இந்த முடிவை எடுப்பதற்கு பின்னால் நிறைய சிக்கல்கள் இருந்தது.

முதலில் குறிப்பிட்டதை போல சேப்பாக்கத்தில் இந்த சீசனில் சென்னை அணியின் ஸ்பின்னர்களே முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. மேலும், இந்தப் போட்டியிலேயே ராஜஸ்தான் அணியின் சார்பில் அஷ்வின், சஹால் என இரண்டு பெரும் அனுபவமிக்க ஸ்பின்னர்கள் சேர்ந்து 8 ஓவர்களை வீசி 77 ரன்களை வாரி கொடுத்திருந்தனர். பேட் கம்மின்ஸ் இதையெல்லாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும், ஷபாஷூக்கும் அபிஷேக்கிற்கும் நம்பி ஓவர்களை கொடுக்கிறார்.

Pat Cummins
இத்தனைக்கும் இருவரும் முழுநேர ஸ்பின்னர்கள் கிடையாது. ஷபாஷ் அகமது ஆல்ரவுண்டர். எல்லா போட்டிகளிலும் நான்கு ஓவரை வீசுபவர் அல்ல. அபிஷேக் சர்மா பார்ட் டைமர். இந்த சீசனில் இதற்கு முன்பாக வெறும் 3 ஓவர்களைத்தான் வீசியிருக்கிறார். அப்படிப்பட்டவரை நம்பி 4 ஓவர்களைக் கொடுக்கிறார்.
Cummins

இத்தனைக்கும் இது நாக் அவுட் போட்டி. இதுதான் தலைமைத்துவம். முக்கியமான போட்டியில் இக்கட்டான கட்டத்தில் துணிச்சலாக தெளிவாக முடிவெடுக்கும் திறன் பேட் கம்மின்ஸிடம் இயல்பிலேயே இருக்கிறது. உலகக்கோப்பைக்கு கை உடைந்த ஹெட்டை அழைத்து சென்று இறுதிப்போட்டியில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆட வைத்ததை போன்றதுதான் இங்கே அபிஷேக் சர்மாவிற்கு ஓவர் கொடுத்ததும்.

பேட் கம்மின்ஸ் இந்த சீசனின் ஆச்சர்ய கேப்டன். கடந்த சில சீசன்கள் முரட்டுத்தனமாக சொதப்பிக் கொண்டிருந்த ஒரு அணிக்கு தலைவனாக பொறுப்பேற்று சாதித்திருக்கிறார். அவரின் பலமே காரியங்களை சிக்கலாக்கிக் கொள்ளாமல் இயல்பாக வைத்துக் கொள்வதுதான்.

"பேட் கம்மின்ஸ் யதார்த்தங்களின் மீது நம்பிக்கையுடையவர். ரொம்பவே பணிவானவர். சக வீரர்களின் மீது மரியாதையும் பரிவும் கொண்டவர். டீம் மீட்டிங்கெல்லாம் வைத்து நேரத்தை வீணாக்கமாட்டார். இந்தப் போட்டிக்கு முன்பாக வெறும் 35 வினாடிகள்தான் டீம் மீட்டிங்கை நடத்தினார். எல்லாரிடமும் தனித்தனியாக என்ன தேவை என்பதை பேசிவிடுவார். அவருக்கு தேவையான தரவுகளை மட்டும் அனலிஸ்ட்களிடமிருந்து பெற்றுக் கொள்வார். அவரிடம் சிக்கலே இருக்காது."
Cummins

இதையும் சன்ரைசர்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் சைமன் ஹெல்மோட் தான் கூறினார். இந்த சீசனின் ஒரு போட்டியின் முக்கியமான கட்டத்தில் புவனேஷ்வர் குமார் பந்துவீசப் போகிறார். பேட் கம்மின்ஸ் அவரை நோக்கி ஓடுகிறார். புவனேஷ்வர் குமாரிடம் ஆர் யூ ஓகே? என ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார். ஐம் ஓகே... என புவனேஷ்வர் பதில் சொல்ல, பேட் கம்மின்ஸ் பதிலே பேசாமல் அவரின் இடத்திற்கு பீல்ட் செய்ய சென்றுவிட்டார். தன்னுடைய வீரர்களுக்கு உதவி தேவையெனில் செய்யக்கூடிய இடத்தில் அவர் நிற்பார். ஆனால், அவர்களால் தனியாக சுயாதீனமாக செயல்பட முடியுமெனில் அதற்கு எந்த மறுப்பையும் சொல்லாமல் சுதந்திரமாக விட்டுவிடுவார். இதுதான் கம்மின்ஸ் ஸ்டைல். தலைமைத்துவம் என்பது எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து அதிகாரத்தை நிலைநிறுத்தப் பார்க்கும் அவசரத்தில் இல்லை. பட்டாம்பூச்சிகளை அதன்போக்கில் பறக்க விடுவதை போல எல்லா வீரர்களையும் அவரவர்களின் வழி சுதந்திரமாக செயல்பட வைப்பதுதான் சாலச்சிறந்தது. அதாவது, அதிகாரத்திலிருந்து கொஞ்சம் விடுபட்டு நிற்பதுதான் அதிகாரத்தில் இருப்பவருக்கு அழகு.

மேலும், மனரீதியாகவே அணிக்குள் புது உத்வேகத்தை பாய்ச்சியிருக்கிறார். நாம் ஒரு அணியாக யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை. சொல்லப்போனால் நாம் தான் உயரத்தில் இருக்கிறோம். மற்றவர்கள் வேண்டுமானால் நம்மை அண்ணாந்து பார்க்கட்டும் என்கிற மனநிலையை அணிக்குள் ஊட்டியிருக்கிறார். சீசனை தொடங்குவதற்கு முன்பே அணியை அக்ரசிவ்வான மனநிலைக்கு மாற்றுவேன் என கூறிவிட்டுதான் தலைமைப் பொறுப்பை ஏற்றார். எல்லா அணிகளும் நம்மைப் பார்த்து அச்சமுறுகிறார்கள். பதற்றமடைகிறார்கள். சில அணிகள் பவுண்டரி லைனுக்குள் கால் எடுத்து வைக்கும்போதே தோல்வியுற்ற மனநிலையில்தான் வருகிறார்கள். சீசனுக்கு நடுவே ஒரு போட்டியின் முடிவுக்குப் பிறகு பேட் கம்மின்ஸ் இப்படியாக ட்ரெஸ்ஸிங் ரூமில் பேசியிருந்தார். உண்மைதான், அவர்களின் தடாலடி அணுகுமுறையும் ஆக்ரோஷ ஆட்டமும் பல அணிகளையும் மிரள வைத்திருக்கிறது.

சன்ரைசர்ஸின் கடைசி லீக் போட்டியின் போது ஹர்ஷா போக்ளே பேட் கம்மின்ஸிடம் ஒரு கேள்வி கேட்டார். ராஜஸ்தான் அணி ஆடும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் உங்கள் அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறி முதல் தகுதிச்சுற்றில் ஆடுமே! என்றார். அதற்கு பேட் கம்மின்ஸ் Thats Shame for Us (எங்களுக்கு அது அவமானம்) என பதில் கூறியிருப்பார். இதைவிட ஒரு கேப்டன் தன்னுடைய அணியை எந்த உயரத்தில் கொண்டு வைக்க முடியும்? ஒட்டுமொத்தமாக அணியை தாண்டி ஒவ்வொரு வீரரையும் தனிப்பட்ட முறையில் பெருமிதமாக உணர வைக்கிறார்.

"அபிஷேக் சர்மா துணிச்சலாக ஆடுகிறார். அவரின் ஆட்டம் அற்புதமாக இருக்கிறது. நல்லவேளை பௌலராக நான் அவருக்கு எதிரில் நின்று பந்துவீச வேண்டியதெல்லாம் நிகழாமல் போனதே!" எனப் பேசியிருக்கிறார். உலகக்கோப்பையை வென்ற ஒரு கேப்டன் இந்திய உள்ளூர் வீரரைப் பற்றி இப்படி பேசினால் அது அந்த வீரருக்கு எத்தகைய உற்சாகத்தை கொடுக்கும்? புவனேஷ்வர் குமார், நடராஜன், உனத்கட் ஆகியோரெல்லாம் அணியில் கொண்டிருப்பது கனவு போன்றது என அவர்களை பெருமைப்படுத்தியிருக்கிறார்.

Cummins

களத்தில் சூழலுக்கேற்ற வகையில் சமயோஜிதமாக எடுக்கும் முடிவுகளை விட அணிக்கு மனரீதியாக பேட் கம்மின்ஸ் ஒரு மாற்றத்தை கொடுத்திருக்கிறது அல்லவா? அதுதான் ரொம்பவே முக்கியம்.

SRH
களத்தில் சூழலுக்கேற்ற வகையில் சமயோஜிதமாக எடுக்கும் முடிவுகளை விட அணிக்கு மனரீதியாக பேட் கம்மின்ஸ் ஒரு மாற்றத்தை கொடுத்திருக்கிறது அல்லவா? அதுதான் ரொம்பவே முக்கியம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.