DK: `பல வேடிக்கை மனிதர்களைப் போல... - அசராத தன்னம்பிக்கைக்காரனின் கதை!
வெற்றி பெற்றவர்கள் மட்டும்தான் திறமைசாலிகள். வெற்றி பெற்றவர்கள் மட்டும்தான் கடின உழைப்பாளிகள். அவர்கள் செய்த எல்லாமும்தான் சரி. இது ஒரு கற்பிதம். இன்னமும் பெரும்பான்மை கூட்டம் இதைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறது.
வெற்றி பெற்றவர் எது சொன்னாலும் அது வேதவாக்கு. வெற்றி பெறத் தவறியவர்கள், பந்தயத்திலிருந்து வெளியேறியவர்களின் கதைகள் எங்கும் பேசப்படுவதில்லை. இங்கே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அத்தனை பேருக்கும் கிடைத்திருக்கிறதா? நிச்சயமாக இல்லை.
இங்கே இருக்கும் கடல் அலை போன்ற பெரும் கூட்டத்தின் ஒரு துளிக்குதான் வெற்றியை நோக்கி முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இங்கே தோல்வியளார்கள்தான் அதிகம். தோல்வியாளர்கள் என்பதை விட அவர்களை போராடியவர்கள் எனலாம். தான் கொண்ட லட்சியத்திற்காக எட்ட நினைக்கும் இலக்கிற்காக இடைவிடாது போராடியிருப்பார்கள். தினேஷ் கார்த்திக்கை போல!

38 வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார் தினேஷ் கார்த்திக். 20 ஆண்டுகளுக்கும் மேலான கிரிக்கெட் அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். தமிழகம் உற்பத்தி செய்ததிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய ஆகச்சிறந்த கிரிக்கெட்டர்களுள் ஒருவர். ஆனாலும், அவரின் திறமைக்கு அவரின் லட்சியத்திற்கு அவர் எட்ட நினைத்த இலக்கை நோக்கிய அவரது பயணம் தொடர்ந்துகொண்டே இருந்தது. அதற்காக அவரைக் கொண்டாடாமல் இருக்க முடியுமா? அவரின் கரியரிலிருந்து ஊக்கமேற்றிக் கொள்ள எந்தச் செய்தியும் இல்லையென்று எடுத்துக்கொள்வதா? கண்டிப்பாக அப்படியெல்லாம் இல்லை.

தினேஷ் கார்த்திக் ஒரு ஜாம்பவான். விடாமல் போராடுவதற்கான ஊக்கத்தையும் மீண்டும் மீண்டும் திறக்காத கதவுகளை தட்டி திறப்பதற்கான உறுதியையும் நிச்சயம் அவரின் கரியரை கவனிப்பதன் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.
அபிஷேக் நாயரின் வருகைக்குப் பிறகுதான் தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கையே மாறியது. தினேஷ் கார்த்திக்கிற்கு அதுவரை இல்லாத வகையில் அபிஷேக் நாயர் பயிற்சியளித்தார். அவர் அதிகாலை இரண்டு மணிக்கே எழுந்துவிடுவார்கள். காடுகளிலும் மலைகளிலும் ஓடி பயிற்சி செய்வார்கள். டென்னிஸ் வீரர்களைப் போல பல நகரங்களுக்கும் சென்று விதவிதமான சூழல்களில் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டார்கள். தினேஷ் கார்த்திக்கின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் இப்படி பேசியிருந்தார்.

அதிகாலை 2 மணிக்கு காடுகளிலும் மலைகளிலும் ஓடியதும் அபிஷேக் நாயர் முன் தன்னை புதுப்பித்துக் கொள்ள போய் நின்றபோதும் தினேஷ் கார்த்திக்கிற்கு வயது 18 அல்ல. அவர் புதுமுகம் அல்ல. அப்போது அவருக்கு 32 வயது. இந்திய அணிக்கு ஏற்கனவே ஆடிவிட்டார். 2007 டி20 உலகக்கோப்பையை வென்ற அணியில் இருந்துவிட்டார். 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியில் இருந்துவிட்டார். தமிழ்நாடு அணிக்காக கேப்டனாக எக்கச்சக்க வெற்றிகளைப் பெற்றிருந்தார். அப்படியிருந்தும் தன்னை புதுப்பித்துக் கொள்ள மீண்டும் ஜீரோவிலிருந்து தொடங்கினார். கடுமையான பயிற்சி. முதல் வாய்ப்புக்காக ஏங்கி நிற்கும் இளைஞனைப் போன்ற உழைப்பு. விளைவு, இந்திய அணிக்குள் மீண்டும் வந்தார். இலங்கைக்கு சென்று இறுதிப்போட்டியின் கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து நிதாஷ் டிராபியை வென்று கொடுத்தார். இந்த மீட்சிதான் தினேஷ் கார்த்திக்கின் தனி அடையாளம்.
எங்கே இருக்கிறார் என்ன செய்துகொண்டிருக்கிறார் என எதுவுமே தெரியாது. ஆனால், இந்திய அணிக்குள் நுழைவதற்கான வேலையை எங்கோ இருந்துகொண்டு சரியாக செய்துகொண்டிருப்பார். பெரிய தொடர்களின் போது சரியாக தேர்வுக்குழுவின் ரேடாரில் இவரின் பெயரும் கட்டாயம் இடம்பெற்றுவிடும்

நடப்பு சீசனில் கூட பெங்களூரு அணிக்காக ஃபினிஷராக கலக்கியிருந்தார். டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கும் இருப்பாரா எனும் எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டார். தோனியை என்னால் பேசி ஒத்துக்கொள்ள வைக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால், தினேஷ் கார்த்திக்கை உலகக்கோப்பையில் ஆட ஒத்துக்கொள்ள வைக்க முடியுமென நினைக்கிறேன். என்று ரோஹித் சர்மாவே பேசியிருந்தார். நகைச்சுவையாக ரோஹித் கூறியிருந்தாலும் இந்திய அணியின் தேர்வுக்குழுவின் பரீசிலனையில் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இருந்தது என்பதை மறுக்கவே முடியாது. வயதையும் வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு மட்டுமே அவரை தேர்வு செய்யாமல் விட்டிருப்பார்கள்.
ஒவ்வொரு முறை வாய்ப்பு கிடைக்காத போதும் எங்கேயும்.தேங்கிவிடாமல் ஓடிக்கொண்டே இருப்பார். உடற்தகுதியுடன் இருந்தால் உள்ளூர் போட்டிகளில் தவறாமல் ஆடுவார். உடற்தகுதி இல்லையெனில் கமெண்டேட்டராக கலக்கிக் கொண்டிருப்பார். ஆனால், எப்படியோ கிரிக்கெட்டுடனேயேதான் இயங்கிக் கொண்டிருப்பார். தன்னுடைய கரியரின் எந்தவொரு கட்டத்திலும் சரி இனிமேல் நாம் போராட வேண்டாம். நமக்கு ஒரு இடம் கிடைத்துவிட்டது என சௌகரியமாக இருக்கும் நிலைக்கு அவர் வரவே இல்லை. ஆனாலும் தனக்கான போராட்டத்துடன் அடுத்தக்கட்ட இளைஞர்களை வளர்த்தெடுப்பதிலும் தீவிரமான ஆர்வத்தைக் காட்டியிருந்தார். அபராஜித், இந்திரஜித், ஷாரூக்கான், விஜய் சங்கர் வாஷிங்டன் சுந்தர், சித்தார்த் மணிமாறன் என பல தமிழக வீரர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை வழங்கி வழிநடத்தி அவர்கள் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல உறுதுணையாக இருந்திருக்கிறார். வாஷிங்டன் சுந்தரெல்லாம் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் ஆட தொடங்கிய காலத்தில் பிறந்திருக்கவேமாட்டார். ஆனால், அவரின் தோளிலும் கைப்போட்டு அறிவுரை சொல்லி அவர் விக்கெட் எடுத்தால் துள்ளிக் குதித்துக் கொண்டாடும் இடத்தில் தினேஷ் கார்த்திக் இருந்தார்.

தினேஷ் கார்த்திக்கின் பயணமும் போராட்டமும் நீண்ட நெடியது. தோனி இந்திய அணிக்கு அறிமுகமாவதற்கு முன்பே தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு அறிமுகமாகிவிட்டார். கங்குலி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவரின் கண்ணில் சிக்கியவர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். தோனி தனக்கு கொடுத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி தன்னை அணிக்குள் நிலைப்படுத்திக் கொண்டார். தினேஷ் கார்த்திக் இந்த விஷயத்தில் தடுமாறினார். ஆனாலும் எந்த காலத்திலும் அவர் போராட்டத்தைக் கைவிடவில்லை. கடைசி வரைக்கும் தன்னை நாளுக்கு நாள் மெருகேற்றிக் கொண்டு அடுத்தடுத்த வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தார்.

தினேஷ் கார்த்திக்கின் கரியர் சொல்லிக் கொடுக்கும் பாடம் இதுதான். இலக்கை அடைவதில் கிடைக்கும் திருப்தியை விட மேற்கொள்ளும் பயணம் கொடுக்கும் அனுபவங்கள்தான் மேலானது!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


