Ashwin: ``சன்ரைசர்ஸ் ஓனர் சென்னையா இருக்கலாம்... ஆனா... - சேப்பாக்கம் பற்றி அஸ்வின்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

கோப்பையை வெல்வதற்கான அந்த இறுதி யுத்தத்தில் கொல்கத்தாவை அந்த அணி எதிர்கொள்ளும். முன்னதாக, சன்ரைசர்ஸ் அணி முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் கொல்கத்தா அணியிடம் வீழ்ந்திருந்தது. அதேநேரத்தில் ராஜஸ்தான் அணி எலிமினேட்டரில் பெங்களூரு அணியை வீழ்த்தியிருந்தது. சேப்பாக்கத்தில் நடைபெறப் போகும் இந்தப் போட்டியில் ஆடப்போகும் இரண்டு அணியிலுமே தமிழக வீரர்கள் இருக்கிறார்கள்.

Ashwin

ராஜஸ்தான் அணியில் அஸ்வின் முக்கிய வீரராக இருக்கிறார். சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் போட்டி கூடுதல் சிறப்பானதாக இருக்கும். இந்நிலையில், அஸ்வின் சேப்பாக்கத்தில் ஆடப்போவதைப் பற்றி தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்திருக்கிறார்.

அஸ்வின் கூறியிருப்பவை, தகுதிச்சுற்றுப் போட்டியில் ஆடுவதற்காக சென்னைக்கு வந்திருக்கிறேன். சென்னை சேப்பாக்கம் என்னுடைய சொந்த மைதானம். இது எப்போதுமே எனக்கு ஒரு ஸ்பெஷலான இடம்தான். இங்கே எப்போதுமே நான் சிறப்பாகவும் ஆடியிருக்கிறேன். கடைசியாக சில சமயங்களில் இங்கே ஆடியபோது பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடியிருக்கிறேன். ஆக, சேப்பாக்கத்தில் ஆட ஆர்வமாக காத்திருக்கிறேன். சன்ரைசர்ஸூக்கு எதிராக ஆடும்போதும் சரி இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக ஆடும்பட்சத்தில் அப்போதும் சரி எங்களுக்கு இங்கே நல்ல ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்.

Ashwin
சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள்தான். அதனால் அவர்களுக்கும் நிறைய ஆதரவு இருக்கும். ஆனாலும், ரசிகர்கள் பிங்க் நிற ஜெர்சியில் திரண்டு வந்து எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
Ashwin

சன்ரைசர்ஸ் இந்தத் தொடரை தொடங்கியபோதே அவர்கள் இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக இருப்பார்கள் என நினைத்தேன். அவர்கள் சாம்பியன்களை போல ஆடியிருக்கிறார்கள். அதனால் எங்களுக்கிடையேயான போட்டி பயங்கர சுவாரஸ்யமாக இருக்கும். நாங்களும் எங்களின் உயர்தரமான ஆட்டத்தை வெளிக்காட்டியாக வேண்டும். என பேசியிருக்கிறார்.

இந்தப் போட்டியை முன்னிட்டு சன்ரைசர்ஸ் அணி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால், ராஜஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபடவில்லை. அகமதாபாத்திலிருந்து கிளம்பி வந்து உடனே இங்கே பயிற்சியில் ஈடுபடுவது வீரர்களை களைப்படைய செய்யும் என்பதால் ராஜஸ்தான் அணியின் பயிற்சி செஷன் ரத்து செய்யப்பட்டிருந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.